2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஹாட்லி, மணற்காடு றோ.க.த.பா சம்பியன்

Kogilavani   / 2014 மே 21 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா, கனகரத்தினம் கனகராஜ்


வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான எல்லே போட்டியில் ஆண்களில் ஹாட்லிக் கல்லூரி அணியும், பெண்களில் மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் சம்பியனாகின.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே முதலாம் கட்டப் போட்டியான மரதனோட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முடிவுற்ற நிலையில் இரண்டாம் கட்டப் போட்டிகள் தற்போது, முல்லைத்தீவு மாவட்டத்திலேயே இடம்பெற்று வருகின்றது.

இரண்டாம் கட்டப் போட்டிகளில் ஒன்றான எல்லேப் போட்டி இன்று புதன்கிழமை (21) முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

40 பந்து எறிகளைக் கொண்டதாக இந்த எல்லே போட்டிகள் இடம்பெற்றன.

ஹட்ரிக் சம்பியனாகிய ஹாட்லிக் கல்லூரி அணி

ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் பருதித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியினை எதிர்த்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி மோதியது. முதலில் ஆடிய ஹாட்லிக் கல்லூரி அணி 10 ஓட்டங்களை எடுத்தது.

பதிலளித்தாடிய சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி 4 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனடிப்படையில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக ஹாட்லிக் கல்லூரி அணி வடமாகாணச் சம்பியனாகியது. (2012, 2013 ஆகிய ஆண்டுகளிலும் ஹாட்லிக் கல்லூரி அணியே சம்பியனாகியிருந்தது).
மூன்றாமிடத்தினை நெல்லியடி மத்திய கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.

இரண்டாவது தடவையாகச் சம்பியனாகிய மணற்காடு றோ.க. த பாடசாலை

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் மணற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் முல்லைத்தீவு குமிழமுனை மகா வித்தியாலயமும் விளையாடின.

முதலில் ஆடிய மணற்காடு றோ.க.த.பாடசாலை அணி 40 பந்து எறிகளில் 10 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய குமிழமுனை மகா வித்தியாலயம் 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனடிப்படையில் மணற்காடு றோ.க.த பாடசாலை தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சம்பியனாகியது. (2013 ஆம் ஆண்டும் சம்பியனாகியிருந்தது)

மூன்றாமிடத்தினை வவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயம் பெற்றுக்கொண்டது.

முதல் மூன்று இடங்களையும் பெற்ற அணிகள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .