
வி. ரி. சகாதேவராஜா
கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் பல முக்கிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையை உலுக்கிய பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அவர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
பொறுப்பதிகாரி மேனன் விடுத்துள்ள அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளதாவது:
- ஆபரணங்கள்: பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பெறுமதிமிக்க தங்க நகைகளை அநாவசியமாக வெளிப்படையாக அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
- பயணம்: முன்பின் தெரியாத முச்சக்கர வண்டிகள் (Auto) உள்ளிட்ட அறிமுகமில்லாத வாகனங்களில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை அறிமுகமான வாகனங்களைப் பயன்படுத்தவும்.
- குழுவாகச் செல்லுதல்: பெண்கள் தனித்துப் பயணிப்பதைத் தவிர்த்து, குழுவாகவோ அல்லது உறவினர்களுடனோ பயணங்களை மேற்கொள்வது பாதுகாப்பானது. உங்களது பயண விபரங்களை நெருங்கிய உறவினர்களிடம் முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளுங்கள்.
- உணவு மற்றும் பானங்கள்: அந்நியர்கள் வழங்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம். மயக்கமருந்து கொடுத்து நகைகளைப் பறிக்கும் சம்பவங்கள் குறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.
- அவசர உதவி: ஏதேனும் ஆபத்தான அல்லது சந்தேகத்திற்கிடமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக 119 எனும் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.
நெருக்கடி கால நடைமுறைகள்:
தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு அவர் மேலும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்:
- தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துதல் சிறந்தது.
- ஒரே பயணத்தில் பல வேலைகளைத் திட்டமிட்டு முடிப்பதன் மூலமும், அத்தியாவசியப் பொருட்களை அருகிலுள்ள கடைகளில் கொள்வனவு செய்வதன் மூலமும் பயணங்களைக் குறைக்கலாம்.
- முடிந்தவரை கல்வி வகுப்புகள் மற்றும் அலுவலகப் பணிகளை இணையதளம் (Online) வாயிலாக மேற்கொள்ள முயற்சிப்பது காலத்திற்குப் பொருத்தமானது.
- குறுகிய தூரங்களுக்கு நடைபயணம் அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் எரிபொருள் வளத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.