2025 ஜூலை 19, சனிக்கிழமை

'புட்சல்' கால்ப்பந்தாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி சம்பியன்

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


குணசேகரன் சுரேன்

புட்சல் கால்ப்பந்தாட்ட போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி இரண்டாவது தடவையாகவும் சம்பியனாகியுள்ளது.
 
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் விளையாட்டுப் பிரிவு, யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கல்லூரியின் முன்னாள் அதிபர் கே.ஏ.செல்லையா ஞாபகார்த்த 'புட்சல்' கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நடத்தியது.

மேற்படி சுற்றுப்போட்டி 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இவ்வருடம் ஆறாவது தடவையாக நடைபெற்றது.

புட்சல் கால்ப்பந்தாட்டப் போட்டிகள் அணிக்கு 5 பேர் கொண்டதாகவும், வழமையான கால்ப்பந்தாட்ட மைதானத்தினை விட சிறியதாகவும் இருப்பதுடன் போட்டி நிமிடங்கள் முழுமையாக 40 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும்.

புட்சல் கால்ப்பந்தாட்டப் சுற்றுப்போட்டிகள் இலங்கையில் பாடசாலை ரீதியில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டமை கே.ஏ.செல்லையா ஞாபகார்த்த சுற்றுப்போட்டி (2008) என்பது குறிப்பிடத்தக்கது. 

கல்லூரியின் பிக்னெல் மைதானத்தில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் 10 அணிகள் பங்குபற்றியிருந்தன.

நொக்கவுட் முறையில் நடைபெற்ற ஆட்டங்களின் அடிப்படையில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியும் இளவாளை சென்.ஹென்றிஸ் அணியும் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகின.

போட்டியின் ஆரம்பம் முதலே சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்க அவ்வணி அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டது.

முதல் பாதியாட்டம் 2:0 என்ற கோல் கணக்கில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி பக்கமிருந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் ஹென்றிஸ் அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடவே, ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. எனினும் அந்த தாக்குதல் ஆட்டத்தினை சென்.பற்றிக்ஸ் அணியின் பின்கள வீரர்கள் சாதூரியத்தால் தடுக்கப்பட்டது.

இரண்டாவது பாதியின் இறுதி நேரத்தில் சென்.பற்றிக்ஸ் அணி மேலும் ஒரு கோல் போட்டு தமது வெற்றியினை உறுதி செய்தது.

இறுதியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 3: 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது தடவையாகச் சம்பியனாகியது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் எம்.தர்சனும், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக அதே கல்லூரியின் ஏ.ஜெனட்டும் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றிபெற்ற அணிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கான பரிசில்களைவ யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் நோயல்.ஏ.விமலேந்திரன் வழங்கினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X