2025 ஜூலை 05, சனிக்கிழமை

முதலிடம் பெற்றது திருகோணமலை மாவட்டம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தின் 2016ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவில், திருகோணமலை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் 42ஆவது விளையாட்டு விழா, கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் கீழுள்ள கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில், கடந்த வாரயிறுதியில் நடைபெற்றது.

இந்த விளையாட்டு விழாவில், திருகோணமலை மாவட்டம், 215 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தினையும், 193 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாமிடத்தையும், 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

இறுதி நாள் நிகழ்வில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில், அம்பாறை மாவட்ட அணியும் திருகோணமலை மாவட்ட அணியும் மோதின. இதில், 4-2 என்ற கோல்கணக்கில், திருகோணமலை மாவட்ட அணியை அம்பாறை மாவட்ட அணி வெற்றி கொண்டது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற கயிறு இழுத்தல் இறுதிப் போட்டியானது, ஆண்கள் பிரிவில், மட்டக்களப்பு மாவட்ட அணிக்கும் அம்பாறை மாவட்ட அணிக்குமிடையில் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட அணி வெற்றி பெற்றதுடன், பெண்கள் பிரிவில், அம்பாறை மாவட்ட அணிக்கும் மட்டக்களப்பு மாவட்ட அணிக்குமிடையில் இறுதிப் போட்டி நடைபெற்று, மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் அணி வெற்றி பெற்றது.

கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.தண்யடாயுதபாணியின் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில், கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் திருமதி ஆரியவதி கலபதி, சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபை தவிசாளர் எஸ்.கலபதி உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அதிகாரிகள், அமைச்சின் செயலாளர் உட்பட விளையாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .