
அண்மையில் சீனாவின் நான்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் 110 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் 16 வயதான அகில ரவிஷங்க வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இரத்தினபுரி சீவளி கல்லூரியைச் சேர்ந்த அகில 13.99 நிமிடத்தில் போட்டியை நிறைவு செய்து தனது தனிப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார். ஜனசக்தி நிறுவனமானது, தமது பின்தங்கிய விளையாட்டு வீரர்களுக்கான அனுசரணை திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் அகில மாணவரை தேர்ந்தெடுத்திருந்தது. அன்று முதல், இந் நிறுவனமானது இளம் மெய்வல்லுநர்களுக்கு தமது விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஆதரவினை வழங்கி வருகிறது.
ஜனசக்தி கிராமிய விளையாட்டு வீரர்களுக்கான அனுசரணை திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வீரர்களுக்கும் மாதாந்த அனுசரணை மற்றும் தங்கள் தனிப்பட்ட திறமைகளுக்கேற்ப ஊக்குவிப்பு தொகையும் வழங்குகின்றது. இதற்கு மேலதிகமாக, ஜனசக்தியானது இவ் வீரர்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டல்களையும், இலங்கையின் முன்னாள் உயர்மட்ட விளையாட்டு வீரர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கச் செய்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் உளவியல் ஊக்குவிப்புக்களையும் வழங்குகின்றது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு வெளியூர் பயணங்களுக்கான வசதிகளையும் செய்து கொடுக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றது தொடர்பாக அகில கருத்து தெரிவிக்கையில், 'இந்த வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வெள்ளி பதக்கம் எனக்கு மிகவும் விசேடமானது. நான் நன்றி கூற வேண்டிய பலர் உள்ளனர். எனது பயிற்றுவிப்பாளர் இந்திக ஜயசிங்கவிற்கும், தொடர்ச்சியாக ஆதரவினையும் வழிகாட்டல்களையும் வழங்கிய ஜனசக்தி நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவிக்கிறேன்' என்றார்.
