2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்ட சம்பியன்களாக யாழ். மாவட்ட அணிகள்

Super User   / 2014 ஜூன் 09 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}



- குணசேரகன் சுரேன், நா.நவரத்தினராசா 


வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற காலபந்தாட்டப் போட்டிகளில் 15, 17, மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் முறையே யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி, இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி, மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகிய சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டன.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப்போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்டப்போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.

இதில் கால்பந்தாட்டப் போட்டிகள் வவுனியா நகர சபை மைதானத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்றது.

சமநிலை தவிர்ப்பில் சம்பியனாகிய சென்.பற்றிக்ஸ் அணி

15 வயதுப்பிரிவு இறுதிப்போட்டிகள் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியினை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது.

போட்டி நேரத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை. தொடர்ந்து போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மன்னார் சென்லுசியா மகா வித்தியாலய அணி 2:0 என்ற கோல் கணக்கில் மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தினை வென்றது.

தனது ஆதிக்கத்தின் கீழ் போட்டியினை வைத்திருந்த ஹென்றிஸ்

17 வயதுப்பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினை எதிர்;த்து இளவாலை ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது.

போட்டியின் ஆரம்பம் முதல் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஹென்றிஸ் அணி அடுத்தடுத்து 2 கோல்களைப் போட்டு, 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மன்னார் சென்.சேவியர் அணி 1:0 என்ற கோல் கணக்கில் மன்னார் முருங்கன் மகா வித்தியாலய அணியினை வென்றது.

மீண்டும் கால்ப்பந்தாட்டத்தில் உருவெடுத்துவரும் வசாவிளான் அணி

19 வயதுப்பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியினை எதிர்த்து வசாவிளான் மத்திய மகா வித்தியாலய அணி மோதியது.

போட்டியின் ஆரம்பம் முதல் பலம்மிக்க மானிப்பாய் இந்து அணிக்கு சவாலான அணியாக வசாவிளான் விளங்கியது. முன்னைய காலங்களில் கால்பந்தாட்டத்தில் காட்டிய உத்வேகத்தினை அந்த அணி இறுதிப்போட்டியில் காட்டியது.

முதல்பாதியாட்டத்தில் மானிப்பாய் இந்து அணி 1 கோல் பெற்று முன்னிலை பெற்றது. இருந்தும், இரண்டாவது பாதியாட்டத்தில் அதற்குப் பதிலாக ஒரு கோல் பெற்று வசாவிளான் அணி போட்டியினைச் சமன் செய்தது.

தொடர்ந்து வெற்றியாளரினைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் மானிப்பாய் இந்து அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது,

மூன்றாம் இடத்தை மன்னார் சென். சேவியர் ஆண்கள் பாடசாலை அணி பெற்றுக்கொண்டது.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .