2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கராத்தே வீரர்களுக்கு பயிற்சி

Kogilavani   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கிழக்கு மாகாணத்தில் உள்ள கராத்தே வீரர்களுக்கு சர்வதேச ரீதியில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் ஆண்,பெண் இருபாலருக்குமான கராத்தே பயிற்சியொன்று ஞாயிற்றுக்கிழமை (16) மட்டக்களப்பு அரசடியில் உள்ள சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் பயிற்சி தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர் கே.ரி.பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் 300க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர். உலக பிரசித்திபெற்ற கராத்தே பயிற்றுவிப்பாளரான சிவலிங்கம் இதன்போது பயிற்சிகளை வழங்கினார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இதற்கான உதவிகளை வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் கராத்தே பயிற்சியாளரான எஸ்.சிவலிங்கம் தெரிவிக்கையில்,

'பெண்கள் கராத்தே போட்டிகளில் சர்வதேச ரீதியில் செல்லவேண்டும் என்பதை நோக்காகக்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதுவரை காலமும் கராத்தே போட்டிகளில் தேசிய ரீதியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றபோதிலும் சர்வதேச ரீதியில் ஒரு சில வீரர்களே செல்லக்கூடிய வாய்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் சர்வதேச ரீதியான போட்டிகளில் அதிகளவான வீர வீராங்கனைகளை அனுப்பிவைக்கும் வகையில் சர்வதேச அளவிலான பயிற்சி நடவடிக்கைகள் இச்சங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் குறிப்பாக தமிழர்களைப் பொறுத்தவரையில் தற்காப்பு கலைகளை பெறும் வீதம் பெண்கள் மத்தியில் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்துவந்தது. விரல்வெட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்துவந்தது என்றுகூட சொல்லலாம்.

ஆனால் இன்று அது மாற்றம் அடைந்துள்ளது. இன்று பாடசாலை ரீதியாகவும் அதிகளவிலான பெண்கள் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதை காணமுடிகின்றது. குறிப்பாக ஆண்களுக்கு இணையாக அவர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதை காணமுடிகின்றது.

ஆண்களைவிட பெண்கள் அதிக நேரம் சளைக்காமல் தங்களது பயிற்சிகளை பெறமுடிவதை அவதானிக்க முடிகின்றது.

'இதற்கு விழிப்புணர்வும் மிகவும் முக்கியமானதாகும். இது தொடர்பிலான அறிவூட்டல்கள் சரியானமுறையில் பெற்றோருக்கு வழங்கப்படும்போது அவர்களது குழந்தைகளின் தற்காப்பு கலையை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்' என மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் பிரதம பயிற்றுவிப்பாளர் கே.ரி.பிரகாஸ் தெரிவித்தார்.

'இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை ரீதியில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு கராத்தே தற்காப்பு கலையினை வழங்குவதன் மூலம் அவர்கள் சுதந்திரமாக செயற்படும் நிலையேற்படும்' என மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.

கடந்த 22 வருடத்துக்கும் மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கராத்தே கலையினை மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கம் வழங்கி வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று கிராமங்கள் தோறும் கராத்தே கலையினை பெண்கள் பெற்றுவரும் நிலையினை மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கம் ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல தசபாத்த காலமாக தொடர்ந்த மோதல் நிலைகளினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த சமூகம் என்ற அடிப்படையில் பெண்கள் அங்கு எதிர்கொள்ளும் பல சவால்களை எதிர்கொள்ள தற்காப்பு கலையும் அவர்களுக்கு கைகொடுக்கும் என்பதில் ஐய்யமில்லை' என்றார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X