2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சென். ஜோன்ஸ் அணி இனிங்ஸ் வெற்றி

A.P.Mathan   / 2014 ஜனவரி 08 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்
 
இலங்கைத் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயது பாடசாலை துடுப்பாட்ட பிரிவு – 3 அணிகளுக்கிடையில் துடுப்பாட்டப் போட்டியில் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, எதிர்த்தாடிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணியினை இனிங்ஸ் மற்றும் 197 ஓட்டங்களால் வென்றது.
 
மேற்படி சுற்றுப்போட்டி மாவட்ட மட்டத்திலுள்ள பிரிவு – 3 அணிகளுக்கிடையில் இடம்பெற்று தொடர்ந்து மாகாண, தேசிய ரீதியில் நடைபெறும். அத்துடன், தேசிய ரீதியில் அரையிறுதி வரையும் முன்னேறும் அணிகள் தொடர்ந்து பிரிவு – 2 அணிகளாகக் கொள்ளப்படும். அடுத்து வரும் வருடங்களின் போட்டிகளில் அவ்வணி பிரிவு – 2 அணிகளுடனான போட்டிகளில் பங்குபற்றும்.
 
யாழ். மாவட்ட பாடசாலை துடுப்பாட்ட அணிகளில் பிரிவு – 2 அணியாக தேசிய ரீதியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி (2010ஆம் ஆண்டு) முதன்முதலாக இடம்பிடித்திருந்தது.
 
யாழ். மாவட்ட பாடசாலை ரீதியிலான துடுப்பாட்ட போட்டிகளை யாழ். மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் ஒழுங்குபடுத்துகின்றது. இதனடிப்படையில் அணிகளுக்கான போட்டி நிரல் சங்கத்தினால் தயாரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.
 
பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான போட்டி மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்களைக் கொண்ட இரண்டு நாட்களுடைய போட்டியாக தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
 
அந்த வகையில் கடந்த 4ஆம் திகதி சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை எதிர்த்து கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி மோதியது.
 
நாணயச் சுழற்சியில் வென்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துடுப்பாட்ட வீரன் ஜெனி பிளமினின் (113) விரைவான சதத்தினை பெற்றுக்கொடுக்க அவ்வணி விரைவாக ஓட்டங்களைச் சேர்த்தது.
 
சென்.ஜோன்ஸ் அணி 77 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, தமது ஆட்டத்தினை நிறுத்திக்கொண்டது.
 
துடுப்பாட்டத்தில் ஜெனி பிளமிங் 113, ஏ.கானாமிர்தன் 59, எஸ்.கபில்ராஜ் 58, பி.துவாரகசீலன் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
 
பந்துவீச்சில் கனகரத்தினம் ம.ம.வி அணி சார்பாக வி.விஸ்ணுகானன் 3 (77) இலக்குகளைக் கைப்பற்றினார்.
 
பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி, எஸ்.துவாரகன், ஆர்.லோகதீஸ்வரன் ஆகியோரின் பந்துவீச்சிற்கு முகங்கொடுக்க முடியாமல் 34.3 பந்துபரிமாற்றங்களில் 73 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.
 
துடுப்பாட்டத்தில் பி.லோகதர்ஷன் 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
 
பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக எஸ்.துவாரகன் 5 (23), ஆர்.லோகதீஸ்வரன் 4 (31) இலக்குகளைக் கைப்பற்றினர்.
 
2 நாட்கள் துடுப்பாட்டப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணியினை விட இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணி 100 அல்லது அதற்குமேல் ஓட்டங்கள் குறைவாகப் பெற்றால் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணி மீண்டும் துடுப்பெடுத்தாட வேண்டும் என்ற நியதி (எதிரணி சம்மதிக்கும் தருணத்தில்) இலங்கை பாடசாலை துடுப்பாட்டச் சங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.  
 
அதனடிப்படையில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணி மீண்டும் தமது இரண்டாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. இருந்தும், அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் மீண்டும் சோபிக்கத் தவறியமையினால், இரண்டாவது இனிங்ஸில் 26.4 பந்துபரிமாற்றங்களில் 88 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.
 
அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் கே.சுசிகரன் 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
 
பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக எஸ்.துவாரகன் 5 (43) (முதல் இனிங்ஸிலும் 5 இலக்குகள்), ஆர்.லோகதீஸ்வரன் 3 (23) இலக்குகளைக் கைப்பற்றினர்.
 
இதனால் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் 197 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X