Super User / 2011 ஜூலை 06 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
இன்றைய நிலையில் இலங்கை அரசாங்கத்தின் முதல் நிலை எதிரி யார் என்றால், அது விடுதலைப் புலிகளாக இருக்க முடியாது. சனல்-4 தொலைக்காட்சி தான் அந்த இடத்தைப் பிடித்துள்ளது என்பது மிகைப்பட்ட கருத்தல்ல.
வளைகுடாப் போரின் பின்னர் தான் அல்-ஜெஸீரா தொலைக்காட்சி உலகெங்கும் அறிமுகமானது. அதற்கு முன்னர் அரபு நாடுகளைக் கடந்து அதன் புகழ் பரவியிருக்கவில்லை.
வளைகுடாப் போர் பற்றிய வீடியோ காட்சிகளை அல்- ஜெஸீரா வெளியிட்டபோது தான் உலகம் அந்தப் போரின் பரிமாணம் எத்தகையது என்று உணர்ந்து கொண்டது.
அமெரிக்காவின் படை வலிமையையும் போராயுதங்களின் கோரத்தையும் அது உலகின் முன் கொண்டு சென்றது.
அதேபோலத் தான் பிரித்தானியாவின் சனல்- 4 தொலைக்காட்சியை முன்னர் அறிந்து கொண்டிராதவர்கள் தான் அதிகம். பிரித்தானியாவைத் தாண்டி வேண்டுமானால் ஐரோப்பாவில் சில நாடுகளில் அதனை அறிந்திருப்பார்கள். ஆனால் இன்று சனல்- 4 தொலைக்காட்சி உலகில் பெரும்பாலான நாடுகளில் அறியப்பட்ட ஒரு ஊடகமாக மாறியுள்ளது.
அதற்குக் காரணம், இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்து சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ காட்சிகள்இ ஆவணப்படம் என்பன தான் என்பதில் சந்தேகம் இல்லை.
அல்-ஜெஸீராவுக்கு வளைகுடா போர் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்தியதோ அது போன்றதோர் திருப்பத்தை, இலங்கையில் நடந்து முடிந்த போர் சனல்- 4 தொலைக்காட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது.
சனல் -4 தொலைக்காட்சி தயாரித்த 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப்படம் கடந்த மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகள் மத்தியில் முதல்முறையாக காண்பிக்கப்பட்டது.
பின்னர் அது ஐ.நா வளாகம், பிரித்தானிய நாடாளுமன்ற வளாகம் போன்றவற்றிலும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் கடந்த 14ம் திகதி சனல்-4 தொலைக்காட்சி இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பிய போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானியர்கள் அதைப் பார்த்தனர். இணையத்தளத்திலும் அது இலட்சக்கணக்கானோரால் பார்வையிடப்பட்டது.
பின்னர் சனல்- 4 தொலைக்காட்சியிடம் இருந்து உரிமம் பெற்று அந்த ஆவணப்படத்தை அவுஸ்ரேலியாவின் புகழ்பெற்ற ஏபிசி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அதுமட்டுமன்றி இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடேயும் இந்தவாரம் அதை ஒளிபரப்பவுள்ளது.
ஆக, மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்பட்ட இந்த ஆவணப்படம் இப்போது கோடிக்கணக்கான மக்களால் பார்வையிடப்படும் நிலைக்கு வந்துள்ளது. இந்த ஆவணப்படம் இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதை இலங்கை அரசாங்கம் பொய்யானது, போலியானது என்று கூறினாலும் அதை பலர் நம்பும் நிலையில் இல்லை என்பதே உண்மை.
அவுஸ்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பான சில மணிநேரங்களிலேயே அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மீள்விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இதே கோரிக்கை ஏனைய நாடுகளில் இருந்தும் எழும் நிலை உருவாகி வருகிறது.
இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்று போலியானது பொய்யாகத் தயாரிக்கப்பட்டது என்றெல்லாம் நம்ப வைக்க இலங்கை அரசாங்கம் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.
ஆண்களும், பெண்களும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக சுட்டுக் கொல்லப்படும் காட்சி அது.
சனல் -4 வெளியிட்ட ஆவணப்படத்தின் இந்தக் காட்சியில் சிங்களத்தில் சிலர் உரையாடுகின்றனர்.
ஆனால் கடந்தமாதம் 1ம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உண்மையான காட்சி என்று கூறி ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் இதே காட்சியில் தமிழில் உரையாடல் இடம்பெறுகிறது.
ஆக, அது முன்னரே பிடிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது என்று கூறுகிறது அரசாங்கம்.
இந்த உண்மையான வீடியோவை வைத்து சனல்-4 தொலைக்காட்சியின் வீடியோ பொய்யானது என்று நிரூபிக்கவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் அது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியமில்லை.
ஏனென்றால், உண்மையான வீடியோ என்று கூறி அரசாங்கம் வெளியிட்ட அந்தக் காட்சி, எடுத்த எடுப்பிலேயே கேள்விகளை எழுப்ப வைத்து விட்டது.
.jpg)
உண்மையானது என்று அரசாங்கத்தினால் கூறப்படும் வீடியோ பற்றி நிறையவே கேள்விகள் உள்ளன.
அது ஒளிபரப்பப்பட்டது ஒரு தனியார் தொலைக்காட்சியில். அதை அந்தத் தொலைக்காட்சிக்கு கொடுத்தது அரசாங்கத் தரப்புத் தான் என நம்பபப்படுகிறது.
தமக்கு உண்மையான வீடியோ கிடைத்து விட்டது என்று அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஒரு நிகழ்வில் கூறியிருந்தார். அத்துடன் அதைத் தாமே அந்த தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்ததாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல சீன செய்தி நிறுவனத்துக்கு கூறியிருந்தார். அது பிரித்தானியாவில் இருந்து தமக்குக் கிடைத்ததாகவும் அவர் டெய்லிமிரருக்கு தெரிவித்திருந்தார்.
ஆனால் மறுநாள் லங்காபுவத் செய்தி நிறுவனத்துக்கு தகவல் வெளியிட்ட இராணுவப் பேச்சாளர், தனியார் தொலைக்காட்சியிடம் இருந்து அதனை விசாரணைகளுக்காகப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதுமட்டுமன்றி அந்த வீடியோ உண்மையானதா என்று பாதுகாப்பு அமைச்சு ஆய்வு செய்வதாகவும், அது எங்கே இருந்து பெறப்பட்டது என்று தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கொடுக்கப்பட்ட வீடியோ உண்மையானதாக இருந்தால், அதை அரசாங்கம் ஏன் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன் முன்னதாக அதுவே உண்மையானது என்று கூறி விட்டு, பின்னர் விசாரணை மேற்கொள்வதாக கூறியது சந்தேகத்தை எழுப்புகிறது.
அதுமட்டுமன்றி, பிரித்தானியாவில் இருந்து பெறப்பட்டது என்று கூறிவிட்டு , பின்னர் அது எங்கிருந்து பெறப்பட்டதென்று தெரியவில்லை என்று கூறப்பட்டதும் சந்தேகங்களை எழுப்புகிறது.
உண்மையான வீடியோ அதுவாக இருந்திருந்தால், இலங்கை அரசாங்கம் அதை முதலில் சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்.
அதைச் செய்யாமல், தனியார் தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்து விட்டு ஒதுங்கிக் கொண்டது கேள்விகளை எழுப்புகிறது.
இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் வீடியோவில் மாற்றங்கள் செய்வது ஒன்றும் கடினமான காரியமில்லை. அப்படித் தான் சனல் -4 தொலைக்காட்சி செய்ததாக அரசாங்கம் கூறுகிறது. இப்போது அதே கேள்வி அரசாங்கத்தை நோக்கியும் எழுப்பப்பட வாய்ப்புகள் உள்ளன.
இருந்தாலும் எதற்காக இப்படி அவசர கோலத்தில் ஒரு வீடியோவை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று கேள்வி வருகிறது. அதற்கும் சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பிரித்தானியாவில் சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய பின்னர் இந்த ஆவணப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
அது கடந்தவாரம் அவுஸ்ரேலியாவில் ஏபிசி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவிருந்த தகவல் அரசசாங்கத்துக்குத் தெரியும். அத்துடன் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் அதனை வாங்கியிருப்பதும் அரசாங்கத்துக்கு தெரிந்திருந்தது. எனவே அந்தத் தொலைக்காட்சிகளில் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பாகாமல் தடுப்பதற்கான ஒரு உத்தியாக இதனை வெளியிட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
ஆனால் உள்ளூரில் உண்மையானது என்று கூறிவிட்டு வெளியிட்ட காட்சியை ஏபிசி நிறுவனத்திடமோ அல்லது இந்திய நிறுவனத்திடமோ அரசாங்கம் கொடுத்திருந்தால் அவை சில வேளைகளில் தமது முடிவைக் கைவிட்டிருக்கக் கூடும்.
ஆனால் அந்த வீடியோ உண்மையானது அல்லாமல் , மாற்றம் செய்யப்பட்டதாக இருந்தால் , அதை அந்தத் தொலைக்காட்சிகள் கண்டுபிடித்து விட்டால் அரசாங்கத்தின் பிரசாரங்கள் அனைத்தும் பிசுபிசுத்துப் போய்விடும்.
ஒருகுழப்பதை உருவாக்குவதைத் தவிர இந்த 'உண்மை'யான வீடியோவினால் எதையும் சாதிக்க முடியவில்லை.
அரசாங்கம் இனிமேல் தான் அது உண்மையானது தானா என்று ஆய்வு செய்த பின்னர் கூட அது போலியானது என்று அறிவிக்க முடியாது. அப்படிச் செய்தால் கூட அரசுக்கே சிக்கல்கள் வரும்.
சனல்-4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் விடயத்தில் அரசாங்கம் கடுமையாக திண்டாடுவது உண்மை.
இந்தச் சிக்கலில் இருந்தும், நெருக்கடியில் இருந்தும் அரசாங்கத்தினால் மீள்வது ஒன்றும் இலகுவான காரியமாக இருக்காது .
அரசாங்கம் இது போலியானது என்று நிரூபித்தாலும் சரி, உண்மையானதை வெளியிட்டாலும் சரி அது போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்களாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவேளை, அது அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டாக இல்லாது போனாலும், அந்தப் போர்க்குற்றம் பற்றிய விசாரணைகளை உலகம் வலியுறுத்தவே செய்யும். அது கூட இலங்கைக்கு ஆபத்தைக் கொண்டு வந்து விடலாம்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் எங்கிருந்து முடிச்சுகளை அவிழ்க்க முனைந்தாலும், அது மேலும் சுருக்குகளையே ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
3 hours ago
7 hours ago
7 hours ago
Crazy Thursday, 07 July 2011 04:39 PM
nallathu nadakkaNum endu iRaivan virumbukiRaano??
Reply : 0 0
aj Thursday, 07 July 2011 07:20 PM
மிக தெளிவான பார்வை.
இந்த காணொளியில் வரும் உருவங்கள் மிக தெளிவாக இருக்கிறது. யார் அவர்கள் என்பது இலங்கை தீவில் வசிக்கும் மக்களுக்கு நன்கு தெரியும். அவர்களின் உருவத்துக்கும் மொழிக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. சில இடங்களில் குரல் கொடுப்பு போலி என்று தெளிவாக தெரிகிறது
முதலில் ஒன்று மறுநாள் ஓன்று என்று குழம்பி, உலகையும் குழப்ப நினைத்தார்கள் ஆனால் அது முடியமால் போனது.
ஆஸி மண்ணில் ஒளிபரப்பு செய்யப்படாமல் தடுப்பதுக்கு இவை வெளிவிட்டு இருந்தாலும் அங்கும் இவர்கள் தோல்வி அடைந்தார்கள். காரணம் இவர்களின் இந்த போலி முகம் உலகுக்கு நன்கு தெரிந்து இருக்கிறது. எதுவித ஒரு சர்வதேச ஆய்வும் செய்யப்படாமல் இவர்களே ஆய்வு செய்ததாக சொல்லிக்கொண்டு ஒளிபரப்பு செய்தார்கள். பிறகு ஆய்வு செய்கிறோம் என்று சொன்னார்கள் ஆனால் உலகம் அதை பெரிதா எடுத்துக்கொள்ளவில்லை. சனல் 4 வெளிவிட்ட ஆவணப்படம் பல மாதம், பல ஆய்வுகள் செய்து ஐநா உண்மை தெரிந்த பிறகு தான் வெளிவிட்டார்கள். லங்கா அரசாங்கம் சொல்லும் காணொளி உண்மை என்றால் ஏன் அதை திரு. பாலசூரிய விடுத்த சவாலை ஏற்கவில்லை ? ஏன் இன்னும் நிருபிக்கவில்லை. உள்ளூர் ஆய்வர்களை நம்புவதுக்கு உலகம் தயார் இல்லை ஒரு சுயாதீன சர்வதேச ஆய்வு தேவை. அதுக்கு அரசாங்கம் தயாரா?
அதைவிட இவர்கள் சொல்ல முற்படுவது போல, புலி தான் செய்து இருந்தாலும் இங்கு தேவை ஒரு சுயாதீன விசாரணை, இனபடுகொலை யார் செய்தலும் தேவை விசாரணை, நீதி தான். புலிகள் தான் செய்தார்கள் என்றும் உலகம் விட்டு விட்டுவிட போவது இல்லை.
இவர்கள் விரித்த வலை இவர்களுக்கே வந்து விழுந்தது. பொய், போலி முகம் உலகுக்கு தெரிந்தது. உண்மையை ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது.
Reply : 0 0
Abdul Basith Thursday, 07 July 2011 08:13 PM
சனல் 4ன் வீடியோக்கள் உண்மையில் புலிகள் வேலைதான். இந்த நாடகம் இவர்களுக்கு இது கைவந்த கலைதானே. புலிகளிடம் இருந்து இலங்கை மக்களை காப்பாற்றித்தந்த எங்கள் மான்புமிகு ஜனாதிபதியை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்.இந்த கபட நாடகம் புலம்பெயர் பினாமிகளின் வேலை. காரணம் தமிழ்மக்களிடம் பொய்ப்பிரசாரம்செய்து இன்னமும் பணங்களை கறந்து சொகுசானவாழ்க்கையை தொடரவேண்டுமே. இங்கு இந்தியாவோ அவுஸ்திரேலியாவோ அமெரிக்காவுக்கோ இங்குஎந்தக்கோள்விக்கும் இடமளிக்கமாட்டோம். இங்குஎல்லா மக்களும் சந்தேசமாக இருப்பது புலம்பெயர் பினாமிகளுக்கு சகிக்கவில்லை
Reply : 0 0
Mark Wilson Thursday, 07 July 2011 09:55 PM
ஈராக், ஆப்கான் மற்றும் முஸ்லிம் நாடுகளில் அமெரிக்க பிரித்தானிய இராணுவத்தினர் செய்த அட்டுழியங்கள் எத்தனையோ வீடியோக்கள் உள்ளது ..... இது எல்லாம் சனல் 4 டிவிக்கு தெரியாதா ?
Reply : 0 0
Anastraj Friday, 08 July 2011 01:27 AM
காலத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. தெய்வம் யாவும் அறியும். அந்த தெய்வம் என்றோ ஒருநாள் பதில் சொல்லும். புலிகள் பயங்கரவாதிகள் என்பதை சொல்பவர்கள் அரசாங்கம் பொதுமக்களை கொன்றதை ஏன் ஏற்பதில்லை. பயங்கரவாதிகள் பிழை விடுபவர்கள், கொலை காரர்கள் என சர்வதேசத்தை நம்ப வைத்து அவர்களை சர்வதேசத்தின் ஆதரவோடு அழித்து விட்டீர்கள். புலிகள் மட்டும் சர்வதேச சட்டம் மதிக்க வேண்டும். நீங்கள் மீறினால் கேட்க கூடாது. இது என்ன சின்னபிள்ளை சண்டையா? நீங்கள் சொல்வதை வாய் மூடி கேட்டிருக்க சர்வதேசமும் தமிழரோ?
Reply : 0 0
pathmadeva Friday, 08 July 2011 01:28 AM
இக்கட்டுரை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும்.
Reply : 0 0
rishi004 Friday, 08 July 2011 03:00 AM
மேற்குலகம் சுயநலமாகத்தான் இருக்கும்............
Reply : 0 0
nakkiran Friday, 08 July 2011 09:39 AM
this is true to ordinary human, being. but this is lie, to arrogance in human.
Reply : 0 0
sahabdeen kinniya Saturday, 09 July 2011 05:01 AM
சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது .இருந்கதும் பூனைக்குள்ள புத்தியாவது புரிந்துணர்வு உள்ளோருக்கு இருக்கணும் .காலம்தான் பதில் சொல்லணும் ? இன்ஷா அல்லாஹ்.
Reply : 0 0
jan Sunday, 10 July 2011 03:40 AM
இது உண்மை ஆனால் பொய் . இது உலகிற்கு பெரிய விடயமாக வரும் ஆனால் வராது. வரும் ஆனால் வராது!
Reply : 0 0
mafas Sunday, 10 July 2011 06:27 PM
புலிகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேசம் புலிகளினால் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்குமா??? இது தானா நீதி?
Reply : 0 0
sabi Wednesday, 13 July 2011 09:11 PM
முஸ்லிம், தமிழ், சிங்களம் என்று எப்போ நாம் பிரிவினைகளை மறக்கிறோமோ அப்போதான் எமக்கெல்லாம் விடிவு. அப்போதுதான் மக்களை பகடைக் காயாய் பயன்படுத்தி அரசியல் நடத்தும் அரசாங்கமும் இயக்கங்களும் ஒழிந்து போகும். நாமே இன்னும் இன்னும் பாகுபாட்டை வளர்த்தால் எமது சமூகம் சந்ததிகளே இல்லாமல் அழிந்துவிடும் சகோதரங்களே !
Reply : 0 0
visha Wednesday, 13 July 2011 09:13 PM
நல்லதா சொன்னிங்க நண்பரே. இந்த பாகுபட்டால்தான். நாம் இப்படி இருக்கிறோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago