2025 ஜூலை 05, சனிக்கிழமை

முல்லைத்தீவு வீரர்கள் கௌரவிப்பு

Gopikrishna Kanagalingam   / 2015 டிசெம்பர் 09 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகன் தவசீலன்


தேசிய மட்டத்தில் குத்துச்சண்டை மற்றும் கராத்தே போட்டிகளில் பங்குபற்றி பதக்கம் வென்ற, முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் 21 பேர் அண்மையில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில், வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை, வட மாகாணசபை உறுப்பினர் இரவிகரன் வழங்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய மட்டத்தில் சிறந்த நிலைகளைப் பெறும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் முன்னெடுப்பொன்றை, வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா இரவிகரன் செயற்படுத்தி வருகின்றார். 

அந்த வகையில், இவ்வாண்டுக்கான தேசிய மட்ட குத்துச்சண்டை மற்றும் கராத்தே போட்டிகளில் வென்ற, 21 வீரர்களை ஊக்குவிக்கும் நிகழ்வானது, முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. 

2015ஆம் ஆண்டுக்கான போட்டிகளில் 4 தங்கம், 5 வெள்ளி, மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை பெற்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கான, இரண்டு இலட்சம் பெறுமதியிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

இது தொடர்பில் இச்செயற்றிட்டத்தின் முன்னெடுப்பாளர் துரைராசா இரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
'இம்முன்னெடுப்பு தற்போது, ஈராண்டுகளாகத் தொடர்கிறது. ஈழத்து இளம் தலைமுறை, கல்வியில் சிறக்க வேண்டிய அளவிற்கு விளையாட்டிலும் சிறக்க வேண்டும். 

விளையாட்டுக்கான ஊக்குவிப்புகளாக விளையாட்டுக் கழகங்களை வளர்த்தல் மற்றும் பதக்கம் வெல்லும் மாணவர்களை சிறப்பித்து ஊக்கப்படுத்தல் போன்றவற்றையும் முன்னெடுக்கின்றேன்.

2014ஆம் ஆண்டில், 3 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என்று 8 பதக்கங்களைப் பெற்ற முல்லைத்தீவு மாவட்டம், இவ்வாண்டு, 4 தங்கம் 5 வெள்ளி 12 வெண்கலம் என்று, 21 பதக்கங்களை வென்றுள்ளது. இம்முன்னேற்றம், இனிவரும் ஆண்டுகளில் மேலும் சிறக்கவேண்டும்.

திறமையுள்ள விளையாட்டு வீரர்கள், ஊக்குவிக்கப்படும் போது, எமது மாவட்டத்திலும் இனிவரும் காலங்களில் நேர்;த்தியான விளையாட்டு அணிக் கட்டமைப்புகளைக் காணமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று விளையாட்டு வீரர்களுக்கான கருத்துக்களை வழங்கினார். 

அதன் பின்னர் இரு விளையாட்டு வீரர்களுக்கான மிதிவண்டிகளும் ரவிகரன் அவர்களால் வழங்கப்பட்டது. 
மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வசிகரன், கரைதுறைப்பற்று விளையாட்டு உத்தியோகத்தர் மாதவராசா, குத்துச்சண்டை பயிற்றுநர் நாகேந்திரம் உட்பட பெற்றோர், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வு, மாவட்ட விளையாட்டு அலுவலர் தனுராச்சின் சேவை நலன் பாராட்டுதலோடு நிறைவு கண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .