2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சம்பியனாகின மட். மத்தி, புனித மிக்கேல், விவேகானந்தா மகளிர்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 27 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மிக்கேல்மென் விளையாட்டுக் கழகம், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடாத்திய, பாடசாலை மாணவர்களுக்கிடையிலான அஞ்சலோட்டச் சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில், மட்டக்களப்பு மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி என்பன முதல் இடத்தைப் பெற்றுள்ளதுடன், பெண்கள் பிரிவில் கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம், முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்த அஞ்சலோட்ட போட்டி நிகழ்வுகள், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல், சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட ஜேசுசபை துறவிகள் சமூகத்தின் உதவியுடன், மிக்கேல்மென் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு கல்வி வலயத்துடன் இணைந்து இந்த போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அஞ்சலோட்ட சுற்றுப்போட்டியில், மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 16க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள், சுமார் 450க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

14வயது,16வயது,18வயது, 20வயது ஆகிய பிரிவுகளில், 4x400 மற்றும் 4x100 ஆகிய பிரிவுகளில், ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்குமெனத் தனித்து, இந்த அஞ்சலோட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனடிப்படையில் பெண்கள் பிரிவில் முதல் இடத்தை கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயமும் இரண்டாம் இடத்தை புனித வளனார் பாடசாலையும் மூன்றாம் இடத்தை வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையும் பெற்றுக்கொண்டன.

ஆண்கள் பிரிவில் மட்டக்களப்பு மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளும் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாம் இடத்தை, சிவானந்தா தேசிய பாடசாலை பெற்றுக்கொண்டது.

இறுதி நிகழ்வானது, மிக்கேல்மென் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அருட்தந்தை ரி.சகாயநாதன் தலைமையில் நடைபெற்றதோடு, ஜேசுசபை துறவிகள் சபையின் மேலாளர் அருட்தந்தை போல்சற்குணநாயகம் அடிகளார், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன்,பிரதிக் கல்விப்பணிப்பாளர் கோவிந்தராஜா, உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் வி.லவகுமார் ஆகியோர் கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் வெஸ்லியோ வாஸ் கலந்துகொண்டார்.

இதன்போது, வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கங்களையும் வெற்றிக்கேடயங்களையும் வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .