2025 ஜூலை 05, சனிக்கிழமை

அரையிறுதியில் புத்தளம் லிவர்பூல் கழகம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் விம்பிள்டன் அணிக்கும் லிவர்பூல் அணிக்குமிடையில் நடைபெற்ற மற்றுமொரு கால்பந்தாட்ட போட்டியில், புத்தளம் நகரில் தொடர்ந்து நான்கு வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்த புத்தளம் லிவர்பூல் கழகம் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கான தகுதியை பெற்றுள்ளது.

புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தி வரும், புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான மர்ஹூம் எஸ்.என்.எல். அப்துல்லாஹ் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட தொடர் ஒன்றில் மோதிய போதே லிவர்பூல் அணியானது இந்த வெற்றியை அடைந்துள்ளது.

புத்தளத்தில் இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ட்ரகன்ஸ் வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் லிவர்பூல் அணியுடன் மோதி தோல்வியுற்ற விம்பிள்டன் அணியானது இந்த போட்டியில் லிவர்பூல் அணியினை எவ்வகையிலாவது வெற்றி கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டதால் இந்த போட்டி  நிச்சயம் ஒரு சவால் மிகுந்த போட்டியாக அமையலாம் என கால்பந்தாட்ட ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போல இந்த போட்டியானது ஒரு போர்க்களமாகவே காணப்பட்டது.

போட்டி ஆரம்பித்து பத்தாவது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்காக கிடைக்கப்பெற்ற பெனால்டி உதையை அவ்வணியின் வீரர் எம். முசக்கீப் கோலாக மாற்றினார். எனினும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தினை காண்பித்த விம்பிள்டன் அணியானது தொடர்ந்து மூன்று கோல்களை செலுத்தி லிவர்பூல் அணியினை நிலைகுலைய செய்தவேளை இடைவேளைக்கான நேரம் வழங்கப்பட்டது.

இரண்டாவது பாதியில் லிவர்பூல் அணி கோல்களை போட கடுமையாக போராடியது. இவ்வேளை அவ் அணியின் நம்பிக்கை வீரரும், சிரேஷ்ட வீரருமான எம்.ஐ.எம். அலி, விம்பிள்டன் அணி வீரர் ஒருவரை  தாக்கியதாக கூறப்படும் குற்றத்துக்காக பிரதம நடுவரினால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பத்து வீரர்களுடன் ஆடிய லிவர்பூல் அணிக்கு மீண்டும் கிடைக்கப்பெற்ற மற்றுமொரு பெனால்டி உதையினை அவ்வணியின் மற்றுமொரு வீரர் எச்.ஆர். முஸம்மில் கோலாக்கினார். இந்நிலையில் போட்டியானது நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவு நெருங்குகையில், லிவர்பூல் அணியின் வீரர்கள் நம்பிக்கை இழந்த நிலையில், அதிகமான ரசிகர்களை  தன்னகத்தே கொண்ட லிவர்பூல் அணியின் ஆதரவாளர்களும் சோர்ந்து போன நிலையில் அவ் அணியின் புதிய வீரரும், கவர்ச்சியான ஆட்டத்தினை காண்பிப்பவருமான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். நஸ்ரி (இஸ்லாஹி) போட்டியின் கடைசி வினாடியில் போட்டியை சமப்படுத்துவதற்கான கோலினை செலுத்தியதால் இரு அணிகளும் தலா மூன்று கோல்களை பெற்று போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

வெற்றியைத் தீர்மானிக்கும் பொருட்டு பிரதம நடுவர் பெனால்ட்டி உதைக்கு அழைப்பு விடுத்தார். பெனால்டி உதையில் விம்பிள்டன் அணியின் மூன்று உதைகளையும் லிவர்பூல்  அணியின் சிறந்த கோல் காப்பாளர் எம்.ஜெ. பராஜ் தடுத்தி நிறுத்தி லிவர்பூல் அணிக்கான வெற்றிக்கு வழி வகுத்தார். லிவர்பூல் அணியினர் மூன்று தண்ட உதைகளை கோலாக்கினர். இதன் மூலம் பெனல்டியில் மூன்று கோல்களினால் லிவர்பூல் அணியானது வெற்றி பெற்றது.

போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். ஜிப்ரி, ஏ.ஓ. அஸாம் மற்றும் ஏ.எம். சபீக் ஆகியோர் கடமையாற்றினர்.

இந்த போட்டி தொடரின் பரபரப்பான முதலாவது அரை இறுதி போட்டியில் நியூ ஸ்டார்ஸ் அணியும் த்ரீ ஸ்டார்ஸ் அணியும் போட்டியிடவுள்ளன. இரண்டாவது அரை இறுதி போட்டியில் லிவர்பூல் அணியோடு வருடக்கணக்காக துவண்டு போயிருந்து தற்போது திறமை காட்டி வரும் அணியான ட்ரிபல் செவன் அணி எதிர்த்தாடவுள்ளது.

இந்த இரு அரை இறுதி போட்டிகளும் எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (12,13)  நடைபெறவுள்ளதாக புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .