2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பியனானது யாழ். பல்கலைக்கழகம்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 13 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டுப் பிரிவு நடத்திய, அழைக்கப்பட்ட அணிகளுக்கிடையில் 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் பற்றீசியன், சென்றலைட்ஸ், மானிப்பாய் பரிஸ், யூனியன்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகிய அணிகள் பங்குபற்றின. ஒவ்வோர் அணியும், 3 போட்டிகள் வீதம் விளையாடின. இதில், 3 போட்டிகளில் வெற்றியீட்டிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியும், 2 போட்டிகளில் வெற்றியீட்டிய சென்றலைட்ஸ் அணியும், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.

கடந்த 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து, 213 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜெயபாலசிங்கம் ஜனந்தன் 55, ரவிராசா ருக்ஸ்மன் 49, பற்றிக் டிக்ஸன் 26, தாரக்க சோமதிலக 25 ஓட்டங்களைப் பெற்றுகொடுத்தனர்.

 

பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக மகேந்திரன் மயூரன், சிவபாதசுந்தரம் அலன்ராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜெரிக் துசாந்த், என்.கிருபாகரன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

214 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணி, பல்கலைக்கழக அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 42.4 ஓவர்களில் 168 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், ஞானசீலன் ஜெரிக் துசாந்த் 39, துரைராசா ஜேம்ஸ் ஜான்ஸன் 32, எட்வேர்ட் எடின் 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பல்கலைக்கழக அணி சார்பாக, சானக குருகுலசூரிய 4 விக்கெட்டுகளையும், ரவீந்திரன் லோகதீஸ்வர், ஜெயராமன் ஸ்ரீகுமரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் தொடர்நாயகனாகவும், பல்கலைக்கழக அணியின் ஜெயபாலசிங்கம் ஜனந்தன், சிறந்த பந்துவீச்சாளராகவும் இறுதிப்போட்டியின் நாயகனாகவும் அதே அணியின் சானக குருகுலசூரியவும், சிறந்த களத்தடுப்பாளராக சென்றலைட்ஸ் அணியின் ஜ.ஜெரிக் துசாந்த்தும் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .