2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஜனசக்தி கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 29 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி நிறுவனமானது, சர்வதேச மேடையில் இலங்கைக்கு பெருமையை தேடித்தருவதற்காகவும், எதிர்காலத்தில் சர்வதேச பதக்க வெற்றியாளர்களை உருவாக்கும் நோக்கிலும் பாடசாலை மட்டத்தில் கிராமிய மெய்வல்லுநர்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கும் விசேட அனுசரணை திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. அண்மையில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் ஏற்கனவே ஜனசக்தி பாடசாலை மெய்வல்லுநர் குழாமிலுள்ள மெய்வல்லுநர்கள் மிகச்சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
இந் நிகழ்வில் 18 வயதுக்குட்பட்ட 110m தடை தாண்டல் போட்டியில் உடவளவையைச் சேர்ந்த அகில ரவிசங்க புதிய சாதனையை நிகழ்த்தினார். அதன் பின்னர், அவர் தாய்லாந்தில் நடைபெறவுள்ள கனிஷ்ட ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னர், அகில கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கனிஷ்ட சம்பியன் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றார். 
 
மேலும் அண்மையில் இடம்பெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் கதலுவ பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மலா மதுஷிகா 18 வயதுக்குட்பட்ட பெண்கள் 400m போட்டியில் தங்க பதக்கத்தை வென்றதுடன், 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சிறந்த மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார். மேலும் அவர் கடந்த வாரம் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிக்கான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார். மேலும் அவர் தற்போது சீனாவின் தாய்பேய் நகரில் நடைபெறவுள்ள 16ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன் தொடரில் கலந்து கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
 
400m போட்டியில் இரண்டமிடத்தைப் பெற்ற இரத்தினபுரியைச் சேர்ந்த சமித் லக்மால் சீனாவின் தாய்பேய் நகரில் நடைபெறவுள்ள 16ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன் தொடரில் கலந்து கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் SAARC கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டார்.
 
ஜனசக்தி நிறுவனத்தின் அனுசரணையை பெறும் கேகாலை புனித.ஜோசப் பெண்கள் வித்தியாலயத்தைச் சேர்ந்த ருமேஷி ரத்நாயக்க கடுமையாக காயமடைந்த நிலையிலும் கூட, தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன் தொடரில் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் 200m அஞ்சல் ஓட்டப்போட்டியில் தங்க பதக்கத்தை வென்றெடுத்தார். இலங்கையில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவரான ருமேஷி, கடந்த 2013 ஆம் ஆண்டு பெண்கள் கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன் தொடர், ஆசிய பாடசாலை மெய்வல்லுநர் சம்பியன் தொடர் மற்றும் SAARC கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இரத்தினபுரி பிரின்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மலின் உதய குமார, 110அ தடை தாண்டல் போட்டியில் தங்க பதக்கத்தையும், 20 வயதுக்குட்பட்ட பிரிவின் கீழ் நீளம் பாய்தல் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் வென்றார். 
 
20 வயதுக்குட்பட்ட பரிதிவட்டம் எறிதல் போட்டியில் சிலாபத்தைச் சேர்ந்த அசேன் ஜயவர்தன பங்கேற்று தங்கப்பதக்கத்தை பெற்று தனிப்பட்ட சாதனையை பதிவு செய்திருந்தார். அண்மையில் சிலாபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அவரது வீடு சேதமுற்றதால் அவரால் குண்டெறிதல் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. 
 
கஹவத்தயைச் சேர்ந்த ஹர்சினி வத்சலா 20 வயதுக்குட்பட்ட 100m தடை தாண்டல் போட்டியில் தங்க பதக்கத்தையும், 400m தடை தாண்டல் போட்டியில் வெள்ளி பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டார். 5000m மற்றும் 10000m பிரிவில் எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த பிரசாத் மதுரங்க இரு வெள்ளி பதக்கங்களை தனதாக்கிக் கொண்டார்.
 
ஜனசக்தி நிறுவனத்தின் கிராமிய மெய்வல்லுநர் திட்டத்தின் கீழ் தற்போது 12 பாடசாலை மெய்வல்லுநர்கள் அனுசரணை பெறுகின்றனர். மேலும் இந் நிறுவனம் 6 பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளது. இத் திட்டத்தின் கீழ் இரு டென்னிஸ் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இவ் வீரர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு மற்றும் தங்கள் தனிப்பட்ட செயல்திறனை விருத்தி செய்வதற்கான ஊக்குவிப்பு தொகை போன்றன வழங்கப்படுகின்றன.
 
இந்த போட்டியாளர்கள் வெளிநாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தகுதியை பெறும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான நிதியுதவி ஜனசக்தியினால் வழங்கப்படும். ஆனால் இதற்கு மேலதிகமாக, ஜனசக்தி நிறுவனம் இந்த இளம் மெய்வல்லுநர்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் அவர்களது தன்னம்பிக்கை மட்டத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது. 'அண்மையில் இடம்பெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் எமது இளம் வீரர்கள் காட்டிய திறமையை எண்ணி மிக பெருமையடைகிறோம். இது வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கு தனிப்பட்ட வெற்றியை மாத்திரமல்லாது, அவர்களது பாடசாலைகள் மற்றும் குடும்பங்கள் மற்றும் இலங்கைக்கு சர்வதேச மேடையில் அங்கீகாரத்தையும், பெருமையையும் தேடித்தருகிறது' என மெய்வல்லுநர் அனுசரணை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஜனசக்தியின் நிதி மற்றும் திட்டமிடல் பிரிவின் பொது முகாமையாளருமான பர்டேல் பின்டோ ஜயவர்தன தெரிவித்தார். 'மெய்வல்லுநர்களின் திறமைகளுக்கு ஜனசக்தி களம் அமைத்துக் கொடுத்துள்ளதுடன், அதற்கு இவ் இளம் வீரர்களின் திறமை சான்று பகர்கிறது. இந் நட்சத்திரங்களின் திறமையை காணும் போது ஜனசக்தி பெருமையடைகிறது. ஜனசக்தி நிறுவனம் இந்த வீரர்களுக்கு உதவிகளை வழங்கி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்குவதுடன், உள்நாட்டு சமூகத்தையும் வலுப்படுத்தி வருகிறது' என மேலும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X