2025 ஜூலை 05, சனிக்கிழமை

பட்டிருப்பு கல்வி வலயம் முதலாமிடம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கதிரவன், வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண பாடசாலைக்களுக்கிடையிலான மெய்வல்லுநர்ப் போட்டி நிகழ்ச்சிகள், திருகோணமலை கந்தளாய் லீலாரெட்ண விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.ரி.எம்.நிஷாமின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இவ்விளையாட்டு நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயம் 211 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் இவ்வெற்றியினை பெற்றுக் கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தினை 187 புள்ளிகளுடன் அம்பாறை கல்வி வலயம் பெற்றுக்கொண்டது.

பட்டிருப்பு கல்வி வலயத்தில் களுதாவளை மகா வித்தியாலயம் 10 தங்கபதக்கம் உட்பட தலா 9 வெள்ளி, வெண்கல பதக்கங்களைப் பெற்றதுடன் 94 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். செட்டிபாளையம் மகா வித்தியாலயம் 52 புள்ளிகளையும், மண்டூர் 13 விக்கினேஸ்வரா வித்தியாலயம் 26 புள்ளிகளையும், பட்டிருப்பு மத்தி மகா வித்தியாலயம் 24 புள்ளிகளையும், வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயம் 09 புள்ளிகளையும், மகிழூர் வித்தியாலயம் 03 புள்ளிகளையும், மண்டூர் 14 அ.த.க.பாடசாலை 03 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டியில் முதலிடத்தை பட்டிருப்பு கல்வி வலயம் 100 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், கிண்ணியா கல்வி வலயம் 92 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டியில் அம்பாறை கல்வி வலயம் 139 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், பட்டிருப்பு கல்வி வலயம் 111 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர். பாடசாலை ரீதியாக ஆண்கள் பிரிவில் முதலிடத்தை 62 புள்ளிகளைப் பெற்று திருகோணமலை மத்திய கல்லூரியும், 57 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு களுதாவளை மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தினை பெற்றது.

களுதாவளை மகா வித்தியாலய மாணவனான ஜெயரெத்தினம் ரிஷானன் 15வயதிற்கு கீழ்பட்ட பிரிவில் சம்பியன் ஓட்டம் பெற்றுள்ளதுடன் பல கிழக்கு மாகாண புதிய சாதனைகளும் இப்பாடசாலையால் முறியடிக்கப்பட்டது என பட்டிருப்பு கல்வி வலய உடற்கல்வி ஆசிரியர் நாகமணி ராமேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளைநாயகம் வாழ்த்து தெரிவிக்கையில், எமது பட்டிருப்பு கல்வி வலயம் இம்முயையும் சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டமையினை இட்டு நான் மகிழ்ச்சி அடைவதாகவும் இவ்வெற்றியினை பெற்றுத்தந்த வீர, வீராங்கணைகளுக்கும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர், ஒத்துழைப்பு வழங்கிய அதிபர்கள், பெற்றோர்களுக்கு நன்றியதலைத் தெரிவித்ததுடன், தேசிய மட்டத்திலும் வெற்றியினைப் பெற வேண்டுமென வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  எமது வலயம் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் இவ்வெற்றியினை பெற்றுள்ளது. ஆனால் எமது வலயத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட மைதானங்கள் இல்லை. பாடசாலைகளுக்கு போதுமான விளையாட்டு உபகரணங்கள் இல்லை. இதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கவனத்தில் கொண்டு முன்வந்து  இவற்றை பெற்றுத் தந்தால் இன்னும் பல வெற்றிகளை நாம் பெறுவது திண்ணம் என கூறியதுடன், நாம் எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியாமல் போனமையினை கவலை அடைவதாகவும் தெரிவித்தார். கோட்டத்திற்கு தலா ஒரு பாடசாலை மைதானத்தையாவது நவீன மயப்படுத்தியால் இன்னும் பல வெற்றிகளை பெறலாம் எனவும், தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .