2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வடக்கின் மாபெரும் போர்; அனல்தெறிக்கும் அதிரடி ஆட்டம் ஆரம்பம்

George   / 2015 மார்ச் 02 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன் 

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 109 ஆவது கிரிக்கெட் போட்டிகள், எதிர்வரும் 5ஆம், 6ஆம் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன.

கிரிக்கெட் போர் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கடந்த ஆண்டு, இரண்டு கிரிக்கெட் போர்களிலும் நடைபெற்ற குழப்பங்கள், கொலை, சச்சரவுகள் தான். 

கிரிக்கெட் என்பதன் மகத்துவத்தை கடந்த வருட சம்பவங்கள் குலைத்திருந்தன. கனவான்களின் விளையாட்டில் கனவான்கள் தங்கள் திறமைகளை மைதானத்தில் நிலைநிறுத்த, கனவான்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வெளியில் இருந்தவர்கள் போட்டியை குழப்பினார்கள். 

கடந்த வருடம் நடைபெற்ற பொன் அணிகள் போரில் இடம்பெற்ற கொலையை அடுத்து, அந்தப் போட்டி அப்படியே கைவிடப்பட்டுள்ளது. 

வடக்கின் மாபெரும் போரில் கடந்த வருடம் நடுவரால் கொடுக்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பில் இரு அணியினரின் ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் போட்டி இடைநடுவில் கைவிடப்பட்டு, பின்னர் இரு அணிகளும் மேற்கொண்ட சமசரத்தின் அடிப்படையில் அத்தருணத்தில் வெற்றியின் அருகில் நின்றிருந்த சென்.ஜோன்ஸ் கல்லூரி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.  

இம்முறை போட்டிகள் கனவான்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலும், வரலாற்று பாரம்பரியம் கொண்ட கிரிக்கெட் போட்டியின் வரலாற்றை கட்டிக்காப்பதற்காகவும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

வடக்கின் மாபெரும் போரானது 1901ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த கிரிக்கெட் போட்டியானது 108 போட்டிகளை கடந்து வந்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் சில போட்டிகள் நடைபெறவில்லை. 

இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 34 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் 39 போட்டிகள் சமநிலையிலும், 7 போட்டிகள் முடிவு தெரியாத நிலையிலும், 1 போட்டி கைவிடப்பட்டும் உள்ளன. 

1993ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு பெற்ற 354 ஓட்டங்கள், ஒரு இனிங்ஸில் பெற்ற அதிகூடிய ஓட்டமாகவுள்ளது. சென்.ஜோன்ஸ் கல்லூரி 1999 ஆம் ஆண்டு 6 விக்கெட்டுக்கள் இழப்புக்குப் பெற்ற 326 ஓட்டங்கள் அந்த அணியின் அதிகூடிய ஓட்டங்களாக இருக்கின்றது. இதுவரையில் 18 சதங்கள் பெறப்பட்டுள்ளதுடன், 1990ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரன் எஸ்.சுரேஸ்குமார் பெற்ற 145 ஓட்டங்கள் அதிகூடிய தனிநபர் ஓட்டமாகவுள்ளது. 

1951ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வி.சண்முகம் 26 ஓட்டங்கள் கொடுத்து 9 விக்கெட்க்களை கைப்பற்றிபற்றியமை இதுவரையில் சிறந்த பந்துவீச்சாக காணப்படுகின்றது. 1950 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரியை சேர்ந்த ஈ.ஜி.தேவநாயகம் 33 ஓட்டங்கள் கொடுத்து 9 விக்கெட்களை கைப்பற்றியமை அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாகவுள்ளது. 

பல சாதனைகள் நிகழ்த்தப்பட்ட வடக்கின் மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இவ்வருடம் நடைபெறவுள்ள 109ஆவது போட்டி, அதிக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 

சென்.ஜோன்ஸ் கல்லூரி 

5 வருட அனுபவம் கொண்ட சஜீந்திரன் கபில்ராஜ் தலைமையில் களமிறங்கும் இந்த அணியில் ரவீந்திரன் லோகதீஸ்வரன் (உபதலைவர்), பரமானந்தம் துவாரகசீலன், அருள்நந்தன் கானாமிர்தன், மணிவண்ணன் சிந்துர்ஜன், இராஜசிறிபிரிய பிரிசங்கர், செபமாலைப்பிள்ளை ஜெனி பிளமிங், வசந்தன் யதுசன், அமரசேன ஹெர்ஓல்ட் லஷ்கி, தேவராஜா கஜீபன், கனகரட்ணம் கபில்ராஜ், ஜெயக்குமார் கிசாந்துஜன், திலகராசா சிவதர்சன், சந்திரமோகன் தேவபிரசாந்த், றொனி ஷெலுமில், சிவஞானம் டினோஜன், அன்ரோனிப் பிள்ளை கிசஜந்தன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அணியின் பயிற்றுநராக பி.லவேந்திரா உள்ளார். 

மட்டுப்படுத்தப்படாத ஓவர்களுடன் 2 நாட்களை கொண்ட 15 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி விளையாடியது. இதில் 11 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியடைந்ததுடன் 2 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டன. பெறப்பட்ட 11 வெற்றிகளில் 7 இனிங்ஸ் வெற்றிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைவிட 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்றது, 

பரமானந்தம் துவாரகசீலன் 4 சதங்களைப் பெற்று மிகவும் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரராக உள்ளார். செபமாலைப்பிள்ளை ஜெனி பிளமிங் 2 சதங்கள், தேவராஜா கஜீபன், மணிவண்ணன் சிந்துர்ஜன் ஆகியோர் தலா 1 சதங்களை பெற்று துடுப்பாட்ட வரிசை பலப்படுத்துகின்றனர். 

கனகரட்ணம் கபில்ராஜ், பரமானந்தம் துவாரகசீலன், தேவராஜா கஜீபன் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாகவும், ரவீந்திரன் லோகதீஸ்வரன், அருள்நந்தன் கானாமிர்தன், மணிவண்ணன் சிந்துர்ஜன், இராஜசிறிபிரிய பிரிசங்கர் சுழற்பந்துவீச்சாளர்களாகவும் உள்ளனர். அணித்தலைவர் சஜீந்திரன் கபில்ராஜ் விக்கெட் காப்பாளராக இருக்கின்றார். 
ஒப்பிட்டு ரீதியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி துடுப்பாட்டத்தில் பலமான பணியாகவுள்ளது. 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 4 வருட அனுபவம் கொண்ட பத்திநாதன் நிரோஜன் தலைமையில் களமிறங்குகின்றது. அணியில் சிவராசா மதுசன் (உபதலைவர்), கணேசலிங்கம் நிதுசன், சிவபாலசுந்தரம் அலன்ராஜ், விஜிலியஸ் டினோஜன், சதாகரன் திரேசன், யோகராசன் கிருபாகரன், சதீஸ் கோமேதகன், உதயகுமார் பிரியலக்ஸன், சுரேஸ் கார்த்தீபன், சிறிஸ்கந்தராஜா கௌதமன், செல்வராசா மதுசன், சிவலிங்கம் தசோபன், அருன்சியஸ் தனுசன், விஜயகுமார் திசோத், கென்றிகுலஸ் தீபன்ராஜ், அமுதநாதர் சில்வெஸ்ரர் ஜெரோசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியின் பயிற்றுநராக எஸ்.சுரேஸ்மோகன் உள்ளார். 

மட்டுப்படுத்தப்படாத ஓவர்களுடன் 2 நாட்களைக் கொண்ட 12 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றிபெற்றது. 2 போட்டிகளில் தோல்வியும், 2 போட்டிகள் சமநிலையிலும் நிறைவடைய ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. வெற்றிபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகள் இனிஸ்ங் வெற்றி ஆகும்.

கொழும்பு சென்.பீற்றர்ஸ் அணியுடன் விளையாடிய 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.  

சிவபாலசுந்தரம் அலன்ராஜ் இந்த வருடத்தில் இரண்டு சதங்களை அடித்துள்ளார். யோகராசன் கிருபாகரன் (2 அரைச்சதம்) பத்திநாதன் நிரோஜன் (2 அரைச்சதம்) சதாகரன் திரேசன் (2 அரைச்சதம்) ஆகியோர் 400 ஓட்டங்களுக்கு மேல் இந்தவருடத்தில் பெற்றுள்ளனர். 

வலதுகை சுழற்பந்துவீச்சாளரான சிவராசா மதுசன் இவ்வருடத்தில் 67 விக்கெட்டுக்களை வீழ்த்தி? அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக உள்ளார். சதாகரன் திரேசன், யோகராசன் கிருபாகரன் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் அச்சுறுத்தவுள்ளனர். சிவபாலசுந்தரம் அலன்ராஜ் சுழல்பந்துவீச்சில் கலக்கி வருகின்றார். விஜிலியஸ் டினோஜன் விக்கெட் காப்பாளராக இருக்கின்றார்.

துடுப்பாட்டத்தில் பலம் பொருந்திய சென்.ஜோன்ஸ் அணியும், பந்துவீச்சில் பலம் பொருந்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் மோதும் இந்த போட்டி, ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .