2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

112 அடி உயர ஆதியோகி சிலைக்கு கின்னஸ் அங்கிகாரம்

Gavitha   / 2017 மே 13 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்திலுள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள, 112 அடி உயர ஆதியோகி திருமுகச் சிலை, உலகிலேயே மிகப் பெரிய மார்பளவு சிலை என்று கின்னஸ் புத்தகம் அங்கிகரித்துள்ளது.

கின்னஸ் சாதனை புத்தகத்தில், “உலகிலேயே மிகப் பெரிய மார்பளவுச் சிலையின் உயரம் 34.24 மீற்றர் (112 அடி), அகலம் 24.99 மீற்றர் (81 அடி), நீளம் 44.9 மீற்றர் (147 அடி) ஆகும்.

இந்தச் சாதனையை, தமிழகத்தின் ஈஷா அறக்கட்டளை செய்ததாக, மார்ச் மாதம் 11ஆம் திகதி அன்று உறுதி செய்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சாதனை, ஈஷா யோகா மையத்துக்குக் கிடைத்துள்ள, 2அவது கின்னஸ் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, ஈஷா அறக்கட்டளை, 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி, 8,52,587 மரக்கன்றுகளை நட்டதற்காக, கின்னஸ் சாதனை அங்கிகாரம் பெற்றது.

இந்த திருமுகச் சிலையை வடிவமைக்க, இரண்டரை ஆண்டுகள் ஆனதாகவும் அதை நிர்மாணிக்க 8 மாதங்கள் மட்டுமே ஆனதாகவும் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

“மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் பிரம்மாண்ட அடையாளம்தான் இந்த முகம். மனிதர்கள் தன்னிலை மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினால், அதற்கானத் தீர்வை தங்களுக்குள்ளேயே தேடி உணர, ஆதியோகி ஓர் அடையாளமாக, குறியீடாக இருந்து ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளார். உலகின் முதல் யோகியான ஆதியோகி, மனிதனின் தன்னிலை மாற்றத்துக்கென ,112 வழிமுறைகளை வழங்கினார். அதன் குறியீடாகவே 112 அடி உயரச் சிலை அமைந்துள்ளது.

“யோக பாரம்பரியத்தில் சிவனை யோக விஞ்ஞானத்தின் மூலமான, முதல் யோகியாக, குருவாகப் பார்க்கின்றனர். இந்தியாவின் மேலும் 3 பகுதிகளில் 112 அடி உயர திருமுகச் சிலை அமையவும் வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X