2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ரசிகர்களை கவர்ந்திழுக்கும் மாபெரும் போர்.

Super User   / 2014 மார்ச் 12 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}



-குணசேகரன் சுரேன்

வடக்கிலுள்ளவர்களை மட்டுமல்ல இலங்கையின் அனைத்து பிரதேசங்களைச் சேர்ந்த மக்களையும் புலம்பெயர் வாழ் தமிழர்களையும் யாழ்ப்பாணத்தின் பக்கம் கவர்ந்திழுக்கும் வடக்கின் மாபெரும் போர் பெருந்துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையிலே பழமையான துடுப்பாட்டப்போட்டிகளில் ஒன்றான வடக்கின் 'மாபெரும் போர்' துடுப்பாட்டப் போட்டியில் மோதும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் இவ்வருடம் 108 ஆவது தடவையாக மோதவுள்ளன.

மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்களையுடைய இந்த வடக்கின் மாபெரும் போர் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

1904 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியில் இதுவரையிலும் நடைபெற்று முடிந்த 107 வடக்கின் மாபெரும் போர்களில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 33 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், 39 போட்டிகள் சமநிலையிலும், 7 போட்டிகளின் முடிவுகள் தெரியாத நிலையிலும் ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையிலும் இருக்கின்றன.

வடக்கின் மாபெரும் போரின் கடந்த இரண்டு வருடங்களில் நடைபெற்ற இரு போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்திருந்ததுடன், அதற்கு முந்திய 5 போட்டிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தொடர் வெற்றிகளைப் பெற்றிருந்தது.

வடக்கின் மாபெரும் போர் இதுவரையும் கடந்து வந்த 107 போட்டிகளில் ஒரு இனிங்ஸில் அதிகப்படியான ஓட்டங்களை 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 354 ஓட்டங்களை 9 இலக்குகள் இழப்பிற்கு பெற்றிருக்கின்றது. அத்துடன், துடுப்பாட்ட வீரர் பெற்ற அதிக ஓட்டங்களாக 1990 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரன் எஸ்.சுரேஸ்குமார் 145 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இம்முறை நடைபெறவுள்ள 108 ஆவது போரில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி பி.துவாரகசீலன் தலைமையிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி கே.ஜுனியஸ்கனிஸ்ரன் தலைமையிலும் களமிறங்கவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இவ்வருடம் (2014) இதுவரையிலும் இரண்டு நாட்கள் கொண்ட மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்கள் கொண்ட போட்டிகளில் 10 அணிகளுடன் மோதியிருக்கிறது. இதில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியினை 127 ஓட்டங்களாலும், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணியினை இனிங்ஸ் மற்றும் 124 ஓட்டங்களாலும், கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினை இனிங்ஸ் மற்றும் 97 ஓட்டங்களாலும், சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியினை 5 இலக்குகளாலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியினை 177 ஓட்டங்களாலும், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினை இனிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்களாலும், சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணியினை 142 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றது.

அத்துடன், மாத்தளை சென்.தோமஸ் கல்லூரி அணி மற்றும் காலி தேவபத்திராஜா கல்லூரி அணி ஆகியவற்றுடனான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இருந்தும், குருநாகல் இப்ராஹமுவ மத்திய கல்லூரியுடனான போட்டியில் 30 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

10 போட்டிகளில் பெற்ற அனுபவத்தினையும் வடக்கின் மாபெரும் போரில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு எதிராக பிரயோகிக்க யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி காத்திருக்கின்றது. அத்துடன், மொத்த வெற்றி எண்ணிக்கையினை சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை விட அதிகம் பெறவேண்டும் என்ற உத்வேகத்துடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இவ்வருடம் களமிறங்கவுள்ளது.

இதேபோல் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இவ்வருடம் (2014) இரண்டு நாட்கள் கொண்ட மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங் கொண்ட போட்டியில், 12 அணிகளுடன் மோதியிருக்கிறது. இவற்றில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 197 ஓட்டங்களாலும், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணியுடனான போட்டியில் 10 இலக்குகளாலும், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 188 ஓட்டங்களாலும், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 369 ஓட்டங்களாலும், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியினை இனிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களாலும், மாத்தறை சென்.தோமஸ் அணியுடனான போட்டியில் 25 ஓட்டங்களாலும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியுடனான போட்டியில் 161 ஓட்டங்களாலும், சிலாபம் சென்.மேரிஸ் கல்லூரியுடன் 54 ஓட்டங்களாலும், கோட்டை ஆனந்த சஸ்ராலய அணியுடன் 198 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தது.

அத்துடன், மவுண்டன் லவினியா சென்.தோமஸ் கல்லூரி அணி மற்றும் கண்டி ரினிற்றி கல்லூரி அணியுடனான போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தது.

இருந்தும் கொழும்பு றோயல் கல்லூரி அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 131 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

12 போட்டிகளிலும் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினை வீழ்த்தி 8 வருடங்களாக பெறாமல் இருக்கும் வெற்றியினை பெறுவதற்காகக் காத்திருக்கின்றது. (இறுதியாக 2004 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றிருந்தது).

வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியென்றால் இரு அணி ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் நிறைந்ததாகவே இருக்கும். இரு பாடசாலைகளையும் சேர்ந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழைய மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்கள், வடக்கின் மாபெரும்; போர் துடுப்பாட்டப் போட்டிகளைக் காண்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு இந்தக் காலப்பகுதியில் படையெடுப்பார்கள்.

துடுப்பாட்ட ரசிகர்களுக்கு விருந்தாகவிருக்கின்ற இந்த வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்ட போட்டியில் இரு அணிகளின் வீரர்களும் தங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் அதேவேளை தங்கள் அணியினையும் வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதில் முனைப்புடன் செயற்படுவார்கள் என்பது மட்டும் நிஜமானது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X