2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

காவிரி நதி நீர்ப் பிரச்சினை: தமிழகத்துடன் "மல்யுத்தம்" நடத்தும் கர்நாடகம்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பகிர்வு பிரச்சினை இரு புறமும் உள்ள மக்களை ஏகத்திற்கும் பதற்றத்தில் மூழ்க வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நடைபெறும் போராட்டங்கள், பந்த் எல்லாமே அங்குள்ள தமிழர்களை அச்சத்தில் வாழ வைத்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே தீர்வு என்ற அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்க, கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷட்டரோ, "காவிரியில் தண்ணீர் திறந்து விட பிரதமர் மன்மோகன்சிங் போட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று காவிரி நதி நீர் ஆணையம், உச்ச நீதிமன்றம் என்று வேகமாக நடையைக் கட்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அவரே, "தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதும், தமிழகத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. "தமிழக மத்திய அமைச்சர்கள் (திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்) ஏன் இதனை கண்டிக்காமல் இருக்கிறார்கள்" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், "தன் சொந்த மாநிலத்திற்கு ஆதரவாகப் பேசிய கிருஷ்ணா மத்திய அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். ஆகவே அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்" என்று டொக்டர் ராமதாஸும் கோரிக்கை வைத்துள்ளனர், கண்டித்துள்ளனர். ஆனால் தி.மு.க.வோ, ஆளும் அ.தி.மு.க.வோ இதுபற்றி கருத்துக் கூறாமல் அமைதி காக்கின்றன.

இந்நிலையில் காவிரி நதிநீர் பகிர்வு பிரச்சினையில் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியதால், கர்நாடக மாநில அரசு மேட்டூர் அணைக்கு 9000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டது. பிறகு திடீரென்று அதை 5000 கன அடியாக குறைத்தது. இதற்கிடையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாஹர் அணையை கர்நாட விவசாயிகள் முற்றுகையிட்டார்கள். "பிரதமருக்கு நல்ல புத்தி வழங்கு" என்று தங்கள் மாநிலத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் முன்பு வித்தியாசமாக வழிபட்டார்கள். இந்நிலையில் இன்னும் அதை உஷ்ணப்படுத்தும் விதமாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா போன்றவர்களும் களத்தில் குதித்தார்கள். அதிலும் குறிப்பாக சதானந்த கவுடா, "உச்சநீதிமன்ற தீர்ப்பு நம் மாநிலத்திற்கு விரோதமாக வருமேயானால் இங்குள்ள அமைச்சர்கள், முதலமைச்சர் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றே கொந்தளித்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா - பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து காவிரி பிரச்சினை பற்றி பேசிவிட்டு வந்தார். "பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம்" என்பது கர்நாடகாவின் வாதம். ஆனால் "பேசிப் பார்த்து விட்டோம். நீங்கள் கேட்கவில்லை. அதனால் கோர்ட் மூலமே தீர்த்துக் கொள்வோம்" என்பது தமிழகத்தின் வாதம். இப்படி இரு மாநிலங்களுக்கும் இடையேயான காவிரி நீர் பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தமிழக காவிரி டெல்டா மாவட்டங்கள், குறிப்பாக தமிழகத்தின் "நெற்களஞ்சியம்" என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டம் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. மத்திய அரசிலிருந்து ஒரு குழு இரு மாநிலங்களுக்கும் சென்று விசாரித்துவிட்டுச் சென்றிருக்கிறது. கர்நாடகாவின் அணைகளில் தண்ணீர் ததும்புவதையும், தமிழக அணைகளில் தண்ணீரின் கொள்ளளவு குறைந்து சுருங்கிக் கிடப்பதையும் பார்த்து விட்டுத் திரும்பிச் சென்றிருக்கிறது.

மெட்ராஸ் ஸ்டேட்- மைசூர் ஸ்டேட்!
இவ்வளவு "சூடான" காவிரி பிரச்சினை எப்படி ஆறு போலவே நீண்டு கொண்டிருக்கிறது. காவிரி நீர் கர்நாடக மாநிலம் குடகு மலையில்தான் உருவாகிறது. ஆனால் அது பாய்ந்து ஓடும் பகுதிகள் பெரும்பாலானவை தமிழகத்திற்குள் உள்ளன. அப்போது இருந்த "மெட்ராஸ் ஸ்டேட்டிற்கும், மைசூர் ஸ்டேட்டிற்கும்" இடையே முதலில் இந்த காவிரி நதிநீர் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்டது. அதை 1892ஆம் வருட ஒப்பந்தம் என்று அழைக்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் மெட்ராஸ் ஸ்டேட்டின் (தமிழகம்) அனுமதியின்றி பாசன வசதிகளை பெருக்கிக் கொள்ளக்கூடாது என்பதுதான். அதாவது விவசாய நிலங்களை தமிழகத்தின் அனுமதியில்லாமல் அதிகரித்துக் கொள்ளாதீர்கள் என்பதுதான் முக்கிய ஷரத்து. ஆனால் இதில் பிரச்சினையை முதலில் கிளப்பியது மைசூர் ஸ்டேட்தான். முதன் முதலில் எங்கள் மாநிலத்திற்குள் கிருஷ்ணசாஹர் அணையைக் கட்டுவோம் என்று அடம்பிடித்து "காவிரி சர்ச்சையை" முதலில் தொடக்கி வைத்தது மைசூர் அரசுதான். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு இங்கிலாந்தில் காணப்பட்டது. அந்நாட்டில் உள்ள "மினிஸ்ட்ரி ஒஃப் இந்தியன் எபையர்ஸ்" என்ற துறையின் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது இரு மாநிலத்திற்கும் பலனளிக்கும் விதத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுதான் கிருஷ்ண சாஹர் அணையை மைசூர் ஸ்டேட் (கர்நாடகா) கட்டிக் கொள்ளும். அதற்கு இணையாக மேட்டூர் அணையை மெட்ராஸ் மாநிலம் கட்டிக் கொள்ளும் என்ற தீர்ப்பு. அப்படித்தான் 1924ஆம் வருட காவிரி ஒப்பந்தம் உருவானது. இதன் படி மைசூர் ஸ்டேட் புதிதாக 1.10 லட்சம் ஏக்கர் நிலம் வரை பாசன வசதிகளை பெருக்கிக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.

1924 ஒப்பந்தமும் நடுவர் மன்ற கோரிக்கையும்!
1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், 1959 வாக்கில் கர்நாடக மாநிலம் சர்ச்சைக் கொடியை தூக்கிப் பிடித்தது. "காவிரி நதிநீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தது. குறிப்பாக "கிருஷ்ணராஜ சாஹர் அணையைத் தொடர்ந்து ஹேமாவதி, கபினி அணைகள் கட்ட வேண்டும், 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம். அது எங்களை கட்டுப்படுத்தாது" என்பது கர்நாடக மாநிலத்தின் வாதம். அடுத்த சுற்றுத் தகராறுக்கான அஸ்திவாரம் போடப்பட்டது. இதைத் தீர்க்க அப்போதே ஐந்து முறை இரு மாநிலங்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்த தீர்வும் கிட்டவில்லை. சுதந்திரத்திற்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கர்நாடகாவின் வாதம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏன் தஞ்சை விவசாயிகள் தங்கள் வயிற்றில் அடிக்க கர்நாடக மாநிலம் முயற்சி செய்கிறதே என்று கோபத்தின் உச்சிக்கே போனார்கள். அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, தஞ்சாவூர் காரர். ஆகவே விவசாயிகளின் உணர்வுகளை எதிரொலித்த அவர் 1971இல் ஒரு முக்கிய கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்தார். அதுதான் காவிரி நதி நீர் பங்கீடு பற்றி தீர்ப்பு வழங்க ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை. இரு மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பங்கீடு பற்றி பிரச்சினை எழுந்தால், அதைத் தீர்த்து வைக்க இது மாதிரி நடுவர் மன்றங்களை அமைக்கும் அதிகாரம் இந்திய அரசியல் சட்டப்படியே மத்திய அரசுக்கு இருக்கிறது.

வந்தது காவிரி நடுவர் மன்றம்!
தமிழகத்தின் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டிற்கு போனார்கள். "எங்களுக்கு நடுவர் மன்றத்தை அமைக்க உத்தரவிடுங்கள்" என்று கோரிக்கை வைத்தார்கள். இதுபோன்ற காலகட்டத்தில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, "இன்னொரு முறை இரு மாநில முதல்வர்களும் இப்பிரச்சினை குறித்து பேசிப் பாருங்கள்" என்று ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனையை அன்று இந்திரா காங்கிரஸுடன் கூட்டணியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கேட்டார். அதனால் சுப்ரீம் கோர்ட்டில் நடுவர் மன்றம் கோரி போட்ட வழக்கை வாபஸ் வாங்க தமிழக முதல்வராக இருந்த அவர் உத்தரவிட்டார். அதன்படி அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதற்குள் மூன்று வருடங்கள் உருண்டோடின. 1974ஆம் வருடமும் வந்தது. இப்போது கர்நாடக மாநிலம் வேதாளம் போல் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது. இந்தமுறை "காவிரி நதி நீர் ஒப்பந்தம் 1924இல் போடப்பட்டது. 50 வருடம் முடிந்து விட்டது. ஆகவே அந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது" என்று புதுக் கரடி விட்டது. அந்த ஒப்பந்தம் மூலம் காவிரி நீரை தமிழகத்துடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று அறிவித்தது. இச்சிக்கலைத் தீர்க்க "உண்மை கண்டறியும் குழு" அமைக்கப்பட்டது. இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள். இப்பிரச்சினையைத் தீர்க்க "காவிரி ரிவர் வோட்டர் ஒத்தோரிட்டி" ஒன்றை அமைக்கலாம் என்றெல்லாம் அக்கூட்டங்களில் ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் உருப்படியான தீர்வு ஏதும் எட்டப்படவில்லை. இப்படியொரு சூழ்நிலையில், 1990 வாக்கில் முதல்வர்களின் பேச்சில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகவே நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதன்படி வி.பி.சிங் இந்தியப் பிரதமராக இருந்த போது 1990இல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

இடைக்காலத் தீர்ப்பும் தமிழகத்திற்கு எதிரான கலரவமும்!
நடுவர் மன்றத்தின் முன்பு தமிழகம் தண்ணீர் கேட்டு நின்றது. அதற்கு வந்த தலைவர்கள் அடிக்கடி மாறினார்கள் என்பது வேறு கதை. ஆனால் நடுவர் மன்றமோ, "இடைக்கால தீர்ப்பு வழங்க எங்களுக்கு அதிகாரமில்லை" என்ற நிலைப்பாட்டை எடுத்து விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற எண்ணிய தமிழகம் மீண்டும் இந்திய உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியது. "இடைக்கால தீர்ப்பு வழங்க அதிகாரம் இருக்கிறது" என்று உச்சநீதிமன்றம் சொல்ல, தமிழகத்திற்கு இறுதி தீர்ப்பு வரும் வரை 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாட மாநிலத்திற்கு உத்தரவிட்டது. வருடம் முழுவதும் எந்தெந்த மாதங்களில் எத்தனை டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் வரையறுத்தது. இந்திய நதிநீர் பிரச்சினைகள் வரலாற்றில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றங்களில், இடைக்கால தீர்ப்பு வழங்கிய ஒரே நடுவர் மன்றம் காவிரிக்காக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் மட்டுமே என்றால் மிகையாகாது. அப்போது இன்னொரு உத்தரவையும் நடுவர் மன்றம் கர்நாடக மாநிலத்திற்கு போட்டது. "இப்போது உங்கள் வசம் இருக்கின்ற 11.2 லட்சம் நீர்பாசன நிலங்களுக்கு மேல் விஸ்தரிக்கக் கூடாது" என்பதுதான் அந்த உத்தரவு. இந்த உத்தரவுகளையும் ஏற்க மறுத்து கர்நாடக மாநிலம் வம்பு பண்ண, இறுதியில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படியே ஊர்ஜிதம் செய்யப்பட்டது. பிறகு இடைக்கால தீர்ப்பை அரசிதழில் (கெஜட் நோட்டிபிகேஷன்) வெளியிடக்கூடாது என்று இந்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது கர்நாடக மாநிலம். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இதற்காக நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்தார். அதன்பிறகு காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. பங்காரப்பா கர்நாடக முதல்வராக இருந்த நேரத்தில் இதையொட்டி அம்மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்கு எதிராக பெரும்கலவரம் வெடித்தது.

காவிரி நதி நீர் ஆணையமும் வரைவு திட்டமும்!
ஆனால் இயற்கைத்தாய் தமிழகத்தின் பக்கம் நின்றாள். 1991 முதல் 1994 வரை காவிரி நதி பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால், தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீல் தட்டுப்பாடு வரவில்லை. நடுவர் மன்றம் அளித்த 205 டி.எம்.சி.க்கும் மேலாகவே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்தது. 1994இல் ஏறக்குறைய 394 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி மூலம் கிடைத்தது. 1995இல் மழை பொய்க்கவே நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பும் பொய்த்துப் போகுமோ என்ற அச்சம் தமிழகத்திற்கு ஏற்பட்டது. இதனால் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு கச்சிதமாக நிறைவேற்ற ஒரு தனி ஆணையம் வேண்டும் என்று உணரப்பட்டது. இந்திய பிரதமராக ஐ.கே.குஜ்ரால் இருந்த போது இதன் அடிப்படையில்தான் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கு தலைவராக இருப்பவர் பிரதமர். காவிரி நதி நீரில் பங்கு பெறும் கர்நாடகம், தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்களும் உறுப்பினர்கள். இந்த ஆணையம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்காக "குஜ்ரால் வரைவு திட்டம்" ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் எந்த மாநிலமாவது காவிரி நதி நீர் ஆணைய உத்தரவை மதிக்கத் தவறினால், அந்த மாநிலத்தின் அணைக்கட்டுகளை அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக காவிரி நதி நீர் ஆணையம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு அதிகாரமிக்க ஷரத்து இருந்தது. ஆனால் மாநிலத்திற்குள் உள்ள அணையை மத்திய அரசு எடுத்துக் கொள்வதா என்று கேள்வி எழுப்பப்பட்டு, இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்ற குரல் கிளம்பியது. அதனால் அந்த ஷரத்தை நீக்கி விட்டு, இந்திய பிரதமராக வாஜ்பாய் இருந்த போது காவிரி நதி நீர் ஆணையத்தின் "வரைவுத் திட்டம்" வெளியிடப்பட்டது. காவிரி நதி நீர் ஆணையம் "பல் இல்லாத ஆணையமாக" உருவானது இப்படித்தான்!

மன்னிப்புக் கேட்ட எஸ்.எம்.கிருஷ்ணா!
புதிதாக அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையத்தின் முதல் கூட்டம் 28.10.1998இல் பிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையில்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் தமிழக முதல்வராக கருணாநிதியும், கர்நாடக முதல்வராக ஜே.எச்.பாட்டீலும் பங்கேற்றார்கள். அங்கு வித்தியாசமான பிரச்சினை எழுந்தது. தமிழகத்திற்கு தண்ணீர் எவ்வளவு திறந்து விடப்படுகிறது என்பதை மேட்டூர் அணை பாயின்டில் அளப்பதா அல்லது பில்லிக்குண்டுவில் அளப்பதா என்ற சர்ச்சை உருவானது. தமிழகம் மேட்டூரில்தான் இருக்க வேண்டும் என்றது. கர்நாடகமோ பில்லிக்குண்டுவில்தான் இருக்க வேண்டும் என்றது. இரு மாநிலமும் இப்படி முஷ்டியை முறுக்கிக் கொண்டது. பிறகு வறட்சி காலங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற கேள்வியும் எழுந்தது. இப்படியே கேள்வி எழுப்பியே காவிரி நதி நீர் ஆணையத்தை கொச்சைப்படித்தியது கர்நாடக அரசு. கர்நாடகாவில் யார் முதல்வராக வந்தாலும் காவிரி நதிநீர் பங்கீட்டை எந்த நிலையிலும் மதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள். இந்நிலையில் 2002 வாக்கில் வெறும் எட்டாயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட மறுத்து கர்நாடக அரசு முரண்டு பிடித்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு போனவுடன், "கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத கர்நாடக அரசு பதவி விலக வேண்டும்" என்று கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க, அப்போது கர்நாடக மாநில முதல்வராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா (தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்) இந்திய உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார். கோர்ட் உத்தரவுப்படி 8000 கன அடி தண்ணீரை திறந்து விட்டார்.

காவிரி நதி நீர் இறுதி தீர்ப்பு!
இப்படி தமிழகம், கர்நாடக மாநிலத்துடன் நடத்திய போராட்டங்கள் கணக்கிலடங்காது. இது மாதிரி சூழ்நிலையில்தான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ஆம் வருடம் பெப்ரவரி 5ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறிப்பாக பிளானிங் கமிஷன் கூட்டத்திற்காக அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி டெல்லி சென்றிருந்த நேரத்தில் இந்தத் தீர்ப்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 577 சிட்டிங்குள், ஏழு வருடங்கள் சாட்சிகள் விசாரணை நடந்தது. ஸ்டார் சாட்சிகளாக பிரபல விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் போன்றோர் எல்லாம் இந்த நடுவர் மன்றத்தின் முன்பு சாட்சி அளித்தவர்கள். இந்த தீர்ப்பில் தமிழகத்தின் பல்வேறு வாதங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டன. காவிரி நதி நீர் பங்கீட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் போர்வெல் போட்டு எடுக்கப்படும் நிலத்தடி நீரையும் காவிரி நதிநீர் பங்கீட்டில் சேர்த்து கணக்கிட வேண்டும் என்று கர்நாடக அரசு வைத்த கோரிக்கையை நிராகரித்தது நடுவர் மன்றம். "நாங்கள் கொடுக்கும் தண்ணீரில் 200 டி.எம்.சி.யை (வெள்ள காலங்களில்) தமிழகம் கடலில் கலக்க விட்டு விடுகிறது. அதை அணை கட்டி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டியதுதானே" என்று ஒரு கருத்தைச் சொன்னது கர்நாடகம். அந்த கோரிக்கையையும் நடுவர் மன்றம் நிராகரித்தது. 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்று ஒரு சொத்தை வாதத்தை தூக்கிப் பிடித்தது கர்நாடக மாநிலம். அதையும் நிராகரித்த காவிரி நடுவர் மன்றம், "1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் சில ஷரத்துக்களின் அடிப்படையில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து 50 வருடங்கள் கழித்து இந்த ஒப்பந்தத்தை ரிவியூவ் பண்ணிக் கொள்ளலாம் என்றுதான் ஒப்பந்தம் கூறுகிறதே தவிர, அந்த ஒப்பந்தம் 50 வருடம் கழித்து காலாவதியாகிவிடும் என்று கூறவில்லை. ஆகவே அந்த சட்டங்களின் படி "ரிவியூவ்" பண்ணியே இப்போது இறுதி தீர்ப்பு வழங்குகிறோம்" என்று கூறியது நடுவர் மன்றம். கடைசியாக, "சரி, தண்ணீர் கொடுக்கிறோம். அதாவது நவம்பர், டிசெம்பர் மாதங்களில் கொடுக்கிறோம்" என்று நடுவர் மன்றத்திடம் கூறியது கர்நாடகம். அதாவது கர்நாடகத்தில் கிடைக்கும் சர்ப்ளஸ் தண்ணீரைக் கொடுக்கிறோம் என்பது இதன் பொருள். ஆனால் நடுவர் மன்றமோ, "தமிழகத்திற்கு ஜூன் முதல் செப்டெம்பர் வரைதான் சாகுபடிக்கு நீர் தேவை. அதனால் இந்த மாதங்களில் தமிழகத்திற்கு 134 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று இறுதித் தீர்ப்பில் கூறியது" நடுவர் மன்றம்! கர்நாடகத்தின் எல்லா வாதங்களையும் தவிடு பொடியாக்கிய நடுவர் மன்றம், காவிரியில் கிடைக்கும் மொத்த தண்ணார் 740 டி.எம்.சி. என்றும், அதில் 419 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது காவிரி நடுவர் மன்றம். இதில் கர்நாடக எல்லையில் உள்ள பில்லிக்குண்டு அளவீட்டுப்படி 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும். மீதியுள்ள 227 டி.எம்.சி. பில்லிக்குண்டுவிலிருந்து- காவிரி டெல்டா வரை கிடைக்கும் நீர்.

தேசியக் கட்சிகளுக்கும் தலை தூக்கிய "பிராந்திய பார்வை"!
இறுதி தீர்ப்பு வந்த பிறகும் கர்நாடக மாநிலம் அதை மதிக்கவில்லை. காவிரி நதி நீர் ஆணையம் அளிக்கும் உத்தரவுகளையும் நிறைவேற்றுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் உடனடியாக நிறைவேற்றுவதில்லை. இடைக்காலத் தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் கர்நாடகாவில் முதல்வராக இருந்தவர் பங்காரப்பா. அப்போது தமிழர்களுக்கு எதிராக பெரும் கலவரம் பெங்களூரில் அரங்கேறியது. பிறகு எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது கோர்ட் அவமதிப்பு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்திலேயே நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு பிறகு தண்ணீரை திறந்து விட்டார். இப்போது முதல்வராக இருக்கும் ஜெகதீஷ் ஷட்டரோ அப்படியொரு சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே உச்சநீதிமன்ற உத்தரவை அரைகுறை மனதுடன் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் இந்த 120 ஆண்டு கால காவிரி நதி நீர் பங்கீட்டுப் போராட்டத்தில் நடுவர் மன்றம், இடைக்காலத் தீர்ப்பு, காவிரி நதிநீர் ஆணையம், இறுதித் தீர்ப்பு என்று எவற்றையுமே ஒப்புக்கொள்ளாமல் அடம்பிடிக்கும் கர்நாடக மாநிலத்தில் மாறி மாறி தேசியக் கட்சிகளின் முதல்வர்களே பதவியில் இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கட்சிகளுக்கு பரந்த பார்வை இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் அது தேசியக் கட்சிகளுக்கும் "பிராந்திய பார்வையே" இருக்கிறது என்பது காவிரி பிரச்சினையில் கற்றுக் கொண்ட பாடம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X