2025 ஜூலை 16, புதன்கிழமை

இந்துக்களின் போரில் யாழ். இந்து வெற்றி

A.P.Mathan   / 2014 மார்ச் 22 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி 9 இலக்குகளால் வெற்றிபெற்றது.

1982ஆம் ஆண்டிலிருந்து இரு கல்லூரி அணிகளுக்குமிடையில் சிநேகபூர்வத் துடுப்பாட்டப் போட்டியாக நடைபெற்று வந்த மேற்படி துடுப்பாட்டப் போட்டி, இவ்வருடத்திலிருந்து இந்துக்களின் போர் துடுப்பாட்டப் போட்டியென விளையாடப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களைக் கொண்டமைந்த ஒருநாளில் 90 பந்து பரிமாற்றங்கள் வீசப்படவேண்டும் என்ற நியதிக்குள் இந்துக்களின் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது.

இதனடிப்படையில் வெள்ளிக்கிழமை (21) காலை மேற்படி போட்டிகள் ஆரம்பமாகியதுடன், நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் இந்து அணித்தலைவர் ஜே.கல்கோவன் முதலில் களத்தடுப்பினைத் தீர்மானித்தார்.

அதற்கிணங்கக் களமிறங்கிய பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணி, 200 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஏ.யசோதரன் 60, என்.கிருஷாந்த் 42, எஸ்.எஸ்.ஸ்ரீபன் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்து அணி சார்பாக ஜி.மதுசன் 4 (27), ரி.பானுகோபன் 3 (30), வி.சிந்துஜன் 3 (45) இலக்குகளை வீழ்த்தினார்கள்.

தொடர்ந்து பதிலக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 இலக்குகள் நஷ்டத்திற்கு 192 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தொடர்ந்து சனிக்கிழமை (22) இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்கையில் 274 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஜி.மதுசன் 62, ஆர்.கஜானந்தா 34, ஆர்.ருக்ஷ்மன் 32, ஜே.கல்கோவன் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

74 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸிக்காகத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பம்பலப்பிட்டி இந்து அணி, துடுப்பாட்டத்தில் சொதப்பிய நிலையில், 94 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் ஆர்.டிவாகரன் 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்தவீச்சில் யாழ்ப்பாணம் இந்து அணி சார்பாக ரி.பானுகோபன் 4 (31), ஜி.மதுசன் 2 (07), வி.சிந்துஜன் 2 (50) இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து 21 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியெனத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி, ஓர் இலக்கினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இந்துக்களின் போரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக பம்பலப்பிட்டி இந்து அணியின் ஏ.யசோதரனும், சிறந்த பந்துவீச்சாளராக யாழ். இந்து கல்லூரியின் ரி.பானுகோபனும், சிறந்த களத்தடுப்பாளராக அதே அணியின் ஜே.கல்கோவனும், போட்டியின் ஆட்டநாயகனாக அதே அணியின் ஜி.மதுசனும் தெரிவு செய்யப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X