.JPG)
-குணசேகரன் சுரேன்
யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் மவுண்டன் லெவினியா சென். தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இரு கல்லூரிகளின் 19 வயதுத்துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் வருடாவருடம் நடைபெற்று வரும் ஏ.ஜே.சி.செல்வரட்ணம் வெற்றிக்கிண்ண 2 நாட்கள் துடுப்பாட்டப் போட்டியின் மூன்றாவது வருடப் போட்டிகள் கடந்த 13ஆம் திகதி முதல் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.
மழையின் காரணமாக தாமதமாக ஆரம்பித்த போட்டியில், சென்.தோமஸ் அணி நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பினைத் தீர்மானித்தது. அதற்கிணங்கக் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 99 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளை இழந்திருந்தது.
தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தில், சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 56.3 பந்துபரிமாற்றங்களில் 159 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், சஜீந்திரன் கபில்ராஜ் 49, பரமனாந்தன் துவாரகசீலன் 33, ஞானப்பொன்ராஜா ஆபிரகாம் அனோஜன் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென்.தோமஸ் அணி சார்பாக ரவீண்து திலகரத்தின 5 (37), ஹெலகமல் நாணயக்கார 2 (02) இலக்குகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.தோமஸ் அணி, 61.5 பந்துபரிமாற்றங்களில் 137 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் டுலன்ஜ சில்வா 43, சனேஸ் டிமேல் 23, மதுசன் ரவிச்சந்திரகுமார் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக ரவீந்தரன் லோகதீஸ்வரன் 5 (44), பரமானந்தம் துவாரகசீலன் 2 (15) இலக்குகளையும் கைப்பற்றினர்.
22 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் கல்லூரி, இரண்டாவதும் இறுதியுமான நாள் முடிவில் 22 பந்துபரிமாற்றங்களில் 2 இலக்குகளை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.