2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பு கொட்டுவ மைதானத்தின் அவலநிலை

எம்.இஸட்.ஷாஜஹான்   / 2017 ஜூன் 12 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக அமைந்துள்ள, நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் (கொட்டுவ மைதானம்) புனரமைப்பு செய்யப்படாமை தொடர்பாக, மைதானத்தைப் பயன்படுத்தும் விளையாட்டு வீரர்களும் பொதுமக்களும் குற்றச்சாட்டுத் தெரிவிக்கின்றனர்.  

இந்த விளையாட்டு மைதானத்தில், பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள், மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகள் நடாத்தப்படுவதோடு, மெய்வல்லுநர் போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கும், கால்பந்தாட்ட பயிற்சிகளுக்கும், பாடசாலை மாணவர்கள் உட்பட விளையாட்டு வீரர்கள், மைதானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.   

ஆயினும், மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுற்று மதில், சுற்றுவேலி உடைந்து பல ஆண்டுகளாகின்றன. மைதானத்தின் பார்வையாளர்களுக்கான மேடை, புதிதாக நிர்மாணம் செய்வதற்காக உடைக்கப்பட்டு, நீண்ட காலமாக கட்டப்படாமல் உள்ளது. மைதானத்தின் ஒரு பகுதியில், பழைமையான பார்வையாளர் மண்டபம் உள்ளது. அது தற்போது உடைந்து விழும் நிலையில் உள்ளது. மைதானத்தைப் பயன்படுத்துவோருக்கு, மலசலகூட வசதிகள் கிடையாது. வாகனங்களைச் செலுத்திப் பழகுவதற்கு, மைதானத்தை சிலர் பயன்படுத்துகின்றனர்.

சுற்றுவேலி உடைந்துள்ளதன் காரணமாக,  உடைந்த வேலிகளின் ஊடாக பெரும்பாலானவர்கள் மைதானத்துக்குள் நுழைகின்றனர். மைதானத்தின் சில இடங்களில், புற்பூண்டுகள் முளைத்துக் காணப்படுகின்றன. மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் உடைந்துள்ளதன் காரணமாக,  இரவு வேளையில் சட்ட விரோத செயல்களுக்காகவும் சிலர் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.  

நீர்கொழும்பு நகரம், வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் நகரமாகும். நீர்கொழும்பு நகரின் வர்த்தக பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்தின் அவல நிலைக்கு பல்வேறு தரப்பினரும் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக உள்ளனர்.   

நீர்கொழும்பு மாநகர ஆணையாளர்,  இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து, மைதானத்தை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X