2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளவாலை யங்ஹென்றீஸ் அணி சம்பியனாகியது

Kogilavani   / 2014 மார்ச் 01 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


வலிகாமம் கால்பந்தாட்ட லீக், இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் வெற்றிக் கிண்ணத்திற்காக தனது லீக்கிற்குட்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் நடத்தி வந்த கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இளவாலை யங்ஹென்றீஸ் விளையாட்டுக்கழக அணி சம்பியனாகியது.

இறுதிப்போட்டியில் இளவாலை யங்ஹென்றீஸ் விளையாட்டுக் கழக அணி 7:1 என்ற கோல் கண்ணில் சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் விளையாட்டுக்கழக அணியினை வென்றது.

விலகல் முறையில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கினைச் சேர்ந்த 29 கால்ப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.

அரையிறுதி ஆட்டங்களில், இளவாலை யங்ஹென்றீஸ் விளையாட்டுக்கழக அணி 3:1 என்ற கோல் கணக்கில் குப்பிளான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழக அணியினையும், சண்டிலிப்பாய் கல்வளை விநாயகர் விளையாட்டுக் கழக அணி 3:2 என்ற கோல் கணக்கில் அராலி அண்ணா விளையாட்டுக்கழக அணியினையும் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 

இறுதிப்போட்டி நேற்று (28) இரவு மின்னொளியில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

ஆட்டம் தொடங்கிய நிமிடம் முதல் யங்ஹென்றிஸ் அணியின் ஆதிக்கம் மைதானத்தில் நிலைபெற அவ்வணி அடுத்தடுத்து கோல்களைப் போட்டு போட்டியினை முழுமையாகத் தமது கைவசம் வைத்திருந்தது.

முதல் பாதியாட்டத்தில் யங்ஹென்றிஸ் அணி 5:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 

இரண்டாவது பாதியாட்டத்தில் அதிககோல்கள் தமக்கெதிராக அடிக்கப்படக்கூடாது என்றவாறு கல்வளை விநாயகர் அணி முனைப்புடன் செயற்பட்டது. இதனால் யங்ஹென்றிஸ் அணியினரின் கோல்கள் அடிக்கும் பல சந்தர்ப்பங்கள் கல்வளை விநாயகர் அணியின் பின்கள வீரர்களினால் தடுக்கப்பட்டது. 

இருந்தும் அவ்வாறு போடப்பட்ட தடைகளையும் மீறி யங்ஹென்றிஸ் அணி 2 கோல்களைப் போட்டது. ஆட்டத்தின் இறுதி நேரத்தில் ஆறுதலளிக்கும் வகையில் கல்வளை விநாயகர் அணி ஒரு கோலினைப் பெற்றுக்கொண்டது. 

இறுதியில் யங்ஹென்றிஸ் அணி 7:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 

இந்தச் சுற்றுப்போட்டியின் தொடர்நாயகனாக யங்ஹென்றிஸ் அணியின் அ.டிலக்சனும், இறுதிப்போட்டியின் நாயகனாக இறுதிப்போட்டியில் 4 கோல்களை அபாரமாகப் போட்ட செ.ஞானரூபனும் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றிபெற்ற அணி மற்றும் சிறந்த வீரர்களுக்கான பரிசில்களை இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தில் தலைவர் ரஞ்சித் றொட்றிக்கோ, செயலாளர் உபாலி கேவகே, நிறைவேற்றப் பணிப்பாளர் அனுரடிசில்வா ஆகியோர் வழங்கினார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X