Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அஸ்ரப் 10.60 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
அஸ்ரப் தங்கப்பதக்கத்தைப் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலத்த போட்டிக்கு மத்தியில் இரண்டாமிடம் கிடைத்தது.
இவ்வருடம், இந்தியாவில் இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், 100 மீற்றர் ஓட்டத்தில், வெண்கலப் பதக்கம் பெற்ற அஸ்ரப், அஞ்சல் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தையும் பெற்றிருந்தார். இதன்மூலம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற்ற வரலாற்றுச் சாதனைக்கும் சொந்நக்காரனாவார்.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய விளையாட்டு விழாவில், 100 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்தார். அதேபோன்று 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அஸ்ரப், 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப்பதக்கத்தைப் பெற்றார். 2014ஆம் ஆண்டும் தேசிய விளையாட்டு விழாவில், அஸ்ரப் 100 மீற்றர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருக்கின்றார்.
2011ஆம் ஆண்டு தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 23ஆவது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் பெற்று பிரகாசித்தமை குறிப்பிடத்தக்கதாகும். 100 மீற்றர் ஓட்டத்தில், 11.00 செக்கன்களில் ஓடி முதலாமிடத்தையும், 200 மீற்றர் ஓட்டத்தில் 22.20 செக்கன்களில் ஓடி முதலாமிடத்தையும் பெற்று தங்கப்பதக்கத்தினை சுவீகரித்திருந்தார்.
தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவர் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடம் பெற்றிருப்பது வரலாற்றில் இதுதான் முதற் தடவையாகும்.
கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றதோடு, குருநாகலில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு தின விளையாட்டு விழாவில், 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பொத்துவில் பிரதேசம் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமமாகும். இந்தப் பிரதேசத்திலிருந்து அவ்வப்போது பல சாதனையாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். அந்த வகையில், விளையாட்டுத்துறையில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.அப்துல் மஜித், றக்பி விளையாட்டில் தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடியதோடு அந்த அணிக்கு தலைமை தாங்கியும் உள்ளார்.
கிழக்கு மாகாணமே, அறியாத, அங்கு விளையாடப்படாத றக்பி விளையாட்டில் பொத்துவிலைச் சேர்ந்த எஸ்.எஸ்.பி. அப்துல் மஜித் தேசிய அணியில் விளையாடியது முழுக் கிழக்கு மாகாணத்துக்கே இன்று வரை பெருமை தரும் விடயமாகும். அந்த வகையில் பொத்துவில் மத்திய கல்லூரியிலிருந்து இலங்கையின் ஓட்ட வீரராக ஏ.எல்.எம்.அஷ்ரப் இன்று பிரகாசிக்கின்றார்.
அஸ்ரப், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், 100 மீற்றர் ஓட்டத்தில், மூன்றாமிடத்தினைப் பெற்றபோது, அவரது திறமைகளை வெளி உலகத்துக்கு காட்டவேண்டும். அவரை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக நாம் பொத்துவிலுக்குச் சென்று அவரை பேட்டி கண்டதுடன் அது தொடர்பாக ஊடகங்களுக்கும் நிறையவே எழுதியிருந்தோம். அன்று நாம் எழுதியது போன்று அஸ்ரப் இன்று தேசிய ரீதியில் பிரகாசி்த்து சர்வதேச ரீதியான போட்டியிலும் பதக்கம் பெற்றுள்ளார்.
91ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்திலும் ஏ.எல்.எம்.அஸ்ரப் 10.71 செக்கன்களில் ஓடி மூன்றாமிடம் பெற்று வெண்கலப்பதக்கத்தைப் பெற்றிருந்தார். அஸ்ரப் இப்போட்டியில் இலங்கை இராணுவத்தின் சார்பில் பங்குபற்றியிருந்தார்.
தனது விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பாடசாலை ஆசிரியராக இருந்த ஆரம்ப கால பயிற்றுவிப்பாளர் ஜின்னா மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் சப்ரின், தற்போதைய பயிற்றுவிப்பாளர் சுனில் குணரத்ன, தனது குடும்பத்தார் ஆகியோர் காரணமாக இருந்ததாக நன்றியுடன் அஸ்ரப் நினைவு கூறுகின்றார்.
இம்முறை, நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில், இலகுவாக தங்கம் பெறலாம் என எதிர்பார்த்ததாகவும் போட்டியில் பங்குபற்றும்போதுதான் போட்டியின் தன்மையை அறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கும் அஸ்ரப் எதிர்காலத்தில் வரக்கூடிய சர்வதேசப் போட்டிகளுக்காக முழுமையான பயிற்சிகளுடன் தயாராவதுடன் பதக்கங்களையும் தாய் நாட்டிற்கு பெற்றுக்கொடுப்பேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025