R.Tharaniya / 2025 நவம்பர் 02 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்று பதக்கம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தி பெருமை சேர்த்துள்ள வடமராட்சியை சேர்ந்த மிதுன்ராஜின் சாதனையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (01) அன்று பருத்தித்துறையில் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா - ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் கடந்த 24.10.2025 ஆரம்பமாகி இடம்பெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுனர் சிரேஷ்ட சம்பியன்ஷிப் போட்டி தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த ஹாட்லி கல்லூரி மாணவனும் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழக வீரருமான சுசீந்திர குமார் மிதுன்ராஜ் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.68 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
நீண்ட காலத்திற்கு பின்னர் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் சர்வதேச ரீதியில் இலங்கை சார்பில் பங்கேற்று பதக்கம் வென்றமை வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது.
அந்த வகையில் தாயகம் திரும்பியுள்ள வடமராட்சி மண்ணின் மைந்தனான மிதுன்ராஜின் சாதனையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் சனிக்கிழமை (01) அன்று மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை சித்தி விநாயகர் (பெரிய பிள்ளையார்) ஆலயத்தில் காலை 10.00 மணியளவில் இறை வழிபாட்டை தொடர்ந்து சாதனை வீரனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து திறந்த வாகனத்தில் சாதனை வீரன் மிதுன்ராஜ் ஏற்றப்பட்டு மங்கல வாத்திய மரியாதையுடன் சூரிய மஹால் திருமண மண்டபம் வரை பிரதான வீதியூடாக அழைத்து செல்லப்பட்டு மதிப்பளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. வழி நெடுகிலும் வர்த்தகர்கள், பருத்தித்துறை முச்சக்கர வண்டி சேவை சங்கத்தினர்,பொது மக்கள் மிதுன்ராஜிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தது பாராட்டு தெரிவித்தனர்.
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்தை சேர்ந்த அரவிந்தன் தலைமையில் சூரிய மஹால் மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் ஹாட்லி கல்லூரி முன்னாள் அதிபர் த.கலைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்தினர், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் சார்பில் அதன் தலைவர் கு.மகாலிங்கம் உள்ளிட்டோர் சாதனை வீரன் மிதுன்ராஜிற்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மதிப்பளித்தனர்.
மிதுன்ராஜின் பயிற்றுவிப்பாளர் வ.ஹரிகரன் மற்றும் நா.முகுந்தன் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் பிரதம விருந்தினராக வும் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சிறப்பு விருந்தினர்களாகவும் யோகாசன ஆசான் ம.இரத்தினசோதி மற்றும் பருத்தித்துறை வர்த்தகர் சங்க பொருளாளர் ஆதித்தன் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் மா.முரளி, மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள்,பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக வீரர்கள், வர்த்தகர்கள்,பொதுமக்கள், மிதுன்ராஜின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




எஸ் தில்லை நாதன்
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago