2025 ஜூலை 16, புதன்கிழமை

முதல் நாளில் யாழ். மத்தியின் கைகள் ஓங்கின

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வடக்கின் மாபெரும் போரின் முதல்நாள் ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது பந்துவீச்சாளர்களின் பலத்தினால் முன்னிலையில் இருக்கின்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது மாபெருந் துடுப்பாட்டப் போட்டி இன்று (13) முதல் ஆரம்பமாகியது.

3 நாட்கள் கொண்ட இந்த துடுப்பாட்டப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணித்தலைவர் கே.ஜுனியஸ்கனிஸ்ரன் முதலில் தமது அணி துடுப்பெடுத்தாடக் களமிறங்குவதாகத் தீர்மானித்தார்.

அணித்தலைவர் மற்றும் நிரோஜன் நம்பிக்கை
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி திடமான ஆரம்பத்தினை ஏற்படுத்திய போதும், தொடர்ந்து இலக்குகளை இழந்து வந்தது. 80 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளை இழந்து இக்கட்டாக இருந்த நேரத்தில் அணித்தலைவர் கே.ஜுனியஸ்கனிஸ்ரன் - பி.நிரோஜன் ஆகியோர் தமது இணைப்பாட்டம் மூலம் தமக்கிடையே 68 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியினை திடமான நிலைக்கு இட்டுச் சென்றனர்.

இறுதியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 63 பந்து பரிமாற்றங்களில் 162 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பி.நிரோஜன் 40, கே.ஜுனியஸ்கனிஸ்ரன் 36, கே.சஞ்சயன் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணியின் ஆர்.லோகதீஸ்வரன் 20.2 பந்துபரிமாற்றங்கள் பந்துவீசி 53 ஓட்டங்களுக்கு 6 இலக்குகளை வீழ்த்தி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்ட வீரர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார்.

சென்.ஜோன்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளிப்பு
சென்.ஜோன்ஸ் அணியின் அணித்தலைவர் பி.துவாரகசீலன் உள்ளிட்ட துடுப்பாட்ட வீரர்கள் யாழ்ப்பாணம் மத்தியின் வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு பெவிலியன் திரும்ப அவ்வணி இக்கட்டான நிலையில் தற்போது இருக்கின்றது.

இன்றை முதல்நாள் ஆட்டநேர முடிவில் 27 பந்து பரிமாற்றங்களை எதிர்கொண்டு 6 இலக்குகளை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்று அவ்வணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. துடுப்பாட்டத்தில் எம்.சிந்துர்ஜன் 18, எஸ்.கபில்ராஜ் 13, பெரிதாக நம்பியிருந்த அணித்தலைவர் துவாரகசீலன் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் அசத்திய யாழ்ப்பாணம் மத்தி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர்களான டி.மதுசன் 3 (10), பி.நிரூபன் 3 (09) இலக்குகளைக் கைப்பற்றி தமது அணியின் கைகளினை ஓங்க வைத்தனர்.

தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X