2026 மே 09, சனிக்கிழமை

dd

இடமாற்றம் எனும் கூத்து!

A.P.Mathan   / 2011 ஜூன் 13 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

•    மப்றூக்

'என்னுடைய பெயர் ரியாஸ். நான் - சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள மிகவும் கஷ்டப் பிரதேசமான மலையடிக் கிராமத்திலுள்ள பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து எனக்கு இடமாற்றக் கடிதமொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கு முன்னரும் நான் இடமாற்றக் கடிதங்களைப் பெற்றுள்ளேன். அந்தக் கடிதங்களில் வலயக் கல்விப் பணிப்பாளர்தான் ஒப்பமிட்டிருப்பார். ஆனால் இப்போது எனக்குக் கிடைத்துள்ள கடிதத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்று ரப்பர் முத்திரை மூலமாக தன்னை குறிப்பிட்டிருக்கும் ஒருவர் ஒப்பமிட்டிருக்கின்றார்.

வழமைக்கு மாறாக வலயக் கல்விப் பணிப்பாளர் ஒப்பமிடாமல் இவ்வாறான ஒருவரின் ஒப்பத்துடன் கடிமொன்று கிடைத்ததையிட்டுக் குழம்பிப் போன நிலையில், இவ்விடயம் தொடர்பாக கல்வித்துறையிலுள்ள உயர் அதிகாரிகளிடம் பேசினோம். அதன்போது, பிரதிக் கல்விப் பணிப்பாளராக குறிப்பிடப்பட்டுள்ள இவ்வாறான நபர்களுக்கு மேற்படி இடமாற்றக் கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு எவ்வாறான அதிகாரமும் கிடையாது என கல்வி அதிகாரிகள்  கூறினர்.

அப்படியென்றால், மேற்படி நபரால் அனுப்பப்பட்டுள்ள இடமாற்றக் கடிதம் செல்லுபடியானதா? இந்தக் கடிதத்துக்கிணங்க நாம் செயற்பட வேண்டுமா? என்கின்ற குழப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ளன'.

சம்மாந்துறையில் இப்போதைக்கு கொதிநிலையில் உள்ள விடயம் 'வலய ஆசிரிய ஆளணி சீராக்கல்' எனும் பெயரில் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குள் இடம்பெறவுள்ள ஆசிரியர் இடமாற்றமாகும்.

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து வலயப் பாடசாலைகளில் சேவையாற்றும் 223 ஆசிரியர்களுக்கு 'வலய ஆசிரிய ஆளணி சீராக்கல் - 2011' எனும் பெயரிலான இடமாற்றக் கடிதங்கள் 03.06.2011 எனும் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த இடமாற்றங்கள் இம்மாதம் 14ஆம் திகதி செயற்படும் படியாக அமையும் என அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான இடமாற்றக் கடிதங்களில் ஒன்றைப் பெற்றுக் கொண்டவர்களில் மேற்படி ஆசிரியர் என்.எம்.ரியாஸ் என்பவரும் ஒருவர். அவர் பெற்றுக் கொண்ட கடிதம் தொடர்பில் அவருக்குள்ள சந்தேகங்களையும் குழப்ப நிலையையும் அவர் வெளிப்படுத்திய விதமே இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகளாகும்.

ஆசிரியர் ரியாஸ் மட்டுமன்றி இந்த இடமாற்றக் கடிதங்களைப் பெற்றுக் கொண்ட கணிசமான ஆசிரியர்களுக்கு இவ்வாறான சந்தேகமும் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவை தொடர்பில் பல ஆசிரியர்கள் நம்மிடம் பேசினார்கள்.

ஆசிரிய இடமாற்றக் கடிதங்களில் கையொப்பமிட்டுள்ள மேற்படி பிரதிக் கல்விப் பணிப்பாளரின் பெயர் அஸீஸ் மெயிடீன் என்பதாகும். இவர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதங்களில் தனது பதவி நிலையை வெளிப்படுத்தும் வகைகளில் இவர் ரப்பர் முத்திரையொன்றைப் பதிந்துள்ளார். அந்த முத்திரையின் படி - இவர் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி நிருவாகத்துக்கு மாற்றாளாக (Acting) பணியாற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளராவார்.

மேற்படி அஸீஸ் மெயிடீன் எனும் நபர், அரசியல் பழிவாங்கல் 2001இற்கான நிவாரண சிபாரிசுகள் - உச்ச நீதிமன்ற வழக்கு SE (FR) 260/2002 தீர்ப்புக்கு அமைய கல்வி நிருவாக சேவை iii வகுப்புக்கு நியமிக்கப்பட்ட ஒருவராவார். இவ்வாறான நியமனத்தினூடாக கல்வி நிருவாக சேவைக்கு உள்வாங்கப்பட்ட ஒருவருக்கு 'வலய ஆசிரிய ஆளணி சீராக்கல்' எனும் வகையிலான ஆசிரிய இடமாற்றக் கடிதங்களில் கையொப்பமிடுவதற்கு அதிகாரமில்லை என்பது மேற்படி ஆசிரியர்கள் முன்வைக்கும் முதலாவது குற்றச்சாட்டாகும்.

இரண்டாவது குற்றச்சாட்டு, அரசியல் பழிவாங்கல் நிவாரணத்தின் அடிப்படையில் கல்வி நிருவாக சேவை iii வகுப்புக்கு நியமிக்கப்பட்ட ஒருவர் இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) உத்தியோகத்தர் ஒருவரின் பதவிகள் எவற்றையும் வகிக்க முடியாது என்பதாகும். அந்தவகையில் மேற்படி அஸீஸ் மெயிடீன் என்பவர் சம்மாந்துறைக் கல்வி அலுவலகத்தின் கல்வி நிருவாகத்துக்கு மாற்றாளாக (Acting) பணியாற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவியினை வகிக்க முடியாது. அதுவும் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் இலங்கை நிருவாக சேவை (SLEAS) உத்தியோகத்தர் ஒருவர் இருக்கின்ற நிலையில், குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவியினை அஸீஸ் மெயிடீன் வகிக்கவே முடியாது என்பதாகும். 

ஆசிரியர்களின் மேற்படி சந்தேகங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சம்மாந்துறைக் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.கே.மன்சூரைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் பதிலளித்தார். அதாவது, மேற்படி இடமாற்றக் கடிதங்களில் கையொப்பமிடுமாறு அஸீஸ் மெயிடீன் எனும் பிரதிக் கல்விப் பணிப்பாளரை - தானே பணித்ததாகவும், தனது கட்டளைக்கிணங்கவே குறித்த நபர் அந்தக் கடிதங்களில் கையொப்பமிட்டதாகவும், இவ்வாறான இடமாற்றக் கடிதங்களில் கையொப்பமிடுவதற்கு பிரஸ்தாப பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு அதிகாரம் உண்டெனவும் கூறினார்.

இதேவேளை, சம்மாந்துறைக் வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் இலங்கை நிருவாக சேவை (SLEAS)  உத்தியோகத்தரை விடவும், மேற்படி அஸீஸ் மெயிடீன் என்பவர் சிரேஷ்டமானவர் என்பதால் - அவரை சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி நிருவாகத்துக்கு மாற்றாளாக (Acting) பணியாற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, அரசியல் பழிவாங்கல் 2001இற்கான நிவாரண சிபாரிசுகள் - உச்ச நீதிமன்ற வழக்கு SE (FR) 260/2002 தீர்ப்புக்கு அமைய, கல்வி நிருவாக சேவை iii வகுப்புக்கு நியமனம் பெற்றுள்ளவர்களின் நியமனக் கடிதங்களின் அடிப்படையில், அவர்கள் - இலங்கை நிருவாக சேவை (SLEAS)  உத்தியோகத்தர் ஒருவருடன் எவ்வகையிலும் போட்டியிட முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக, அவர்களின் நியமனக் கடிதத்தின் ஓரிடத்தில் இவ்விடயம் பின்வருமாறு சுட்டிக் காட்டப்படுகிறது. அதாவது, 'இந்த நியமனம் காரணமாக தற்பொழுது சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS)  உத்தியோகத்தர் ஒருவரின் சேவை, சேவை மூப்பு, அவர்களுக்குரிய உப அட்டவணை பதவிகள் எதற்கும் தாங்கள் உரித்துடையவர் ஆகமாட்டீர்' என அந்த வாசகங்கள் கூறுகின்றன.

மேலுள்ள விடயத்தை நாம் - சம்மாந்துறை கல்விப் பணிப்பாளரிடம் சுட்டிக் காட்டினோம். அதற்கு அவர் பதிலளிக்கையில்ளூ அரசியல் பழிவாங்கல் 2001இற்கான நிவாரண சிபாரிசுகள் - உச்ச நீதிமன்ற வழக்கு SE (FR) 260/2002 தீர்ப்புக்கு அமைய கல்வி நிருவாக சேவை iii வகுப்புக்கு நியமனம் பெற்றுள்ளவர்களின் நியமனக் கடிதங்களில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் குறித்து தனக்குத் தெரியாது என்றும், ஒரு வலயக் கல்விப் பணிப்பாளராக அவ்வாறு அவற்றினை அறிந்து கொள்ளாமல் இருப்பதென்பது மனவருத்தத்துக்குரிய விடயம்தான் என்றும் கூறினார்.

இதேவேளை, இவ்விடயம் குறித்து கிழக்கு மாகாண உயர்நிலைக் கல்வி அதிகாரி ஒருவரிடம் பேசினோம். அவர் இது தொடர்பில் விளக்கமளித்தார். அதாவது, இவ்வாறானதொரு இடமாற்றக் கடிதத்தில் கையொப்பமிடுவதற்கு குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை. அதேவேளை, அவர் மேற்படி பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவியினை வகிப்பதற்கு சாத்தியம் உள்ளது. ஆனாலும், அவர் பணியாற்றும் அதே அலுவலகத்தில் இருக்கின்ற இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) உத்தியோகத்தர் இந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் பதவியை தனக்கு வழங்காமை குறித்து சவால் விடுப்பாராயின் இவ்விடயம் சிக்கலுக்குள்ளாகும் என்றார்.

சம்மாந்துறை வலய ஆசிரியர் இடமாற்ற விவகாரத்தில் மேற்படி விடயங்கள் ஒருபுறமிருக்க, இதில் வேறு சில குளறுபடிகள் மற்றும் கோமாளித்தனங்கள் உள்ளதாகவும் ஆசிரியர்கள் நம்மிடம் சுட்டிக் காட்டினார்கள்.

இதற்கு ஓர் உதாரணமாக பின்வரும் விடயத்தைக் குறிப்பிடலாம். எம்.ஐ.றியாட் எனும் உதவி ஆசிரியர் ஒருவர் தற்போது சம்மாந்துறை அல் - அர்ஸத் வித்தியாலயத்தில் கடமையாற்றி வருகின்றார். ஏற்கனவே சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் சேவையாற்றிய மேற்படி உதவி ஆசிரியர் கடந்த மே மாதம் 16ஆம் திகதி (கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்னர்) தற்போது பணிபுரியும் பாடசாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேற்படி ஆசிரியர் றியாட் என்பவர் சம்மாந்துறை அல் - அர்ஸத் வித்தியாலயத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தினால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, குறித்த ஆசிரியர் தற்போது கடமையாற்றும் பாடசாலைக்கே அவர் இடமாற்றப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகிடியை யாரிடம் சொல்லிச் சிரிப்பது என்று கேட்கிறார் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்!

மேலுள்ளமை போன்று, எம்.ஏ.நிஹாறா என்கிற உதவி ஆசிரியைக்கும் ஓர் இடமாற்றக் கடிதம் கிடைத்திருக்கின்றது. அந்தக் கடிதத்திலும் குறித்த ஆசிரியரை தற்போது கடமையாற்றும் பாடசாலைக்கே இடமாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இவை ஒருபுமிருக்க, 55 வயதுக்கு மேற்பட்டோர் சிலருக்கும் இதன்போது இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. 2007ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி 'தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை' எனும் தலைப்பில் 2007ஃ20 எனும் இலக்கத்தைக் கொண்ட சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அந்தக் கொள்கையின் பிரிவு 3.4 இன் முதலாவது உப பிரிவானது இது தொடர்பில் மிகவும் தெளிவாகக் கூறுகின்றது. அதாவது, 55 வயதைத் தாண்டியுள்ள ஆசிரியர்களுக்கு அவர்களின் கோரிக்கையைத் தவிர இடமாற்றங்களை வழங்கக் கூடாது என்பதே குறித்த உப பிரிவு சொல்லுகின்ற விடயமாகும். ஆனாலும், சம்மாந்துறை கல்வி வலயத்துக்குள் பணியாற்றும் 55 வயதைத் தாண்டிய ஆசிரியர்களுக்கும் தற்போதைய உள்ளக இடமாற்றத்துக்கமைவாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படி ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் மத்தியில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த இடமாற்றம் குறித்து கல்வி அதிகாரிகள் ஆற அமர உடகார்ந்து யோசிக்க வேண்டும் என்பது சம்மாந்துறை கல்வி சமூகத்தின் கோரிக்கையாகும்.

கல்வி மட்டத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் மாணவர்களின் கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைதல் வேண்டும். ஆனால், வருடத்தின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த உள்ளக ஆசிரியர் இடமாற்றமானது தமது கல்வியில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும் என்று மாணவர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வருடத்தின் நடுப்பகுதியில் இவ்வாறானதொரு உள்ளக ஆசிரியர் இடமாற்றத்தினை மேற்கொள்வதில் தமக்கும் விருப்பங்கள் இல்லை என்றும், தமது மேலதிகாரிகளின் உத்தரவுக்கமைவாகவே இந்த இடமாற்றங்களை தாம் இப்படியானதொரு காலப்பகுதியில் மேற்கொள்ள நேர்ந்துள்ளதாகவும் சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஸீஸ் மெயிடீன் கூறுகின்றார்.

ஆனால், தற்போது நடைபெறும் உள்ளக ஆசிரியர் இடமாற்றத்துக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை என்று கூறுகிறார் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரான எம்.ரி.ஏ.நிஸாம்.

அப்படியென்றால் உண்மையில் இந்த இடமாற்றத்தின் பின்னணியில் செயற்படுவோர் யார்? இந்த இடமாற்றம் தொடர்பில் ஏன் ஒவ்வொரு அதிகாரியும் தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மையோடு பேசுகின்றனர்? இந்த இடமாற்றத்தின் லாப – நஷ்டங்களுக்குப் பொறுப்புதாரி யார்?

சம்மாந்துறை கல்வி வலய உள்ளக ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் இவ்வாறான ஆயிரத்தெட்டுக் கேள்விகள்; இருக்கின்றன.

விடை சொல்லத்தான் எவரும் முன் வருகிறார்களில்லை!!
•   


 


  Comments - 0

  • ameer Wednesday, 15 June 2011 01:20 AM

    உண்மையான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

    Reply : 0       0

    farook Wednesday, 15 June 2011 01:44 AM

    எமதூரை சேர்ந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றப் பிரச்சினையா ?

    இவ்வாறான செயற்பாடுகள் இன்றுமட்டுமல்ல, எமதூரில் ஒவ்வொரு முறை இடமாற்றத்தின் போதும் உருவாகின்ற , எமதூர் மக்களுக்கும் , மாணவர்களின் பெற்றோருக்கும் பழகிப்போன ஒரு விடயம் .

    இறுதியாக எமதூர் இடமாற்றத்தின் பொழுது ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கை:

    01 . ஆசிரியைகள் வயிற்றில் பிள்ளையோடு இருப்பது. இதன் பொழுது எமது ஆசிரியைக்களுக்கு இடமாற்றம் சரி வராது என்றனர் .

    ௦௨ . ............ அவர் ஆசிரியர்களை மரியதைக் குறைவாக நடாத்தி வருக்கிறார் என்றும் இதனை எதிர்த்த ஆசிரியர்களை இடமாற்றம் செய்கிறார் என்றும் கூறி ஆசிரியர் இடமாற்றதை தடுத்தனர்

    ௦௩. குடும்ப சூழல் மனைவி சுகமின்மை காரணம் காட்டினர் .

    ௦௪. அரசியல் மூலம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை நாடி அவரின் வீட்டில் கருத்தரங்கு நடாத்தி அவரின் உதவியோடு ர் ஹகீமை சந்தித்து பசிலை சந்தித்து கல்வி கல்வியமைச்சரை தொடர்புகொண்டு இவ்விடமாட்டம் நிறுத்தப்பட்டது.


    கோட்டக்கல்வி, எமது ஆசிரியர்களை இடம்மாற்றி வெளி இடத்தில் உள்ள மாணவர்களை கூடிய அறிவுடையவர்களாக மாற்ற முயற்சி செய்கின்றது. இதனை எமது ஆசிரியல் குலாம் ஏன்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது ?

    எமது ஆசிரியர் குலாம் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் எமது ஆசிரியர் குலாம் கிணற்றுத் தவளைகள் போன்று ஒரே இடத்தில் இருந்திடுவர் .எமது ஆசிரியர் குலாம் கிணற்று தவளைகள் ஆவதை எமதூர் விரும்பதல்லவா ?

    எமது ஆசிரியர்கள் வெளி உலகுக்கு சென்று அறிவாளிகள் இ நாங்கள் கிணற்றுத் தவளைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் எமதூருக்கு பெருமை. எமது ஆசிரியர் குலத்துக்கு எதிராக அரசியல் காரர்கள் உள்வாங்கி கிணற்றுத் தவளைகளாக்க வேண்டாம்.

    Reply : 0       0

    radan Wednesday, 15 June 2011 10:50 PM

    இந்த கட்டுரை எழுதிய ஆசிரயருக்கு - 55 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் இடமாற்றம் நடைபெற்றதாம் என எழுதாமல் யார் யார் இடமாற்றம் பெற்றார்கள் அல்லது எத்தனை பேர் என்று கூற வேண்டும். இது பத்திரிகை. யூகங்கள் எழுத வேறு இடம் இருக்கிறது. இங்கு தரப்பட்ட புகைப்படங்களின் நோக்கம் என்ன? தலை இருக்க வாலை பிடித்த (யார் sign பண்ணியது என்பது) கதை.

    Reply : 0       0

    மப்றூக் Friday, 17 June 2011 02:44 PM

    radan என்பவருக்கான பதில்: 'அப்பம்' என்றால் பிட்டுக் காட்டத் தேவையில்லை என்கிற நம்பிக்கையில்தான் எனது கட்டுரைகளை நான் எப்போதும் எழுதுவதுண்டு. ஆனால், சிலருக்கு 'அப்பத்'தை பிட்டு, ஊட்டி விட்டால்தான் அது 'அப்பம்' என்று 'புரியும் போல் இருக்கிறது!

    சரி, உங்கள் கேள்விக்கான விடை இதுதான். சம்மாந்துறை தாருல் உலூம் வித்தியாலயத்திலிருந்து திருமதி. எப்.ஏ. ஹக்கீம் (பரீதா) என்கிற ஆசிரியைக்கு - சம்மாந்துறை மகளிர் வித்தியாலயத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர் 55 வயதுக்கு மேற்பட்டவர்.

    Reply : 0       0

    Parent Saturday, 25 June 2011 05:40 AM

    நான் மப்ரூக் அவர்களின் கட்டுரகளை படிப்பவன்.நன்று . இடம்மாற்றம் என்றால் என்ன என்பதை விளக்கியும் அதற்கு ஆசிரியர்கள் கட்டுப்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும், மாணவர்களை வீதிக்கு இறக்குகின்ற ஒழுக்ககேடான விடயம் பற்றியும் எழுதினால் மிக நன்று .உங்களுக்கு வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .