Super User / 2011 ஜூலை 23 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே. சஞ்சயன் )
இன்று சனிக்கிழமை நடந்த 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல்கள் பல இடம்பெற்றாலும் இம்முறை நடக்கப் போவதைப் போன்று முக்கியத்துவம் இருந்ததில்லை.
ஏன், 65 உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்படாமல் – கடந்த மார்ச் 17ம் நாள் நடைபெற்றிருந்தாலும் கூட இந்தளவுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்காது.
ஆனால், இப்போது இந்தத் தேர்தல் ஒரு கௌரவப் பிரச்சினை என்பதற்கும் அப்பாற்பட்ட அரசியல் பரிமாணம் கொண்டதாக மாறியுள்ளது.இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றேயாக வேண்டும் என்று களத்தில் இறங்கியது அரசாங்கம்.
வடபகுதி மக்களின் வாக்குகளைப் பெற்று முழு இலங்கையுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் பின்னால் தான் நிற்கிறது என்ற செய்தியை உலகத்துக்கு சொல்வதற்கே அரசாங்கம் இத்தனை பாடுபட்டது.
கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னர் தான் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது. அதன் பின்னர் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் பற்றிய சர்ச்சை தோன்றத் தொடங்கியது. .jpg)
சனல்- 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் அதன் பின்னர் தான் வெளியானது. இதன் பின்னர் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தவிர ஏனைய நாடுகள் இலங்கை அரசுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்கத் தயங்குகின்றன.
போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுப்பது இப்போது ஒரு சாதாரணமான விவகாரமாகி விட்டது. அந்தளவுக்கு இலங்கை அரசாங்கத்தினால் பலமுனை அழுத்தங்கள் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் அரசாங்கத்துக்கு முக்கிய தேவையாக மாறியுள்ளது. அதன் மூலமே சர்வதேசத்தின் வாயை அடைக்கலாம் என்பது அரசாங்கத்தின் கருத்து. இதனை அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்கள் பகிரங்கமாக கூறியுள்ளனர்.
தேர்தலில் தமிழ் மக்களால் அளிக்கப்படும் வாக்குகள் மூலம் சர்வதேசத்தின் வாய் அடைக்கப்படும் என்று விமல் வீரவன்ச கூறியுள்ள கருத்து முக்கியமானது.
சர்வதேச சமூகத்தின் வாயை அடைப்பதற்கான ஒரு வழியாகவே இந்தத் தேர்தல் பயன்படுத்தப்படுகிறது என்ற வகையில் இதற்கு ஒரு உயர் பெறுமானம் உருவாகியுள்ளது.
சாதாரணமாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதில்லை. ஆனால் இந்தத் தேர்தல அப்படியானதொன்றல்ல.
அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெற்கில் இருந்து சென்று அணிவகுப்பு நடத்தினர். மூலைக்கு மூலை திறப்பு விழாக்கள் நடத்தப்பட்டன. என்ன, எதற்கு என்றில்லாமல் வீதியெங்கும் பல்வேறு திட்டங்களின் ஆரம்பத்தைக் குறிப்பதற்கான பெயர்ப்பலகைகள் திறந்து வைக்கப்பட்டன.
இந்தத் தேர்தலில் பிரதான போட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் தான்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரங்களுக்கு கடுமையான அச்சுறுத்தல்கள் இருந்தன. அதனை அவர்கள் மட்டுமன்றி சுதந்திரமான கண்காணிப்பு அமைப்புகள் கூட தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.
அதேவேளை, ஆளும்கட்சிக்கு அரச அதிகாரம் தொடக்கம் எல்லாவிதமான அதிகாரங்களும், வசதிகளும் இருந்தன. எனவே பிரமாண்டத்தை காண்பித்து வாக்குகள் கவரும் உத்தியை கையாண்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தியை முன்னிறுத்தி இந்தப் பிரசாரங்கள் அமைந்தன. சலுகைகள், திட்டங்கள், வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகள் என்று இந்தத் தேர்தல் பிரசாரத்தில் முற்றிலும் அரச அதிகார வாடையே வீசியது.
அதுபோன்ற வாய்ப்பு கூட்டமைப்புக்கு கிடைக்காது போனாலும், அவர்களிடம் பலமாக இருப்பது கொள்கை ஒன்று மட்டும் தான். பிரமாண்டமான தேர்தல் மேடைகளை கூட்டமைப்பினால் அமைக்க முடியாது போனாலும், தமிழ்த் தேசியம் சார்ந்த உறுதியான தளம் ஒன்று தான் அவர்களிடம் பெரும்பலமாக உள்ளது. அதேவேளை, கூட்டமைப்பு அரசியல் தீர்வு, அதிகாரப்பகிர்வு என்ற அரசியல்ரீதியான உரிமைகளை உறுதிப்படுத்த இந்தத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.
ஆனால் ஆளும்கட்சியோ அரசியல்தீர்வு பற்றிய வாக்குறுதிகள் எதுவுமின்றி திட்டங்கள், அபிவிருத்தி பற்றிய வாய்ச் சவடால்களிலேயே வாக்குகள் கோரியது.
வெளிநாடுகளின் ஆலோசனைகளைக் கேட்கத் தயாரில்லை, அவர்கள் கூறும் தீர்வுகளை வழங்க முடியாது என்பன போன்ற வார்த்தைகளின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபகுதி மக்களுக்கு கூறியுள்ள செய்தி வெளிநாடுகளை நம்பிக் கொண்டிருக்காதீர்கள் என்பதே.
அதாவது, சர்வதேச ஆதரவுடன் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கக் கூடாது என்ற கருத்தையே அவர் வடக்கில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இவ்வாறு கூறினாலும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தை விடுவிப்பதற்கான ஒரு ஆயுதமாகவே இந்தத் தேர்தலை அரசாங்கம் பயன்படுத்தியது என்பது கருதப்படுகிறது
தன்னை நம்புமாறும், செய்வதைச் சொல்வேன் சொல்வதைச் செய்வேன் என்றெல்லாம் ஜனாதிபதி வடக்கில் உரையாற்றியுள்ளார். மிக விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று வலியுறுத்தப்பட்டாலும், அரசியல் ரீதியாக தமிழருக்கு எத்தகைய அரசியல் உரிமைகள் உறுதி செய்யப்படும் என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து எந்த உறுதியோ, உத்தரவாதமோ கொடுக்கப்படவில்லை.
சலுகைகள், அபிவிருத்தி பற்றிய திட்ட அறிவிப்புகளோடு எல்லாம் முடிந்து போயுள்ளன. தமிழர்களைப் பொறுத்தவரையில் அபிவிருத்தி மட்டும் தான் முக்கியமான பிரச்சினை என்றில்லை. அதற்கும் அப்பால் அரசியல் உறுதிப்பாடு மிகவும் அவசியம்.
அபிவிருத்தியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உறுதியான தலைமை அவசியமாக உள்ளது. அதனை தமிழருக்கான அரசியல்தீர்வு ஒன்றின் ஊடாகவே உறுதி செய்ய முடியும்.
ஆனால், அந்த வகையில் அரசாங்கம் எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. தமிழருக்கான அரசியல் உரிமைகள் பற்றி வாய் திறக்கப்படவேயில்லை. தமிழ் மக்களின் நம்பகத்தன்மையைத் தக்கவைத்துள்ளதாக அரசாங்கம் காட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளது.
அதேவேளைஇ ஏற்கனவே நடந்து முடிந்த பல தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது மக்களாதரவை உறுதி செய்துள்ள நிலையில், இந்த உள்ளூராட்சித் தேர்தல் அவர்களுக்கு மிகப்பெரிய அக்கினிப் பரீட்சையாகவே அமைந்துள்ளது.
இந்தத் தேர்தல் நடக்கின்ற சூழலும் காலமும் இதற்கு வரலாற்று முக்கியத்துவம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. ஒரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஈடான அளவுக்கு இது கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்கிலுள்ள மக்களின் கருத்து என்னவென்று வரும் ஞாயிறு காலை தெரிந்து விடும். ஆனால் அந்தத் தீர்ப்பு நியாயமானதொன்றாக இருந்தால் மட்டுமே இலங்கை அரசாங்கத்துக்கு சார்பானதாக அது அமையும். இல்லையேல் சர்வதேச நெருக்கடிகள் இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago