2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

1958 கலவரம்: திறக்கப்பட்ட கசாப்புக்கடை

Mayu   / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 03:50 - 1     - {{hitsCtrl.values.hits}}

பண்டா - செல்வா உடன்படிக்கையை பௌத்த பிக்குகளின் அழுத்தத்திற்குப் பணிந்து பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார். அரசாங்கம் பல்முனை நெருக்குவாரங்களுக்கு உட்பட்டதாக இருந்தது. இந்த நெருக்குவாரங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டிய நிலையில் பிரதமர் பண்டாரநாயக்க இருந்தார். நாட்டையும் மக்களையும் திசை திருப்புவதனூடாக நாடு எதிர்நோக்கியுள்ள சமூகப் பொருளாதார நெருக்கடிகளைப் புறந்தள்ள அவர் முடிவெடுத்தார்.

அதிகாரத்துக்கு வருவதற்காக அவர் உருவாக்கிய ஐம்பெருஞ் சக்திகள் (பஞ்சமா பலவேகய) அவரது இருப்புக்கே அச்சுறுத்தலாக இருப்பதை அவர் உணர்ந்து கொண்டார். ஆனால் அதை நேரடியாகச் சவாலுக்கு உட்படுத்தும் திராணியற்றவராக அவர் இருந்தார். 

இந்தப் பின்புலத்திலேயே 1958இல்; தமிழர்கள் மீது கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது தற்செயலானதாகவும் அங்காங்கே நடைபெறுவது போலத் தோற்றங்காட்டினாலும் அது மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்டு அரங்கேறிய ஒன்று என்பதை பலர் சான்றுகளுடன் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

குறிப்பாக அப்போது பாராளுமன்ற உறுப்பினரான இருந்த இடதுசாரியான லெஸ்லி குணவர்த்தன தமிழருக்கெதிரான தாக்குதல்களைத் திட்டமிடும் கூட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பங்கேற்றதாகவும் அதில் வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களை விரட்டியடிக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் பாராளுமன்றில் ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டினார். இதை பிரதமரோ ஏனைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களோ மறுக்கவில்லை. 

1958 கலவரமானது, இலங்கையின் வரலாற்றில் பெரிதும் கவனிக்கப்படாதாவொன்று. ஆனால் அடுத்த அரைநூற்றாண்டு கால இலங்கை அரசியலின் இயங்கியலில் தாக்கம் செலுத்திய பல பண்புகள் இந்தக் கலவரத்தோடு தோற்றம் பெற்றவை.

அவை அனைத்துமே இலங்கையை ஒரு கசாப்புக்கடையாகத் தயார் செய்தன. 1958 கலவரம் தொடர்பில் எழுதப்பட்டவற்றில் முக்கியமானதும் நன்கறியப்பட்டதுமான நூல் தார்சி வித்தாச்சி எழுதிய Emergency ‘58: The story of the Ceylon Race Riots. இந்த நூலில் அவர் குறிப்பிடுகின்ற முக்கியமானதொரு விடயம் 1956இல் பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்ததுமுதல் இலங்கைப் பொலிஸாரின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கீடுகள் தொடங்கின என்பது.

அதுவரை காலமும் பொலிஸாரின் செயற்பாடுகளில் ஒரு நடுநிலைத் தன்மை இருந்தது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுபவர்களாக அவர்கள் மீது அனைத்து இலங்கையர்களுக்கும் நம்பிக்கையும் மரியாதையும் இருந்தது. ஆனால் 1956 முதல் தொடங்கிய அரசியல் தலையீடுகள் இரண்டு போக்குகளுக்கு வழிவகுத்தது.

முதலாவது நேர்மையாகச் செயலாற்றுவது என்பது பல உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சவாலாக மாறியது. அவர்களது நடவடிக்கைகள் அரசியல்வாதிகளால் முடிவாகியது. இதன்மூலம் காவல் துறையின் சுதந்திரம் காவுகொள்ளப்பட்டது. இரண்டாவது, பொலிஸ் நடவடிக்கைகளின் அரசியல்மயமாக்கம், சட்டத்தையும் ஒழுங்கையும் மீறக் காத்திருப்பவர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது.

அரசியல் ஆசி இருந்தால் எந்தவொரு குற்றத்தையும் இலகுவாகவும் தண்டனையின்றியும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையையும் உருவாக்கியது. இலங்கையின் முக்கியமான அரசசேவையான பொலிஸ், சீரழியத் தொடங்கியது பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்திலேயே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

வித்தாச்சி தனது நூலில் குறிப்பிடுகின்ற இன்னொரு விடயம் பௌத்த பிக்குகள் பற்றியது. வித்தாச்சி அதைப் பின்வருமாறு விபரிக்கிறார்:
‘பல குண்டர்கள் - அவர்களில் சிலர் நன்கு அறியப்பட்ட குற்றவாளிகள் - தங்கள் தலையை மொட்டையடித்து, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து பிக்குகள் போல காட்சியளித்தனர்.  பொலிஸாருக்கு நன்கு தெரிந்த குற்றவாளியான ஒரு டாக்சி ஓட்டுனரை மறித்து விசாரித்த போது அவன் மொட்டையடித்திருந்தான். அவனது வாகனத்தின் இருக்கையின் மெத்தைகளுக்குக் கீழே இரண்டு அழுக்கடைந்த மஞ்சள் நிற ஆடைகளைக் கண்டார்கள்.

அதேபோல கொள்ளை மற்றும் தீ வைத்ததற்காக கைது செய்யப்பட்ட இரண்டு ‘துறவிகள்’ தொழில்முறையாகக் கார் ஓட்டுபவர்கள் என்று பொலிஸ் அறிக்கைகள் பதிவு செய்கின்றன. இனவெறியைத் தூண்டிவிட்டு, பொய்யான கதைகளைப் பரப்பி, இந்த விளையாட்டின் இலாபகரமான பக்கமான கொள்ளை மற்றும் கொள்ளையில் பங்குகொள்வதில் இந்தக் கள்ளப் பிக்குகள் ஈடுபட்டுள்ளனர். மொட்டையடித்த தலையுடன் கொள்ளையனைப் பின்தொடர்ந்து பொலிஸார் செல்லும் போதெல்லாம், அவர் ஒரு வீட்டிற்குள் மறைந்து, ஒரு துறவியின் அழிக்க முடியாத உடையில் திரும்பி வந்தார்.

பௌத்த துறவியாகும் சடங்கான உபசம்பத வரலாற்றில் முன்னெப்போதையும் விட வேகமாக அந்த சில நாட்களில் பொலன்னறுவையில் துறவிகள் நியமிக்கப்பட்டனர். புத்தர் தாமே அணிந்திருந்த புனித அங்கிகளில் தாங்கள் செய்யும் கொடுஞ்செயலை அவர்கள் கவனிக்கவில்லை. இந்த அச்சுறுத்தல் மிகவும் மோசமாக மாறியது, தலை மொட்டையடித்த ஒவ்வொருவரையும் கைது செய்ய பொலிஸார் முடிவு செய்தனர்’

1958 கலவரம் தொடர்பிலான முக்கியமானதொரு குறிப்பு இது. சிங்களப் பெருந்தேசியவாதம் பௌத்தத்திடம் அடைக்கலம் கோரிய முதலாவது நிகழ்வு இது. பௌத்தத்தின் பெயரால் வன்முறைகளை எந்தவித சட்டச் சிக்கலும் இன்றி அரசின் ஆசீர்வாதத்துடன் செய்ய முடியும் என்பதை குண்டர்கள் பௌத்த துறவி வேடமிட்டு 1958இல் செய்து காட்டினார்கள். அப்போது பௌத்த மதத்திற்கான ‘அதியுன்னத இடம்’ அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்படாவிட்டாலும் கூட பண்டாரநாயக்கவின் அரசாங்கம் அவ்வாறே நடந்து கொண்டது. பண்டா-செல்வா உடன்படிக்கையை கிழித்தெறிய வைத்தது பௌத்த பிக்குகளின் முக்கியமான அரசியல் நடவடிக்கை.

இது இலங்கையின் அரசியலில் நேரடியான செல்வாக்கைப் பிக்குகள் உறுதிப்படுத்திய தருணம். அதேபோல 1958 கலவரமானது, சிறுபான்மையினருக்கெதிரான வன்முறையில் பௌத்த துறவிகளின் நேரடிப் பங்களிப்பை உறுதி செய்தது. இது அகிம்சையைப் போதித்த புத்தரின் போதனைகளுக்கு நேரெதிரானதாக இருந்தபோது இலங்கையின் பௌத்தத்தின் எதிர்காலத்தைக் கோடு காட்டியது. எந்தப் பௌத்தத்தை அரசியலுக்குள் கொணர்ந்து நாட்டின் அரசியலின் பகுதியாக்கினாரோ அதே வன்முறையாளர்களாலேயே இறுதியில் பண்டாரநாயக்க கொல்லப்பட்டார்.   

தமிழரசுக் கட்சியின் திட்டமிடப்படாத சிறுபிள்ளைத்தனமான ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிர்வினையாக சிங்களப் பகுதிகளில் தமிழ்ப்பெயர்களை தார் பூசி அழிக்கும் இயக்கம் சிங்கள இனவாத பாராளுமன்ற உறுப்பினரான கே.எம்.பி. ராஜரட்ண தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இது தமிழருக்கெதிரான இனவாத உணர்வுகளை சிங்களப் பகுதிகளில் தூண்டியது. இது கலவரமாக உருவெடுத்தது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வன்முறைகள் அதிகரித்தன.

இது நாட்டின் பிறபகுதிகளுக்கும் பரவியது. கலவரம் தொடங்கி நான்கு நாட்களாகிய பின்பும் பிரதமர் பண்டாரநாயக்க எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தார். எதிர்கட்சித் தலைவர் என்.எம். பெரேரா, பொலிஸாரால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட இயலாமல் இருக்கிறது என்றும் கட்டளைகளை வழங்காமல் திட்டமிட்டே பிரதமர் காலங்கடத்துகிறார் என்றும் குற்றஞ் சாட்டினார். 

இறுதியாக கலவரம் நாடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டெரியத் தொடங்கி நான்கு நாட்களின் பின்னர் 1958, மே 27 திகதியன்று மதியம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும் உத்தியோகபூர்வக் கோரிக்கையை பண்டாரநாயக்க ஆளுநர் நாயகம் ஒலிவர் குணத்திலகவுக்கு அனுப்பினார்.

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதன்முதலாக அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் அன்ரன் முத்துக்குமார் தலைமையில் இராணுவம் களத்தில் இறங்கி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.

இந்த நடவடிக்கைகளின் போதே முதன்முதலாக இலங்கையின் வடபகுதியில் இராணுவம் நிலைகொள்ளத் தொடங்கியது. கலவரம் முடிவுக்கு வந்து ஏனைய பகுதிகளில் இருந்து இராணுவம் மீளப்பெறப்பட்ட போதும் இலங்கையின் வடபகுதியில் இருந்து இராணுவம் மீளப்பெறப்படவில்லை. இராணுவத் தளபதியான அன்ரன் முத்துக்குமார் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழர் என்பதும் இராணுவத் தளபதி பதவியைப் பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையும் இவரைச் சாரும். 

1958 கலவரங்கள் இரண்டு முக்கிய விடயங்களைச் சாதித்தன. முதலாவது சிங்களத் தேசியவாதம் என்பது தமிழர் எதிர்ப்பு என்பதை தனது முக்கியமான கதையாடலாகக் கோட்பாட்டுருவாக்கம் செய்வதற்கான வாய்ப்பையும் நியாயப்பாட்டையும் வழங்கியது. இது அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள் மற்றும் கிராமப்புறச் சிங்களவர்கள் ஆகியோரின் கூட்டிணைவால் இலகுவாகச் சாத்தியமானது.

இரண்டாவது அரசியலில் இரண்டறக் கலந்துவிட்ட பௌத்தமானது சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அகங்காரமாகத் தன்னை வெளிப்படையாக நிலை நிறுத்தத் தொடங்கியது. அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னரும் பண்டாரநாயக்க தனது நெருங்கிய சகாவான மாப்பிடிகம புத்தரக்கித தேரோவை தமிழருக்கெதிரான விசமப் பிரச்சாரத்தை இலங்கை வானொலியில் நிகழ்த்த அனுமதித்தார். இந்தப் புத்தரக்கித்த தான் பண்டாரநாயக்க கொலையின் பிரதான சூத்திரதாரி.


You May Also Like

  Comments - 1

  • Hemarathan Monday, 11 December 2023 12:06 PM

    Knowledgeable article. Thank you for your information

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .