2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

இறுதிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழகம்

குணசேகரன் சுரேன்   / 2017 ஜூன் 11 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில், துவாரகசீலனின் அதிரடியான துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சினால், ரஜரட்டைப் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி, 13 ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.  

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையில் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெற்று வருகின்றது. பல்கலைக்கழகங்கள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற்றன.  

இந்நிலையில், மேற்படி சுற்றுப் போட்டியின் அரையிறுதிப் போட்டியொன்றில், ரஜரட்டைப் பல்கலைக்கழகழத்தை எதிர்த்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி மோதியது.  

குறித்த அரையிறுதிப் போட்டி, மொறட்டுவை பல்கலைக்கழக மைதானத்தில், நேற்று (10) நடைபெற்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது. அதற்கிணங்கக் களமிறங்கிய ரஜரட்டை பல்கலைக்கழக அணி, 49.2 ஓவர்களில், 148 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் நிரோசன் 22, ராஜேக்சா 42 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், செந்தூரன் 4, துவாரகசீலன் 2, குருகுலசூரிய, ஜனகன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.  

பதிலுக்கு, 149 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, 35.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், துவாரகசீலன் ஆட்டமிழக்காமல் 69, குருகுலசூரிய ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இளங்களிங்கே 2, விக்னேஸ்வரன் 1, விபோதா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி இறுதிப் போட்டியில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணியுடன், எதிர்வரும் சனிக்கிழமை (17) மோதவுள்ளது. இந்தப் போட்டி, கொழும்பு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.  

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில், இறுதியாக 2004ஆம் ஆண்டே,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி சம்பியனாகியிருந்தது. அதன் பின்னர், இறுதிப் போட்டிக்குள் நுழையாமல் இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, 13 ஆண்டுகளின் பின்னர் தற்போது இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X