2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

'நாடாளுமன்ற சட்டம் இயற்று அதிகாரம் கட்டுப்பாடற்றதல்ல'

Thipaan   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சவாலே சமாளி' என்ற நிலை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, முதன் முதலில் எடுத்துக் கொண்ட முக்கியப் பணி, நீதித்துறையிடமிருந்து 'நீதிபதிகள் நியமன அதிகாரத்தை' அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வருவதுதான். அந்த நோக்கத்தில்தான் ஏற்கெனவே கொண்டு வந்து நிறைவேற்றாமல் விட்டுச் சென்ற தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். 99ஆவது அரசியல் சட்டத்தின்படி கொண்டு வரப்பட்ட 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்' இப்போது இந்திய உச்சநீதிமன்றத்தால் செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கு மிகவும் குறுகிய அதிகாரம் மட்டுமே இருந்தது. 'காலேஜியம் நடைமுறை' அடிப்படையில், மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் இந்திய உச்சநீதிமன்றத்துக்கும் நடக்கும் நீதிபதிகள் நியமனத்தில் நீதித்துறையின் கை ஓங்கியிருந்தது.

 குறிப்பாக, மாநில அளவில் உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் இந்த நியமன விவகாரத்தில் அதிகாரம் பெற்றவர்களாக இருந்து வந்தார்கள். எப்போதெல்லாம் நீதித்துறை அரசாங்கத்தின் முடிவுகளில் 'லட்சுமண ரேகை'யைத் தாண்டி உத்தரவுகளைப் பிறப்பிக்கிறதோ, அப்போதெல்லாம் நீதித்துறைக்கும் அரசாங்கத்துக்கும் இனம் புரியாத பனிப்போர் நடந்து வந்திருக்கிறது. இந்தியாவில் எமெர்ஜென்ஸி அமுலுக்கு வந்ததற்கே இந்த பனிப்போரும் காரணம் என்றால் சரியாகவே இருக்கும்.

கடந்த 20 வருடங்களில் நீதிபதிகள் நியமனத்தை முறைப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. 'காலேஜியம் நடைமுறை'யை மாற்ற வேண்டும் என்று ஏழு அறிக்கைகள் இதுவரை கொடுக்கப்பட்டன. முதலில் 2003இல் கொடுக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எம்.என். வெங்கடாசலய்யா அறிக்கை. அடுத்து, சட்ட அமைச்சராக இருந்த வீரப்பமொய்லியின் 2007ஆம் ஆண்டு நிர்வாக சீர்திருத்த அறிக்கை, இந்திய சட்ட ஆணையத்தின் 214ஆவது அறிக்கை என்பன முக்கியமானவை. இது தவிர நான்கு நாடாளுமன்றக் குழு அறிக்கைகள். இது மாதிரி ஏழு அறிக்கைகள் இந்தியாவில் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் முறையை மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கின்றன.

இந்த அறிக்கைகளின் படி, அவ்வப்போது இருந்த மத்திய அரசு அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. வி.பி.சிங் பிரதமராக இருந்த போது 1990ஆம் ஆண்டு 67 அரசியல் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது. பின்னர், ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்த போது 82ஆவது அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 98ஆவது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

டொக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த நேரத்தில் 120ஆவது அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது எதுவுமே நடைமுறைக்கு வரவில்லை. நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் 'காலேஜியம் நடைமுறை' யும் மாறவில்லை.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைமைப் பொறுப்பில் காங்கிரஸ் இருந்தபோதுதான், நீதித்துறையின் உச்சகட்ட செயற்பாடு என்று வைத்துக் கொள்ளலாம். அதில் மிகவும் முக்கியமாக மத்திய அரசு நியமித்த சென்டிரல் விஜிலென்ஸ் கமிஷனரை செல்லாது என்று அறிவித்தது, 2ஜி அலைக்கற்றை ஊழலில் உச்சநீதிமன்றமே புலன் விசாரணையை மேற்பார்வையிட்டது, நிலக்கரி பேர முறைகேட்டில் புலன் விசாரணையை கண்காணித்தது, வோடோ ‡போன் வழக்கில் அரசுக்கு தர்மசங்கடமான தீர்ப்பை அளித்தது.

இவ்வாறு, உச்சநீதிமன்றத்தின் அதிரடித்  தீர்ப்புகள் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்தன. இந்திய அரசை, உச்சநீதிமன்றம்தான்  வழிநடத்துகிறது என்ற தோற்றம் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் உருவானது. நீதித்துறையின் இந்த 'ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்' காங்கிரஸ் அரசுக்கு இடைஞ்சலாக இருந்தது. அப்படித்தான் இந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் கொண்டு வரும் ஆலோசனை அம்பலத்துக்கு வந்தது.

'நீதிபதிகளை நீதிபதிகளே எப்படி நியமிக்கலாம்' என்று அரசு தரப்பில் பெரும் பிரசாரமே அப்போது மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்திய உச்சநீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற சில நீதிபதிகளும் வழி அமைத்துக் கொடுத்தார்கள். 'நீதிபதிகளை நியமிக்கும் காலேஜியம் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை', 'தகுதியான நீதிபதிகள் பதவிக்கு வருவதில்லை',

'நீதித்துறையில் ஊழல் புகுந்து விட்டது' என்றெல்லாம் கருத்துக் கூறினார்கள். அரசின் நடவடிக்கைகளில் அதிகமாக உச்சநீதிமன்றம் தலையிடத் தொடங்கியதும், உச்சநீதிமன்றத்தின் மீது அரசியல்வாதிகளின் விமர்சனங்களும் அதிகமாகத் தொடங்கின. அதன் இறுதி வடிவம்தான் 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்' கொண்டு வர வேண்டும் என்ற முயற்சி.

முதலில் காங்கிரஸ் ஆட்சியில் இந்த ஆணைக்குழு கொண்டு வரப்பட்டது. இதற்கான விவாதங்கள் நடைபெற்றன. இதுபோன்ற சூழலில் 2014 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்' அமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார் பிரதமர் நரேந்திரமோடி. அவர் கொண்டு வந்த 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்' தான் 2015இல் வெளிவந்த சட்டதிருத்தம். இது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இதுதவிர இந்தியாவில் உள்ள 16 சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்டது. இந்த அரசியல் சட்ட திருத்தம் மாநில சட்டமன்றங்களின் அனுமதியையும் பெற வேண்டும் என்பதால் இப்படி மாநில சட்டமன்றங்களும் நிறைவேற்றியது. இந்த நீதிபதிகள் நியமன ஆணையத்தை எதிர்த்துத்தான் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த ஆணையத்தைக் கொண்டு வர மசோதாவை தாக்கல் செய்து பேசிய அப்போதைய இந்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், 'நீதித்துறையின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். நீதித்துறையின் சுதந்திரம், நேர்மை மீது நமக்கு நம்பிக்கையுண்டு' என்றெல்லாம் பீடிகை போட்டு விட்டுத்தான் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். ஆனால், அன்றைய பேச்சில் அவர், 'நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் போது நாம் நாடாளுமன்றத்தின் புனிதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

ஆனால், அதுவே இந்திய உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் வாதப் பிரதிவாதமாக மாறியது. 'நீதித்துறையின் சுதந்திரமா அல்லது நாடாளுமன்றத்தின் புனிதத்தன்மையா' என்பது இந்த வழக்கில் கேள்வி. சுருக்கமாகச் சொல்லப் போனால் நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய இரண்டில் எதற்கு 'மேலாதிக்கம்' என்ற கேள்வியை இந்த வழக்கின் தீர்ப்பில் வெளிப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை இரத்துத் செய்து உத்தரவிட்ட இந்திய உச்சநீதிமன்றம், 'நீதித்துறையின் சுதந்திரம் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று. அதை பறிக்க நாடாளுமன்றம் அரசியல் சட்டத்தை திருத்த முடியாது' என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு ஏற்கெனவே 'கேசவானந்த பாரதி' வழக்கில் கூறப்பட்ட, 'அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்தை திருத்த நாடாளுமன்றம் சட்டம் இயற்ற  முடியாது' என்ற கோட்பாட்டை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் கை வைக்காத வரை இந்திய ஜனநாயகத்தில் அரசுக்கு மேலாதிக்கம் இருக்கிறது.

ஆனால், அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் புகுந்து திருத்தம் கொண்டு வரும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என்பதை 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய' வழக்கிலும் உறுதி செய்திருக்கிறது இந்திய உச்சநீதிமன்றம்.

சென்ற முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, குறிப்பாக, டொக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது அரசின் கொள்கை முடிவுகளில் கூட உச்சநீதிமன்றம் தலையிட முடியும் என்ற இமேஜ் ஏற்பட்டது. அது நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் விஷயத்தில் சுணக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அப்போதே ஒரு விமர்சனம் எழுந்தது. அப்படியொரு இமேஜ் தனது அரசுக்கு வரக்கூடாது என்று கருதினார் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி. நீதித்துறை நியமனங்களில் கூட இந்த அரசுக்கு ரோல் இருக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு அறிவிக்கவே ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை' முன்னெடுத்துச் சென்றார்.

அதற்கு இப்போது உச்சநீதிமன்றம் பிரேக் போட்டு விட்டது. 20 ஆண்டுகளாக இருக்கும் 'காலேஜியம்' முறை இனியும் தொடரும் என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாராம்சம்.

அதாவது உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தலைமை நீதிபதியின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவர் என்ற நிலை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் இறுதி எஜமானர் உச்சநீதிமன்றம் என்பதை இந்தத் தீர்ப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது.

'இந்தத் தீர்ப்பு ஆச்சர்யம் அளிக்கிறது' என்று இந்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரம் இந்த தீர்ப்பின் மூலம் கேள்விக்குறியாகி நிற்கிறது. நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்குமான பனிப்போராக இது மாறி விடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .