2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சம்பியனான கொக்குவில் மத்திய சனசமூக நிலையம்

குணசேகரன் சுரேன்   / 2019 மே 27 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரொன்றில் கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் சம்பியனானது.

கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், திருநெல்வேலி கிரிக்கெட் கழகத்தை வென்றே கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் சம்பியனாகியிருந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற திருநெல்வேலி கிரிக்கெட் கழகத்தின் தலைவர் பிரபவன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய திருநெல்வேலி கிரிக்கெட் கழகத்துக்கு, இரண்டாவது ஓவரில் இருந்து கண்டம் ஆரம்பமாகியது. நிருசிகன் வீசிய அந்த ஓவரில் திருநெல்வேலி கிரிக்கெட் கழகத்தின் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தப்பட, இரண்டு ஓவர்களில் ஒன்பது ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து அவ்வணி தடுமாறியது. இந்த இழப்பு நிருசிகனின் அடுத்த ஓவரிலும் தொடர்ந்தது. அந்த ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை நிருசிகன் வீழ்த்த, 3.4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் தடுமாறியது.

 ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த றொகான், அணித்தலைவர் பிரபவன் அணியினை தூக்கி நிறுத்த அரும்பாடுபட்டனர். எனினும் பிரபவன் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். றொகானும் ஆட்டமிழக்க 15.3 ஓவர்களில் 61 ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்டுகளை திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் இழந்திருந்தது. எனினும், ஒன்பதாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சுரேஸன், றஜிந்தன் அணி 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர். சுரேஸன் 30, றஜிந்தன் 36 ஓட்டங்களுடனும் வெளியேற திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் 32.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், நிருசிகன் 7, கஜானன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், முதலாவது விக்கெட்டை விரைவாக இழந்தது.  அதன்பின்னர் வந்த துடுப்பாட்ட வீரர்கள், அடித்தாடி விரைவாக வெற்றியைப் பெற எத்தனித்தனர். இதனால், தேவையற்ற விக்கெட் இழப்பை கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் சந்தித்து, 22.3 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில் ரி. பானுஜன் 39, கே. ஜனுதாஸ் 32, சத்தியன் 19, றொசான் 16 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சிவராஜ் 3, றொகான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இறுதிப் போட்டியின் நாயகன், சிறந்த பந்துவீச்சாளராக என். நிருசிகன் சிறந்த துடுப்பாட்டவீரராக ரி. பானுஜன், சிறந்த களத்தடுப்பாளராக திருநெல்வேலி கிரிக்கெட் கழகத்தின் வி. அசோக் ஆகியோர் தெரிவாகினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X