2025 ஜூலை 19, சனிக்கிழமை

கொழும்பு சென்.பீற்றர்ஸ் அணி இரண்டாவது தடவையாகச் சம்பியன்

Kogilavani   / 2013 நவம்பர் 06 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

நல்லிணக்கத்திற்கான முரளிக்கிண்ணத்திற்கான இருபது – 20 போட்டியின் இறுதிப்போட்டியில் கண்டி ரினிற்ரி கல்லூரி அணியினை 4 இலக்குகளால் வென்று கொழும்பு சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணி இரண்டாவது தடவையாகச் சம்பியனாகியது.

மேற்படி சுற்றுப்போட்டியின் போட்டிகள் வடமாகாணத்திலுள்ள 5 இடங்களில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தன.

12 அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் அணிகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

ஒவ்வொரு சுற்றிலும் முதலிடம் பெற்ற அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன், மூன்று பிரிவுகளிலும் இரண்டாம் இடம்பெற்ற அணிகளில் நிகர ஓட்ட சராசரியில் முன்னிலையிலிருந்த அணியும் அரையிறுதிக்குள் நுழைந்தது.

நேற்று (04) நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் கண்டி ரினிற்ரி அணி 7 இலக்குகளால் தர்மசோகா கல்லூரி அணியினையும், கொழும்பு சென்.பீற்றர்ஸ் அணி 8 இலக்குகளால் நல்லிணக்கத்திற்காக அமைப்பின் சீனிகம அணியினையும் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.

இறுதிப்போட்டி இன்று (05) கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்.பீற்றர்ஸ் அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்தது. அதங்கிணங்கக் களமிறங்கிய கண்டி ரினிற்ரி கல்லூரி அணி 20 பந்துபரிமாற்றங்களை எதிர்கொண்டு 9 இலக்குகளை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஹவின் கினிடும 24, அர்ஜுன ஜெயசிங்க 20 பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்.பீற்றர்ஸ் அணி சார்பாக ஷகான் நாணயக்கார (04  - 14 – 03), நவீன் தர்சான (04 -  17 – 02) கைப்பற்றினர்.
103 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணி 19 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஹசான் உபேந்திர 26, ஹவின்ட டி திசேரா ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ரினிற்ரி அணி சார்பாக ரவீன் சேய (04 – 16 – 02), அர்ஜீன் ஜெயசிங்க (01 – 10 – 02) கைப்பற்றினர்.

இச்சுற்றுப்போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரராக சென்.பீற்றர்ஸ் அணியின் ஷகான் நாணயக்கார (11 இலக்குகள்) மற்றும் ஹசான் உபேந்திர (131 ஓட்டங்கள்) ஆகியோரும் சுற்றுத் தொடரின் ஆட்டநாயகனாக ரினிற்ரி அணியின் ரவீன் சேய (43 ஓட்டங்கள், 11 இலக்குகள்) ஆகியோர் பெற்றுக்கொண்டதுடன் இறுதிப்போட்டியின் நாயகனாக சென்.பீற்றர்ஸ் அணியின் ஹவின்ட டி திசேரா (24 ஓட்டங்கள், 1 பிடியெடுப்பு) தெரிவு செய்யப்பட்டார்.

கொழும்பு சென்.பீற்றர்ஸ் அணி 2012 ஆம் நடைபெற்ற முரளிக்கிண்ண இறுதிப்போட்டியில் யாழ். மாவட்ட பாடசாலைகள் கூட்டு அணியினை ஒரு இலக்குகளால் வென்று சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X