2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

எதிர்மன்னசிங்கம்

Kogilavani   / 2016 ஜூன் 22 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

1941 ஜூன் 22ஆம் திகதி, மட்டக்களப்பு மட்டிக்களியில் பிறந்தார் எதிர்மன்னசிங்கம். ஆரம்பக் கல்வியை மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும் பின்னர் அரசடி மஹா வித்தியாலயத்திலும் (தற்போதைய மகாஜனக் கல்லூரி) உயர்தரத்தை சிவானந்தாக் கல்லூரியிலும் கற்றார், கலைமானிப்பட்டத்தையும் முதுமானிப்பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

இவரது தந்தை செல்லத்தம்பி ஒரு கூத்துக் கலைஞராவார். அதனாலேயே கிருஷ்ணன் செல்லத்தம்பி எனப் பெயர்பெற்றார். தந்தையின் தாக்கம் இவரிலும் வெளிப்பட்டது. அமிர்தகழியில் உள்ள கூத்து மேடையில் 'யார் இந்த விஜயன்' என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதில் விஜயன் பாத்திரமேற்று 15ஆவது வயதில் மேடையேறினார். பல்கலைக்கழகக் கற்கைக் காலத்தில் நொண்டி நாடகத்தில் 'சொக்கன்' என்ற வேடமேற்று நடித்தார். இராவணேசன் நாடகத்தில் வாத்தியக்கருவிகளை இசைப்பவராகவும், குழுப்பாடகராகவும் தனது பங்களிப்பைச் செய்தார். அதீத நடிப்புத் திறமை வாய்க்கப்பெற்ற இவர், பின்னர் நாடகத்திலும் நடிப்பிலும் கவனம் செலுத்தாது விட்டுவிட்டார் என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

இவரது குரல் வளத்தைக் கருத்திற்கொண்டே இராவணேசன் நாடகத்தில் பின்னணிக் குரலிசைக் கலைஞராகப் பங்களிப்பு வழங்குமாறு வேண்டப்பட்டார். ஆயினும், பின்னாளில் அதைக் கூடத் தனது தொடர் கலைப் பங்களிப்புக்கான துறையாகத் தேர்ந்தெடுக்காது விட்டுவிட்டமைக்கு கலாசார உத்தியோகத்தராக கச்சேரியில் இணைந்து கொண்டமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

1971ஆம் ஆண்டு, மட்டக்களப்புக் கச்சேரியில் கலாசார உத்தியோகத்தராக இணைந்து கொண்டு பல்வேறு ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். அதற்கு வலு சேர்க்கும் விதமாக வடக்கு-கிழக்கு மகாண சபையின் கலாசார உதவிப் பணிப்பாளராக 1989ஆண்டு பதவியேற்று 2002ஆம் ஆண்டுவரை கடமை புரிந்தார். இக்காலத்தில் பல்வேறு பயன்மிகு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மாகாண கலையிலக்கியப் பண்பாட்டு வளர்ச்சிக்காகப் பணிபுரிந்தார்.

தமிழ் இன்னியம் என்பது மிகவும் கவனிப்புப் பெற வேண்டிய செயற்றிட்டங்களால் அலங்கரிக்கப்பட்டது என்பதை இசைத்துறை சார் நபர்கள் அனைவருமே அறிந்து கொள்வர். அழியும் நிலையில் இருந்த இசை வடிவங்களில் கவனிப்புப் பெறாத வாத்தியக் கருவிகள் அனைத்தையும் தருவித்துப் பின்தங்கிய ஆர்வமிகு மாணவர்கள் உள்ள பாடசாலைகளைத் தேடிக் கண்டுபிடித்து விநியோகித்தார். கலையிலக்கியப் பாரம்பரியங்களின் உயிர்ப்பைத் தக்க வைத்திருப்பது என்றும் கிராமங்கள்தான் என்பது எப்போதும் மறுக்க முடியாத உண்மை.

கூத்துப் பின்னணியைக் கொண்ட பல்வேறு நிகழ்வுகளை திணைக்களத்தின் உதவியுடனேயே செய்து அதை அப்போதைய தொழில்நுட்பத்தில் ஆவணமாக்கிய பெருமையும் இவரையே சாரும். செம்மொழி மாநாட்டில் கிழக்கிலங்கையின் பாரம்பரியச் சடங்கு முறைகள் என்ற தலைப்பில் இவர் வாசித்த ஆய்வுக் கட்டுரைகூட மிகவும் முக்கியமானதோர் ஆவணமே.

மட்டக்களப்பு மாநில உபகதைகள்- 1971
புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை - 1985
சிந்தாமனிப் பிள்ளையார் ஆலய வரலாறு - 2000
சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள் - மகுடம் வெளியீடு.

ஆகியன முக்கியமான புத்தகங்களாகும். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் புத்தகங்கள் தொடர்பில் 1977ஆம் ஆண்டு இங்லிஷ் மொழியில் செய்த ஆவணமும் கவனம் பெறவேண்டியதொன்றாகும். அத்துடன் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் வெளியீடு செய்யப்பட்ட „எதிர்மன்னசிங்கம் வாழ்வும் இலக்கியமும்... என்ற நூல் இவரைப்பற்றித் தெரிந்து கொள்வதுக்குப் பேருதவி புரியக் கூடியது.

அதிகாரம் இருக்கும் போது செய்ய வேண்டிய முக்கியமான பணிகளைச் செய்தால் மனசாட்சி உறுத்தாமல் ஓய்வுநிலை வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்கலாம் என்பதை எதிர்மன்னசிங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒவ்வொரு கலாசார உத்தியோகத்தரும் முன்வரல் வேண்டும்.

இந்த ஓயாப் பணியாளன் இன்று தனது 75வது வயதைக் கொண்டாடுகின்றான்.
தமிழ்மிரர் சார்பில் அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவர் வெளியிடவிருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் சிறப்பாக வெளியிட்டு வைக்க எமது பிரார்த்தனைகள்.

முஸ்டீன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .