2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சம்பியனாகியது மன்னார் சென்.அன்ரனிஸ்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன்

புதுக்குடியிருப்பு விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் வருடந்தோறும் நடாத்துகின்ற கால்பந்தாட்டத் தொடரில், இவ்வருடத்துக்கான சம்பியன்களாக மன்னார் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் தெரிவாகியுள்ளது. கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகத்தை இறுதிப் போட்டியில் தோற்கடித்தே மன்னார் சென். அன்ரனிஸ்  விளையாட்டுக் கழகம் சம்பியனாகியுள்ளது.

இறுதிப் போட்டியின் முதற்பாதியில் கோலோன்றினைப் பெற்ற உதயதாரகை விளையாட்டுக் கழகத்தின் றொஸ்கோ, தனது அணிக்கு முன்னிலையை வழங்கிய போதும், மன்னார் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் சுதர்சன் பெற்ற கோலின் மூலம் கோல் எண்ணிக்கை சமமானது. இந்நிலையில், போட்டியின் முடிவில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்று சமநிலையில் இருந்த நிலையில், சம்பியனாகும் அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு மத்தியஸ்தரினால் வழங்கப்பட்ட பெனால்டியில், 4-2 என்ற ரீதியில் உதயதாரகை விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்த மன்னார் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம், சம்பியனாகிக் கொண்டது.

இறுதிப் போட்டியின் நாயகனாக, சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆமோஸ் தெரிவானதுடன், தொடரின் நாயகனாக அதேயணியைச் சேர்ந்த சுதர்ஷன் தெரிவானார்.

இதேவேளை, மேற்படி இறுதிப் போட்டிக்கு முன்னர், புதுக்குடியிருப்பு விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்துக்கும் கிளிநொச்சி விளைபூமி விளையாட்டுக் கழகத்துக்குமிடையே இடம்பெற்ற காட்சிப் போட்டியில், 3-1 என்ற கோல்கணக்கில் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றிருந்தது.

மேற்படி இறுதிப் போட்டியில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வைத்திய கலாநிதி சிவமோகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

28 அணிகள் பங்கு கொண்ட இத்தொடரில், முதலாவது சுற்றானது விலகல் முறையில் இடம்பெற்றதுடன், அந்தச் சுற்று முடிவில் 16 அணிகள் தெரிவாகி, அவ்வணிகள், நான்கு அணிகள் கொண்ட  நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கிடையே லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்று, ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியிருந்தனர். பின்னர் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டிகளில், முல்லைத்தீவு சென்.யூட் அணியைத் தோற்கடித்து உதயதாரகை விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதுடன், முல்லைத்தீவு சந்திரன் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து, மன்னார் சென். அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .