2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கரப்பந்தாட்டத்தில் யாழ்.மாவட்ட அணிகள் சம்பியன்

Super User   / 2014 ஜூன் 08 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வடமாகாண மாவட்டங்களுக்கிடையில் நடத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவுகளிலும் யாழ்ப்பாண மாவட்ட அணிகள் சம்பியனாகின.

மேற்படி சுற்றுப்போட்டி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்றன.

தொடர்ந்து 7 ஆவது தடவையாக ஆண்கள் அணி சம்பியன்

ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கிளிநொச்சி மாவட்ட அணியும் யாழ்ப்பாண மாவட்ட அணியும் மோதின.
5 சுற்றுக்களாக கொண்ட இந்தச் சுற்றுப்போட்டியில் பலம் பொருந்திய யாழ்.மாவட்ட அணி மூன்று சுற்றுக்களுடன் வெற்றியினைத் தனதாக்கியது.
அந்தவகையில், யாழ்.மாவட்ட அணி 25:20, 25:21 மற்றும் 25:15 என்ற புள்ளிகள் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட அணியினை வீழ்த்திச் சம்பியனாகியது. இதன்மூலம் தொடர்ந்து 7 ஆவது முறையாக யாழ்.மாவட்ட அணி சம்பியனாகியது. 

முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியின் விஸ்வரூபம்

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் யாழ்.மாவட்ட அணியும் முல்லைத்தீவு மாவட்ட அணியும் மோதிக்கொண்டன.

இந்தப் போட்டியும் 5 சுற்றுக்களை கொண்டதாக அமையப்பெற முதல் இரண்டு சுற்றுக்களையும் 25:11, 25:25 என்ற ரீதியில் யாழ்.மாவட்ட அணி கைப்பற்றி இலகுவான வெற்றியினைப் பெறும் முனைப்புடன் இருந்தது.

இருந்தும் மூன்றாவது சுற்றில் விஸ்வரூபம் எடுத்த முல்லை அணி, 25:22, 25:23 என்ற புள்ளிகள் அடிப்படையில் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றினைக் கைப்பற்றி யாழ்.மாவட்ட அணியினை கதிகலங்க வைத்தது.

தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடிய ஐந்தாவது சுற்றில் சுதாகரித்தாடிய யாழ்.மாவட்ட அணி 15:13 என்ற புள்ளிகள் (இறுதிச் சுற்று 15 புள்ளிகளுடன் முடிவடையும்) அடிப்படையில் வென்று மாகாணச் சம்பியனாகியது.

இதன்மூலம் யாழ்.மாவட்ட இரண்டு அணிகளும் தேசிய மட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .