Thipaan / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ்
kanaga.raj132@gmail.com
என்னதான் வெளியே இயற்கையான குளிர் அடித்தாலும், செயற்கையான குளிரையும் நடுநடுங்கவைக்கும் இயற்கையான குளிரையும் தாக்குப்பிடிப்பது என்றால், அப்பப்பா. அங்கு மட்டுந்தான் பிரச்சினை என்றால், இந்த விமானங்களிலும் ஏ.சிப் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது போங்க.
“என்னா அண்ணா ஏ.சி... கூட. அண்ணா... ஏ.சி பத்தாது” என்று மட்டும் யாருமே சொல்லல. ரிமோட் கொன்றோலையும் தேடல, ஒரு பட்டனை ஓர் அமுக்கு அமுக்குறாங்க... உதடுகளுக்கு நிறச்சாயம் பூசிக்கொண்டு ஓர் அக்கா வாறாங்க... “கான் ஐ ஹெல்ப் யூ?” (உங்களுக்கு உதவ வேண்டுமா) என்று கேக்குறாங்க... அக்காவோ மேல இருக்கிற டொப்ப (விமானத்துல ஆசனங்களுக்கு மேல இருக்கிற பட்டன்) கொஞ்சமாக திருகிட்டு போறாங்க.
“எனக்கு என்னமோ, நம்ம சொன்னா கேக்கவே மாட்டேங்கிறாங்க... உதட்டுகளுக்குச் சாயம் பூசியிருக்கும் அக்காமார் சொல்லாமலே திருகிவிட்டு போனா. தலையையும் ஆட்டிக்கிட்டு தாங்ஸ் வேற சொல்லுறாங்க. என்பது மட்டுந்தான் ஞாபகத்தில் வந்தது”
“ஹெல்ப் கேக்க நான் விரும்பல, ஏனா, அக்காவந்து டொப்ப திருக, அதுக்கு என்னாத்துக்குப்பா சும்மா, சும்மா அக்காமார்கள (விமானப் பணிப்பெண்கள்) கூப்பிடனுமுனு நானே திருகிலாம் என்று எழுப்பினால், அங்கையும் எனக்கு எட்டாத தூரத்துலதான் பட்டன் இருந்துச்சி.
இரண்டு மூன்று தடவைகள் முயன்று பார்த்தேன், சீட் என்னை விடவே இல்ல, இறுக்கிப் பிடிச்சுக்கிச்சு, ஏன் அக்காவை கூப்பிடனுனு நினைச்சுக்கிட்டே... ஓர் அக்காவைக் கூப்பிட்டு போர்வையொன்றையும் வாங்கிப் போர்த்திக்கொண்டு, நானும் தாங்ஸ் சொல்லிட்டு சற்றுத் திரும்பிப் பார்த்தேன்.
என்னப்போல, பலரும் அந்தப் போர்வைக்குள்தான் இருந்தாங்க. எனக்கு பக்கத்துல, அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் யாரும் இல்லாமையால், ரொம்ப சௌகரியமா முன்னுக்கு நடப்பதையும் பின்னால் நடப்பதையும் அவதானிக்க முடிந்தது”.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், நியூசிலாந்துக்குச் செல்லும் ஊடகவியலாளர் குழுவில் நானும் இணைக்கப்பட்டிருந்தேன். அதுவொரு வித்தியாசமான அனுபவம், நாங்க வேலையை முடித்த பிறகுதான், நீங்க எழும்புவீங்க. இல்லாட்டி உங்கள எழுப்புவாங்க. அவ்வளவு நேரம் வித்தியாசம் போங்க.
சரி, நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் அடங்கிய தூதுக்குழுவினருடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, வியாழக்கிழமை (29) பிற்பகல் 12.15க்கு புறப்பட்டார்.
அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் கதவின் ஊடாக விமான நிலையத்துக்குள் நுழைந்த பிரதமர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சாதாரண விமானத்தில், தனது தூதுக்குழுவுடன் பயணித்தார்.
தூதுக்குழுவில் அமைச்சர்களான சாகல ரத்னாயக்க, ஹரின் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே மற்றும் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும், மிகமுக்கியமான வர்த்தகப் பிரமுகர்களும் அடங்கியிருந்தனர்.
தூதுக்குழுவினரைத் தாங்கி, சரியான நேரத்தில் புறப்பட்ட விமானம், சிங்கப்பூரை நோக்கியே பறந்தது. தனது பாரியாரான மைத்திரி விக்கிரமசிங்கவின் அருகிலிருந்தே பயணித்த பிரதமர் ரணில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தனது ஆசனத்திலிருந்து எழுந்து, தூதுக்குழுவில் அடங்கியிருந்த முக்கியஸ்தர்கள் சிலருடன் ஏதேதோ உரையாடிக்கொண்டே பயணித்தார்.
அதன்பின்னர், தனது ஆசனத்துக்குச் சற்று தூரத்தில் அதேவகுப்பில் பயணித்த, டில்மா தேயிலை நிறுவனத்தின் தலைவர் மெரில் பெர்ணான்டோவின் ஆசனத்துக்கு அருகில்வந்து, புன்முறுவல் பூத்த முகத்துடன் நீண்டநேரத்துக்கு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.
அந்தத் தூதுக்குழுவில், இலங்கை ஊடகவியலாளர்களும் அடங்கியிருந்தனர். தூதுக்குழுவினருக்கும் எங்களுக்கும் இடையிலான வகுப்புகளை மறைப்பதற்காகப் போடப்பட்டிருந்த இடைப்பட்ட திரைச்சீலை விலகியிருந்தமையால் நடந்தவற்றை நன்றாகவே அவதானிக்க முடிந்தது.
4 மணித்தியாலங்களும் 10 நிமிடங்களும் கழித்து, அந்த விமானம் சிங்கப்பூரை அன்றிரவு 7.30 மணியளவில் சென்றடைய, அங்கிருந்து நியூசிலாந்தின் ஒக்லண்ட் விமான நிலையத்தைச் சென்றடைவதற்கான விமானத்தில் ஏறுவதற்காக, சுமார் 3 மணிநேரம் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அவசரம், அவசரமாக இல்லாவிடினும், விமானத்தில் ஏதாவது பெரிதாகக் கிடைக்கும் என்ற சப்புக்கொட்டில் சென்ற எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பலருக்கு, பசியாறுவதற்கு விமானத்தில் போதியளவு எதுவுமே கிடைக்கவில்லை என்பதை மட்டுமே, அவர்கள் நடந்து கொண்ட விதத்திலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
கொறிப்பதற்கும் கடிப்பதற்கும், சிங்கப்பூர் விமான நிலையத்தில் தேடிக்கொண்டிருப்பதை விடவும் (மிகவும் குறைந்த விலையில் தேடிக்கொண்டிருப்பதை விடவும்) நியூசிலாந்தின் ஒக்லண்ட் விமான நிலையத்துக்கான பதிவை மேற்கொள்வதிலேயே பாதிநேரம் முடிந்துவிட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் விமான நிலையத்தின் அதி முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறையிலேயே தனது தூதுக்குழுவினருடன் சுமார் 3 மணிநேரம் தங்கியிருந்தார் என்பதை, பின்னர் நாம் சந்தித்த முக்கியஸ்தர்கள் சிரித்துக்கொண்டே கூறும்போது அறிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது.
ஒரு மாதிரியாக, அங்கிருந்து வியாழக்கிழமை இரவு 11.10க்கு, சிங்கப்பூர் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் ஏறி, மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை முற்பகல் 11.50க்கு நியூசிலாந்தின் ஒக்லண்ட் விமான நிலையத்துக்கு சென்றுவிட்டோம்.
ஒன்பது மணிநேரமும் 10 நிமிடங்களும் அந்த விமானத்தில் பயணித்த சகல பயணிகளுக்கும் குளிர் தாங்கவில்லை. ஒவ்வொருவரும் போர்வைக்குள் சுருண்டுகொண்டு, தமது ஆசனத்துக்கு முன்பாக இருந்த ஆசனத்தில் பொருத்தப்பட்டிந்த இலத்திரனியல் உபகரணத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இன்னும் சிலர் படம் பார்த்தனர், இன்னும் சிலர் பாடல்களைக் கேட்டனர். இன்னும் சிலரோ தான் பயணிக்கும் விமானம் எவ்வளவு உயரத்தில் எந்த இடத்தில் பயணிக்கிறது உள்ளிட்ட விவரங்களை அறிவதற்கு ஆர்வமாய் இருந்தனர்.
எனக்கும், என்னோடு பயணித்த சிலருக்கும், பசி, கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றைக் கிள்ளியது. எத்தனை முறைகள் தான், அந்த விமானத்திலிருந்து அக்காமார்களையே பார்ப்பது. ஒன்னுமே புரியல, இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டேன்.
எவ்வளது நேரம் தூங்கினேன் என்று தெரியாது, குறுகிய நேரத்தூக்கமாக இருந்தாலும், சற்று அயர்ந்துவிட்டேன் என்றுமட்டுமே எனக்குப் புரிந்தது. ஏன்னா... என்னை யாரோ தட்டுவது போல இருந்தது.
போர்வையை விலக்கிட்டு பார்த்தா... அந்த அக்கா... கண்களை கசக்கிவிட்டுப் பார்த்தா தூக்கிக்கொண்டு நின்றாங்க, அவங்க தூக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்த சாப்பாட்டுத் தட்டை வாங்கிச் சாப்பிட்டு முடித்ததன் பின்னர் தான் பசிபோனது. அதுமட்டுமா? தூக்கமும் கலைந்துவிட்டது. அப்புறம் என்ன? சக நண்பர்களுடன் அரட்டைதான். அப்பத்தான் அந்தச் சம்பவமே நடந்தது.
எங்களுடன் பயணித்த பிரதமர் தலைமையிலான அதிமுக்கிய பிரமுகர்கள், கட்டுநாயக்கவிலிருந்து சிங்கப்பூர் பயணிக்கையில், அந்த விமானத்துக்குள் திரைச்சீலை விலகும் போது பிரமுகர்கள் பகுதியில் நடந்த சம்பாஷணைகளைப் பார்த்தோம். ஆனால், ஒக்லண்ட் சென்றபோது, விமானத்தில் வைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதுகொஞ்சம் ஸ்பெஷலா கஇருந்தது.
எனினும், அந்த விமானத்திலும் இரண்டு வகுப்புகளுக்கும் இடையில் மறைப்பதற்குத் திரைச்சீலை போடப்பட்டிருந்தது. அது விலகவில்லை. அதனை விலக்கிக்கொண்டு யாரோ ஒருவர் வந்தார்.
வந்தவர், அங்கும் இங்கும் இரண்டு மூன்று தடவைகள் போய்வந்தார். ஏதோ தேடுகின்றார் என்பது மட்டும் புரிந்தது என்ன தேடுகிறார். அல்லது, யாரைத் தேடுகின்றார் என்றுமட்டுமே புரியவில்லை. “சரி, சரி தெரிஞ்ச முகம்தானே. கேட்டுப்புட்டா போச்சினு நினைச்சிக்கிட்டு, ஊடகவியலாளர்களாகிய நாங்க கேட்டுவிட்டோம். ஏதாவது நமக்கு முடிந்த ஹெல்ப்ப பண்ணதான்” எனினும், முடியவில்லை.
அது வேறுயாருமல்ல, நம்முடைய பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வாதான். “பிரதமர் அலுவலகத்திலிருந்து எம்முடன் ஒரு லேடி வந்தாங்க... அவங்க இந்தப் பக்கம் ஏதும் வந்தாங்களா?” என்று கேட்டுவிட்டார். “எந்த லேடிய நாங்க கட்டோம்” எனினும், தேடிக்கொண்டு வந்த பிரதியமைச்சர், சற்று நேரம் தாமதித்து வந்து. “அந்த அதிகாரியான பெண் வந்துவிட்டார்” என்று புன்முறுவலுடன் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
“என்னடா, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் பயணித்த விமானத்தில், திரை விலகியிருந்த போது நடந்ததைப் பார்த்தோம், சிங்கப்பூரிலிருந்து ஒக்லண்டுக்கான விமானத்தில், திரையை விலக்கிக்கொண்டுவந்து தேடியதைப் பார்க்கிறோம்” என்று அந்த நேரம் என் மனது கூறியது.
அப்படிப் பயணம் தொடர்ந்து சுமார் 9 மணித்தியாலம் நீடிக்க, இன்னும் 10 நிமிடங்களில் இறங்கிவிடுவோம் என்ற சந்தோஷம் ஏற்பட, சரியாக வெள்ளிக்கிழமை 11.50க்கு விமானம், ஒக்லண்ட் விமான நிலையத்தைச் சென்றடைந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்று அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. படம்பிடிக்கும் மற்றும் ஒளிப்பதிவு செய்யும் ஊடகவியலாளர்களுக்கு சற்று முன் அனுமதிகிடைக்க, பிரதமர் ரணில் தலைமையிலான குழுவினர், விமானத்தைவிட்டு இறங்கியதன் பின்னரே நாங்கள் இறங்கவேண்டியதாயிற்று.
பிரதமர் ரணில் தலைமையிலான குழுவினரை, வரவேற்று அழைத்துச் செல்வதற்கு, நியூசிலாந்து ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் நேதன் கை வருகைதந்திருந்தார். அவருடன், நியூசிலாந்துக்கான இலங்கைத் தூதுவர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமாரும் பிரசன்னமாய் இருந்தார்.
நியூசிலாந்து அமைச்சர் நேதன் கை-க்கு, தன்னுடைய தூதுக்குழுவை பிரதமர் அறிமுகம் செய்துவைத்தார். இவர் என்னுடைய மனைவி, இவர் என்னுடைய ஆலோசகர் என்று அறிமுகம் செய்துவைக்க, நியூசிலாந்து அமைச்சரோ சகலரையும் புன்முறுவலுடன் வரவேற்றார்.
தனது தூதுக்குழுவிலிருந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரை மிகவிஷேடமாக அறிமுகஞ் செய்துவைத்த பிரதமர், இவர் ஒரு றகர் விளையாட்டு வீரர் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவை அறிமுகப்படுத்திவைத்துவிட்டு, றகர் விளையாட்டுக்கென்று இங்கு அமைச்சர் எவரும் இல்லை என்றும் நியூசிலாந்து அமைச்சரிடம் வினவினார். இதன்போது அங்கிருந்த சகலரும் சிரித்துவிட்டனர்.
“அந்த அறிமுகத்துடன், கோப்பி குடிக்கின்றீர்களா, அல்லது பிளேன் டீ குடிப்போமா?” என்று நியூசிலாந்து பிரதிநிதியொருவர், பிரதமரின் கேட்க. “டில்மா (டில்மா தேயிலைத்தூள்) இங்கிருக்கும் போது, நான் கேட்பது சரியா, தவறானு தெரியல. எனக்குன்னா கோப்பிதான் வேண்டும்” பிரதமர் கேட்டுவிட்டார்.
“கோப்பி... சீனி போட்டாவேண்டும்” என்று அந்தப் பிரதிநிதி கேட்க. “இல்லை... இல்லை... சீனி போடவேண்டாம்” என பிரதமர் கேட்டுக்கொண்டார். அவ்வாறான வரவேற்புடன், ஒக்லண்ட் ஸ்கைசிட்டி ஹோட்டலுக்கு அழைத்துவரப்பட்ட பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவினர், அங்கு தங்கவைப்பட்டனர்.
அந்தத் தூதுக்குழுவுக்குப் பின்னால் தான், நாங்க எல்லாம் பயணித்தோம். எனினும், எம்முடன் வந்தவர்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர். நானும், இன்னும் இருவர்தான் மிஞ்சினோம்.
“கடும் லேட்டாகிவிட்டது. குடிவரவை முடித்துகொண்டு போகலாமுனா. அங்கிருந்த அக்கா, வாழைப்பழத்தை விடவே இல்ல. ஒத்தக்காலுல நின்றாங்க”... இல்லாட்டி...
(தொடரும்...)
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago