Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய விளையாட்டு விழாவில் நீளம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கத்தை, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம் மிப்ரான் பெற்றெடுத்தார்.
ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முதலிடம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிப்ரான்,7.72 மீற்றர் நீளம் பாய்ந்து தேசிய விளையாட்டு விழாவில் தனது முதலாவது தேசிய மட்ட வெற்றியைப்பதிவு செய்தார்.இந்நிலையில் வருடத்தின் சிறந்த மெய்வல்லுநர் வீரராகவும் மிப்ரான் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாண வரலாற்றில் தேசிய விளையாட்டு விழாவில் அதி சிறந்த மெய்வல்லுநர் வீரராக ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுதான் முதற் தடவையாகும். அந்த வகையில் சிறப்புமிக்க வீரருக்கான விருது மிப்ரானுக்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் நடைபெற்ற இலங்கை இராணுவத்தின் மெய்வல்லுநர் போட்டிகளில் புதிய போட்டிச் சாதனையை மிப்ரான் நிகழ்த்தினார். இதன்படி ஆண்களுக்கான நீளம் பாய்தலில் மிப்ரான், 7.75 மீற்றர்,தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டிச் சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ம் ஆண்டு தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற41ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் எம்.ஐ.எம்.மிப்ரான் 7.27 மீற்றர் பாய்ந்து மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தைப் பெற்றிருந்தார்.
மிப்ரான் இதற்கு முன்னர் நீளம் பாய்தலில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு நாவலப்பிட்டி ஜயதிலக்க விளை யாட்டு மைதானத்தில் நடைபெற்ற 22ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதிற் குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் அம்பாறை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட எம். ஐ. எம். மிப்ரான் 6.96 மீற்றர் தூரம் பாய்ந்து முதலாமிடத்தைப் பெற்றார். அத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அப்போதைய பிரதமர் டி.எம்.ஜயரத்னவிடமிருந்து பரிசாகப் பெற்றிருந்தார்.
தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் அதுவரை சாதனையாக இருந்த 6.92 மீற்றர் தூரத்தை முறியடித்தே மிப்ரான் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக் கத்தை சுவீகரித்திருந்தார்.
2010ம் ஆண்டு நடைபெற்ற கனிஸ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியிலும் மிப்ரான் தங்கப்பதக்கத்தினை பெற்றிருந்தார் . இதுதான் இவரது தேசிய ரீதியான முதலாவது பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் வீரராகவே அப்போட்டியில் பங்குபற்றினார்.
2011ம் ஆண்டு தியகம மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.09 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாம் இடம்பெற்று வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றிருந்தார்.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவரான மிப்ரான் . இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டு இராணுவ அணியின் சார்பாக பல போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும் பெற்றுள்ளார்.
மிப்ரானின் ஆரம்பகால பயிற்றுவிப்பாளராக அம்பாரை மாவட்ட மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜூதீன்இருந்துள்ளார். தற்போது இலங்கையின் சிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான வை.கே. குனரத்தவிடம் பயிற்சிகளைப் பெற்றுவரும் மிப்ரான் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையை நன்றியுடன் நினைவு கூறுகின்றார்.
பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் மூலமே தான் அறிமகமானதாகவும் பாடசாலை விளையாட்டாசிரியர்களான ஏ.ஜீ.பிர்னாஸ், எம்.ஐ. சிமாலைன் ஆகியோர் எனது திறமைகளை இனம் கண்டு தேசிய மட்டப்போட்டிகளுக்கு அறிமுப்படுத்தியதாகவும் தெரிவிக்கும் மிப்ரான் அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவிப்பதுடன் அப்போது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபராக இருந்த ஏ.சீ.சைபுதீன் அவர்களையும் நினைவு படுத்தினார்.
விளையாட்டில் ஈடுபடுவதற்கு இவரது வீட்டில் முழுமையான ஒத்துழைப்புக் கிடைத்திருக்கின்றது. தாய், சகோதரிகள் மற்றும் சகோதரியின் கணவர் எல்லோரும் பல வழிகளிலும் உதவி செய்திருக்கின்றனர்.
தனது விளையாட்டின் மூலம் தேசிய ரீதியில் தங்கப்பதக்கம் பெற்று அட்டாளைச்சேனை தாய் மண்ணுக்கும், கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ள மிப்ரானுக்கு பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நீளம் பாய்தலில் இலங்கைச் சாதனையாக இருந்து வருகின்ற 7.86 மீற்றர் பெறுதியை எதிர்காலத்தில் தன்னால் முறியடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் மிப்ரான் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள சர்வதேசப் போட்டிளில் பங்கு கொண்டு தாய் நாட்டுக்கு பதக்கங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.
மிப்ரானின் எதிர்பார்ப்பு நிறைவேற நாமும் பிரார்த்திப்போம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
43 minute ago
1 hours ago