2025 ஜூலை 16, புதன்கிழமை

வித்தியானந்தா போராட்டம் : சென்.ஜோன்ஸ் சம்பியன்

Super User   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


  மறைந்த அதிபர் எஸ்.தனபாலனின் ஞாபகார்த்தமாக யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியினால்,பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் நடத்தப்படும் அணிக்கு 6 பேர், 5 பந்துபரிமாற்றங்கள் கொண்ட கடினபந்துத் துடுப்பாட்டப் போட்டியின் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சம்பியனாகியது.

தொடர்ந்து 7 வருடமாக நடைபெறும் மேற்படி சுற்றுப் போட்டியில் இதுவரையில் கொக்குவில் இந்து கல்லூரி 4 தடவைகளும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிகள் ஆகியன தலா ஒரு தடவையும் சம்பியன் கிண்ணத்தினைத் தட்டிச் சென்றிருந்தன.

முதற்சுற்றுப்போட்டிகள் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானங்களில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்றன.

தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள் நேற்று சனிக்கிழமை (26) சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போது, சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியினையும், முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி அணி கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினையும் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற சென்.ஜோன்ஸ் அணி முதலில் வித்தியானந்தா அணியினை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதற்கிணங்கக் களமிறங்கிய வித்தியானந்தா கல்லூரி அணி, 5 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.அருணா 18, என்.இப்ராஸ் 13 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு 53 என்ற வெற்றியிலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்.ஜோன்ஸ் அணி, இறுதிப் பந்து வரை போராடி 3 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.கபில்ராஜ் 19 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இறுதிப்போட்டியின் நாயகனாக சென்.ஜோன்ஸ் அணியின் எஸ்.கபில்ராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.
முல்லைத்தீவு வித்தியானந்தா அணி முதன் முறையாக இச்சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டதுடன், யாழ்.மாவட்டத்தின் முன்னணி அணிகளை வெற்றிகொண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது. அத்துடன், அவ்வணியின் களத்தடுப்பினை அனைவரும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .