2026 ஜனவரி 10, சனிக்கிழமை

காரைதீவு விபுலானந்த மைதான அரங்கு ஆபத்து நிலையில்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 08 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

அம்பாறை மாவட்டம், காரைதீவு கிராமத்தில் அமைந்துள்ள விபுலானந்த விளையாட்டு மைதானத்திலுள்ள விளையாட்டு அரங்கு இன்று படுமோசமான சேதநிலைக்கு தள்ளப்பட்டு, பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளது. 

2008ஆம் ஆண்டு இரட்சண்யசேனை எனும் அமைப்பினால் 1 கோடி 30 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த அரங்கு, கடந்த பல ஆண்டுகளாக எந்தவிதமான முறையான பராமரிப்புமின்றி கைவிடப்பட்டுள்ளமை பெரும் கேள்விகளை எழுப்புகிறது.

மைதானத்தின் கூரை முற்றாக சேதமடைந்துள்ளது. தகரங்கள் காற்றில் அள்ளுண்டன. பல தகரங்கள் எந்த வேளையிலும் கீழே விழக்கூடிய அபாயம் உள்ளது. அரங்கில் உள்ள அறைகள் கதவுகள் இன்றி பாதுகாப்பற்று அசுத்தமாக காணப்படுகின்றன. அண்மையில் மூன்று கிரிக்கெட் கயிற்று பாய்கள் தீக்கிரையானதும் தெரிந்ததே.மலசலகூடங்களும் அவ்வாறே சேதமடைந்துள்ளன. மழைக்கோ ,வெயிலுக்கோ ஒதுங்க முடியாத ஒர் அரங்காக காட்சியளிப்பது கவலைக்குரியது. அத்துடன் கண்டனத்துக்குரியது.

சுற்றுப்பகுதிகளும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தினசரி இங்கு விளையாடி வரும் மாணவர்கள் மற்றும் விளையாட்டு கழக இளைஞர்கள் விபத்துகளுக்கு உள்ளாகும் அபாயம் தெளிவாகக் காணப்படுகிறது. ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதற்கான பொறுப்பை ஏற்கப்போவது யார்? என்பதே காரைதீவு மக்களின் நேரடி கேள்வியாக உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில்  முக்கிய விளையாட்டு மையமாக விளங்கிய இந்த மைதானம், அதன் அரங்கு இன்று அலட்சியத்தின் சின்னமாக மாறியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல தடவைகள் இது குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இந்நிலை கொண்டு செல்லப்பட்ட போதிலும், இதுவரை எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை என்பது அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக மக்கள் சாடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .