Janu / 2026 மார்ச் 10 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் மிக வேகமாக எழுதக்கூடிய குழந்தை என்ற கௌரவத்தைப் பெற்று, மட்டக்களப்பைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் அப்டியல் ரயன் விக்டர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வின் டொனால்ட் விக்டர் மற்றும் கிறிஸ்டின் ஷிரோமினி விக்டர் தம்பதியினரின் மகனான இவர், தனது மூன்று வயதிலேயே தாயின் வழிகாட்டலில் வாசிக்கும் மற்றும் எழுதும் ஆற்றலை பெற்றுள்ளார். ரயனின் அசுர வேக எழுத்தாற்றலை கவனித்த அவரது பெற்றோர், இதனை உலக சாதனையாக பதிவு செய்ய முன்வந்தனர்.
இதையடுத்து, மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள திரு இருதயநாதர் மண்டபத்தில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மேற்பார்வையில் இதற்கான சாதனை முயற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் சிவ வரதகரன் உள்ளிட்ட அதிகாரிகள் நடுவர்களாக கலந்துகொண்டனர்.
இந்த முயற்சியின் போது, 3 மற்றும் 4 எழுத்துகளைக் கொண்ட 200 ஆங்கிலச் சொற்களை வெறும் 8 நிமிடங்களில் எழுதி அப்டியல் ரயன் விக்டர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனை உத்தியோகபூர்வமாக ஆய்வு செய்த நடுவர் குழு, புதிய உலக சாதனையாக அங்கீகரித்தது.
சாதனை படைத்த சிறுவனுக்குச் சான்றிதழ், நினைவு கேடயம், பதக்கம் மற்றும் அடையாளச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ரி.ஏ. யூலியன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பிரதி அதிபர் அருட்தந்தை மெருஷன் ஹென்ரிக் மற்றும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் பா. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்திச் சிறப்புரையாற்றினர்.
மேலும், கௌரவ விருந்தினர்களாக புதுவையூர் பு. தியாகதாஸ், 'சின்னஞ்சிறு கல்விமான்கள்' பாலர் பாடசாலை தலைமை ஆசிரியை ஜெ.எம். வலயட் மற்றும் 'Jez Reel Kids Garden International College' நிர்வாகப் பணிப்பாளர் பி.என். ஸ்டான்லி உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
எம்.எஸ்.எம். நூர்தீன்

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago