Thipaan / 2016 மார்ச் 03 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
இணையத்தின் வளர்ச்சியின் காரணமாக, குறிப்பாக சமூக ஊடக இணையத்தளங்களின் அதிக பிரபலத்தன்மை காரணமாக, இணையம் மூலமான செயற்பாடுகள் என்பன அதிகரித்துவிட்டன. அவற்றில், இணையம் மூலமான போராட்டங்களென்பவை, அண்மைக்காலத்தில் அதிக கவனத்தை ஈர்த்தவையாகக் காணப்பட்டன.
உலகில் ஏதாவது முக்கியமான விடயமொன்று இடம்பெற்றால், ஊடகங்களால் நிபுணர்கள் எனப் பெயரிடப்படுபவர்கள் மாத்திரம் கருத்துச் சொல்வதை பொதுமக்கள் கேட்கின்ற நிலைமையை, சமூக ஊடக இணையத்தளங்கள் மாற்றியமைத்திருக்கின்றன. பெரும்பாலான நாடுகளில், எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி, தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
இவற்றின் காரணமாக, பிரதான ஊடகங்களால் கவனஞ்செலுத்தப்படாத ஒரு விடயம் என்று நம்புகின்ற விடயத்தைக் கூட, அதிக கவனம் பெறுகின்ற ஒரு விடயமாக மாறக்கூடியதாக மாற்றக்கூடிய சக்தியை, சமூக ஊடகங்கள் கொண்டிருக்கின்றன.
மேலே கூறப்பட்ட காரணங்களின் காரணமாக, இணையம் மூலமான போராட்டங்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கமோ அல்லது அமைப்பொன்றோ தவறாகச் செயற்படுகிறது என, சாதாரண பொதுமக்கள் எண்ணுவார்களெனில், அதற்கெதிராகக் கிளர்ந்தெழுவதற்கான வாய்ப்பை இணையம் வழங்கியிருக்கிறது. பேஸ்புக், டுவிற்றர் உள்ளிட்ட இணையத்தளங்கள், இதற்கான வாய்ப்புகளையும் வழங்கியிருக்கின்றன.
ஆனாலும், சமூக ஊடகமென்பது பிரபலத்துக்கான சந்தையாகவும் மாறியிருக்கின்ற நிலையில், எதிர்மறையான விடயங்களில் அதிகம் கவனத்தைச் செலுத்துகின்றாக ஒன்றாகவும் அது மாறியிருக்கிறது. அதன் காரணமாக, பொருத்தமற்றவற்றுக்கும் கிளர்ந்தெழும் பண்பும் அதிகரித்திருக்கிறது. எனவே தான் 'இணையப் போராளி' என்பது, ஒருவரைக் கௌரவப்படுத்துகின்ற சொல்லாக அன்றி, ஒருவரை ஏளனம் செய்கின்ற ஒன்றாக மாறியிருக்கிறது.
சில நேரங்களில், இணையப் போராட்டங்கள் மீதான நம்பிக்கையற்ற தன்மை, பொருத்தமானது என்றே எண்ணத் தோன்றுகிறது. முக்கியமற்ற விடயங்களுக்கெதிராகப் போராடுவதென்பது, பொதுவாக மாறிப் போனது. எனவே தான், 'எந்தவொரு தாக்கத்துக்கும் சமனானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு' என்ற நியூட்டனின் 3ஆவது விதியை, 'எந்தவொரு சம்பவத்துக்கும், அளவுக்கு அதிகமான சமூக ஊடக எதிர்வினை இருக்கும்' என்று நகைச்சுவையாகத் தெரிவிப்பார்கள்.
ஆனால், இணையப் போராட்டங்களால் எதையுமே செய்துவிட முடியாதா? அல்லது, இணையப் போராட்டங்களால் எல்லாவற்றையும் செய்துவிட முடியுமா?
அண்மையில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களை, இவ்விடயம் தொடர்பாக ஆராய்வது முக்கியமானது. ஒன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு, இல்லாது செய்யப்பட்டமை. இரண்டு, வெள்ளை ஒஸ்கார் என அழைக்கப்பட்ட இவ்வாண்டுக்கான ஒஸ்காரின் தொலைக்காட்சிப் பார்வையாளர் எண்ணிக்கை குறைவென அறிவிக்கப்படுகின்றமை.
யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் கல்விசார் ஊழியர்களும், டெனிம் ஜீன்ஸ், டீ-சேர்ட் அணியக்கூடாது, தாடி வளர்க்கக்கூடாது, வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் சேலை அணிய வேண்டும் உள்ளிட்ட விதிகளை, அந்தச் சுற்றறிக்கை கொண்டுவந்தது.
அது தொடர்பாக சமூக ஊடக இணையத்தளங்களில் கடுமையான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. அந்தச் சுற்றறிக்கைக்கு எதிராகவே அனேகமான கருத்துகள் காணப்பட்டதோடு, அது ஏன் தவறானது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. ஓர் இயக்கமாக அது வளர்ச்சியடையத் தொடங்க, பேஸ்புக்கில், அது தொடர்பான எதிர்ப்புணர்வொன்று உருவாகியது. அதனைத் தொடர்ந்து, செய்தி இணையத்தளங்களும் ஏனைய ஊடகங்களும், அது தொடர்பான செய்திகளை உள்வாங்க வேண்டிய தேவைக்கு உள்ளாகின.
இறுதியில், அந்தச் சுற்றறிக்கையை மீளப் பெற்றுக் கொள்வதாக, யாழ். பல்கலைக்கழகம் அறிவித்தது.
சமூக ஊடகங்களால் மாத்திரம் தான் அந்த முடிவு பெறப்பட்டதா என்றால், இல்லை. ஆனால், அந்த முடிவில் சமூக ஊடகங்கள் எந்தளவுக்குத் தாக்கம் செலுத்தின என்றால், ஏராளமான அளவு என்பது தான் பதிலாக அமைய முடியும்.
அடுத்ததாக, இவ்வாண்டின் ஒஸ்கார் விருதுகள், ஏராளமான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. வெள்ளையின நடிக, நடிகையர் மாத்திரமே நடிப்பு விருதுக்குத் தெரிவுசெய்யப்பட, 'ஒஸ்கார் மிகவும் வெள்ளையானது' என்ற கருத்துப்பட, இணையம் மூலமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஒஸ்கார் விருது வழங்கும் விழாவை, கறுப்பின நடிகர்கள் உட்பட சிறுபான்மையினத்தவர்கள் புறக்கணிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. அத்தோடு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கத் தெரிவுசெய்யப்பட்ட கிறிஸ் றொக் என்ற கறுப்பின நகைச்சுவையாளருக்கும் இந்த அழுத்தம் எழுந்தது. நிகழ்ச்சியைப் புறக்கணிக்கவில்லையென அறிவித்த அவர், ஆனால், தான் வழங்கவிருந்த ஆரம்ப நகைச்சுவையை மாற்றவுள்ளதாக அறிவித்தார்.
அதன்படி, ஒஸ்கார் விருதுகள் 28ஆம் திகதி இடம்பெற்றிருந்த போது, தனது ஆரம்ப நகைச்சுவையின் போது, ஏராளமான விடயங்களை கிறிஸ் றொக் தெரிவித்திருந்தார். ஹொலிவூட், இனவாதத் தன்மைகளைக் கொண்டது எனத் தெரிவித்த அவர், வெள்ளையின மக்களின் தெரிவு விருதுகளே இவையெனத் தெரிவித்தார். அதைவிட முக்கியமாக, இவ்வாண்டுக்கான ஒஸ்காரின் தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் எண்ணிக்கை, குறைவடைந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளில், ஒஸ்கார் விருது வழங்கும் விழாவுக்குப் பெறப்பட்ட குறைவான பார்வையாளர் எண்ணிக்கையாக இது அமைந்தது. கடந்தாண்டும் இதே சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னைய 6 ஆண்டுகளில் பெறப்பட்ட குறைவான தரப்படுத்தலை, கடந்தாண்டு ஒஸ்கார் ஒளிபரப்புப் பெற்றிருந்தது. இம்முறை, அதைவிடக் குறைவான அளவையே ஒஸ்கார் பெற்றது.
குறிப்பிடப்பட்ட இரண்டு விடயங்களுமே, சமூக ஊடகங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள், எதிர்ப்பு இயக்கங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட இரண்டு சம்பவங்களாகும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால், சமூக ஊடகங்களாலேயே எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்திவிட முடியுமா?
நிச்சயமாக இல்லை. சமூக ஊடகமென்பது வெறுமனே ஒரு கருவி மாத்திரமே. ஆகவே, நாட்டிலுள்ள மோசமான சட்டமொன்றை, சமூக ஊடகங்களினால் மாத்திரமே மாற்றிவிட முடியாது. ஆனால், அச்சட்டத்தை மாற்ற வேண்டுமென, மக்களின் பிரதிநிதிகளுக்கு உச்சக்கட்ட அழுத்தத்தை வழங்குவதற்கு முடியும்.
சமூக ஊடகங்களில்லாத சமுதாயத்தில், நிகழ்வொன்று இடம்பெறுமாயின், அதனை ஊடகங்கள் தெரிவிக்க வேண்டும். அதை வெளியிட்ட ஊடகம் மூலம் அறிந்து, அது தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அது தவறானது என்றால், எதிர்ப்பு வெளியிடுவது சிரமமானது.
உதாரணமாக, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை நசுக்கும் சட்டமூலமொன்றை அரசாங்கம் கொண்டுவரவிருக்கிறது என்றால், அதை ஊடகங்கள் வெளியிட வேண்டும். அரசாங்கத்துக்குச் சார்பாக ஊடகங்கள், அது பற்றிய செய்தியை வெளியிட மாட்டா. அல்லது அல்லது முக்கியத்துவம் குறைத்து வெளியிடும். எனவே, அது தொடர்பான செய்தியை வெளியிடும் ஊடகங்கள் மூலமாக அச்செய்தியை அறிய வேண்டும். அதே செய்தியை, தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரடியாகச் சந்தித்தோ, ஏனையோருடன் பகிர வேண்டும்.
போதுமானோரை அச்செய்தி சென்றடைந்த பின்னர், அது ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறைத்து ஆராய வேண்டும். அதன் பின்னர், அச்சட்டமூலம் தவறானது என்ற முடிவுக்கு வந்த பின்னர், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். அது தொடர்பாகத் திட்டமிடுவதற்கு நேரமொதுக்க வேண்டும். பின்னர், எங்காவது ஓரிடத்தில் ஒன்றுகூடி, தங்கள் பிரதேசத்துக்கான மக்கள் பிரதிநிதியிடம் எதிர்ப்பை வெளியிட வேண்டும். அந்தப் பிரதேசத்தில் அவர் இல்லையெனில், எதிர்ப்புத் தெரிவிப்பது இன்னமும் சிரமமாகிப் போகும்.
ஆனால், சமூக ஊடகங்களால், அச்செய்தி தொடர்பான செய்தியை, ஆயிரக்கணக்கான நண்பர்களுடன் உடனடியாகப் பகிர முடியும். அலுவலகத்தில் பணி புரிந்தவாறே அது தொடர்பாகக் கலந்துரையாட முடியும். நூற்றுக்
கணக்கானோருடன் ஒரே நேரத்தில் கலந்துரையாடும் வாய்ப்பும் ஏற்படும். அதன் பின்னர், ஜனாதிபதி தொடக்கம் பிரதேச மட்ட அரசியல்வாதி, ஊடகங்கள், ஏனைய செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடனடியாகவே அது தொடர்பாக தெளிவுபடுத்த முடியும் அல்லது எதிர்ப்பை வெளியிட முடியும். இதன் காரணமாகத் தான், சமூக ஊடகங்கள் மூலமான எதிர்ப்பென்பது, அதிக பயன்தரக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கை போன்ற நாடுகளில், இணையப் பயனர்களின் பரம்பல் 20 சதவீதத்தை விடச் சிறிது அதிகமாகவும், சமூக ஊடகப் பயனர்களின் சதவீதம், மொத்த சனத்தொகையில் 20 சதவீதத்தை விடக் விடக் குறைவாகவும் காணப்படும் நிலையில், மிகப்பெரியளவு மாற்றத்தை விரைவாக ஏற்படுத்துவதென்பது கடினமாகவே காணப்படுகிறது.
ஆனாலும், கடந்த ஜனாதிபதித் தேர்தல், புதிய அரசாங்கத்தின் முடிவுகள் மீது தாக்கம் செலுத்துதல், இப்போது யாழ். பல்கலைக்கழக ஆடைக்கட்டுப்பாடு விவகாரம் ஆகியன, இலங்கையிலும் இணையம் மூலமான போராட்டங்களுக்குச் சாத்தியம் காணப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. எனவே, அடுத்த முறை 'இணையப் போராளி' என அழைக்கப்படும் போது, நாமெல்லோருமே, அதுபற்றி வருத்தமடையத் தேவையில்லை, மாறாக, பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.
17 minute ago
23 minute ago
25 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
25 minute ago
30 minute ago