2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

சம்பியனானது புத்தளம் ட்ரகன்ஸ் கழகம்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

மன்னார் வெள்ளிமலை விளையாட்டுக் கழகம் நடாத்திய, அணிக்கு 11 பேர்களைக் கொண்ட, எட்டு ஓவர்கள்  மட்டுப்படுத்தப்பட்ட சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில், புத்தளம் நகரின், பல வெற்றிகளை தனதாக்கி, சம்பியன் கிண்ணங்கள் பலவற்றைக் குவித்த,  ட்ரகன்ஸ் கிரிக்கெட் கழகம் சம்பியனாகியுள்ளது.

இந்த பிரமாண்டமான கிரிக்கெட் போட்டித் தொடரானது, மன்னார் சிலாபத்துறை வெள்ளிமலை பொது விளையாட்டு மைதானத்தில், அண்மையில் நடைபெற்றது.

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து, மொத்தமாக 32 கிரிக்கெட் கழகங்கள், இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்றன.

விலகல் முறையிலான இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், புத்தளம் ட்ரகன்ஸ் அணியும் கொண்டச்சி ஹமீதியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.நேர முகாமைத்துவத்தினைக் கருத்திற்கொண்டு, இறுதி போட்டி ஐந்து ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய, கொண்டச்சி ஹமீதியா அணி ஐந்து ஓவர்கள் நிறைவில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 48 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. வெற்றி பெறுவதற்கு 49 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பெடுத்தாடிய புத்தளம் ட்ரகன்ஸ் அணி, 3.2 ஓவர்களில், ஒரு விக்கெட்டினை மாத்திரமே இழந்து, வெற்றியிலக்கை அடைந்து சம்பியனாகியதோடு, கொண்டச்சி ஹமீதியா அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.

தொடர் நாயகனாக புத்தளம் ட்ரகன்ஸ் அணியின் வீரர் தினேஷும் இறுதிப்போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக ட்ரகன்ஸ் அணியின் வீரர் நாசிக்கும் தெரிவாகினர்.

போட்டிக்கு நடுவர்களாக, மன்னார் மாவட்ட கிரிக்கெட் சபையைச் சேர்ந்த ஜூட், றொபின்சன் மற்றும் நிபாக் ஆகியோர் கடமையாற்றினர். வெள்ளிமலை விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.அஸ்ஹர், செயலாளர் நஸீர், பொருளாளர்  எஸ்.எம்.வாஜித் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் இணைந்து இந்த சுற்றுப்போட்டியினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

முதலாம்  இடத்தினை பெற்றுச் சம்பியனான புத்தளம் ட்ரகன்ஸ் அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும்  பதக்கங்களும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டன. இரண்டாம் இடம் பெற்ற, கொண்டச்சி ஹமீதியா அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்துடன் வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X