2025 ஜூலை 17, வியாழக்கிழமை

25 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டி

Super User   / 2014 பெப்ரவரி 28 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}



-க.கிஷாந்தன்

நுவரெலியா மாவட்ட கோட்டம் 3 அப்பர் கிரன்லி தமிழ் வித்தியாலயத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் கடந்த சனிக்கிழமை 22ம் திகதி நடைபெற்ற இல்ல விளையாட்டுப்போட்டியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு களமாக அமைந்தது.

இந்தப் பாடசாலையில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் இருப்பினும் இணைபாடவிதான செயல்பாடுகளிலும் பல சாதனைகள் மூலம் நன்மதிப்பை  பெற்றுள்ளது.

இப்பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தூரப்பிரதேசங்களில் இருந்து வருவதோடு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் தங்களுக்கு கிடைக்கும் ஊதியத்தில் கணிசமான தொகையை போக்குவரத்துக்கு செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.  இதனை கருத்தில் கொள்ளாமல் எமது சமூகத்திற்கு கல்விதான் விடுதலை என உழைக்கும் ஆசிரியர்களை பாடசாலையில் காணமுடிகின்றது. இப்பாடசாலை கட்டிட வசதி இன்றி தோட்டத்தில் கொழுந்து மடுவத்தோடு இணைக்கப்பட்ட ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்கிவருகின்றது.
90 மாணவர்கள் கல்விகற்கும் இந்த பாடசாலையில் அமர்ந்து படிப்பதற்கும், ஏனைய விடயங்களை மேற்கொள்வதற்கும் போதிய வசதி பாடசாலையின் உட்புறத்தில் இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். நுவரெலியா மாவட்டத்தில் பல பாடசாலைகளில் வளங்கள் இருக்கின்ற போதிலும் இவ்வாறான கஷ்ட பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு வளங்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. இவ்வாறான பாடசாலை நுவரெலியா பிரதேசத்தில் உள்ளது என்பது பலருக்கு தெரியாத விடயம்.

இப்பாடசாலையில் அதிபர் கே.கோகிலவாணி தலைமையில் இல்ல விளையாட்டு போட்டி நடைபெற்றது. இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்கள், பெற்றோர்களுக்கும் இடையில் இருக்கின்ற உறவு முறை பாடசாலை வெற்றிக்கு எடுத்து காட்டாகவே அமைகின்றது. எனவே மலையக அரசியல் தலைவர்களும், நுவரெலியா மாவட்ட கல்வி அதிகாரிகளும் இப்பாடசாலையில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து இப்பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.

நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் பிரதம அதிதியாக கோட்டம் 3 கல்வி பணிப்பாளர் ராஜரட்ணம், சிறப்பு அதிதியாக டயகம இல 2 பாடசாலை அதிபர் நடராஜ், எல்பியன் பாடசாலை அதிபர் பாலகிருஸ்ணன், கிளைஸ்டல் அதிபர் வீ.கலையரசி, டெல் அதிபர் எம்.ராஜேஸ்வரி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்;. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வெற்றி கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது விளையாட்டு போட்டியை ஆசிரியர் ரஞ்சித்குமார் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடதக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X