2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குழப்பங்களுக்கு முடிவு கட்டுமா கூட்டமைப்பு?

Super User   / 2011 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-கே.சஞ்சயன்

கடும் சவால்களுக்கு மத்தியில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் இருந்து கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது.

வெற்றிலைச் சின்னத்தில்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயரில்- வடக்கின் உள்ளூராட்சி நிர்வாகங்கள் அனைத்தையும் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற உறுதியில் அரசாங்கம் இருந்தது.

பருத்தித்துறைமுனை தொடக்கம் தெய்வேந்திரமுனை வரைக்கும்- இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிலைச் சின்னத்தின் ஆதிக்கமே உள்ளது என்று காட்ட அரசாங்கம் எல்லா வளங்களையும் இந்தத் தேர்தலுக்காகப் பயன்படுத்தியது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் அமைச்சர்கள், ஜனாதிபதி வரை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வடக்கில் பெரும்பாலான சுவர்களை மூடி ஆளும்கட்சியின் சுவரொட்டிகளே காணப்பட்டன. வாக்காளர்களை விட அதிகமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தளவுக்கு அரச தரப்பின் பிரசார பலம் மேலோங்கியிருந்தது.

ஆனால், கூட்டமைப்புக்கு அத்தகைய நிலை இருக்கவில்லை. அவர்களின் பிரசாரம் மிகப் பலவீனமாகவே இருந்தாலும், வெற்றி என்னவோ அவர்களின் பக்கமே சாய்ந்துள்ளது.

இந்தத் தேர்தலின் மூலம் வடக்கிலுள்ள மக்கள் தெளிவான செய்தியைக் கூறியுள்ளனர். அதை அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளதாகவே தெரியவில்லை.

இந்தத் தேர்தலில் வெற்றி கிடைக்கும், வடக்கில் உள்ள மக்கள் சர்வதேசத்தின் வாயை அடைப்பார்கள் என்று கூறிய அமைச்சர்கள் இப்போது சுருதியை மாற்றத் தொடங்கியுள்ளனர்.

வடக்கில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு ஆளும்கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர்கள் பலரும் தமக்குத் தாமே பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.

ஆளும்கட்சி தனித்து நின்று வடக்கில் தனது செல்வாக்கை நிரூபித்திருந்தால் இவ்வாறு கூறிப் பெருமைப்பட்டிருக்கலாம். ஈபிடிபியை வெற்றிலையில் போட்டியிட வைத்ததன் மூலமே இந்தளவு வாக்குகளை ஆளும்கட்சியால் பெற முடிந்தது என்பதே உண்மை.

ஈபிடிபி தனித்துப் போட்டியிட்டிருந்தால் சில வேளைகளில் இதைவிட அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை.

வெற்றிலையில் போட்டியிட்டதால் – ஈபிடிபிக்கும் இழப்பு ஆளும்கட்சிக்கும் இழப்பு என்றாகி விட்டது. இதனால் தான், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேர்தல் முடிவுகள் எல்லோருடைய கண்களையும் திறக்கச் செய்திருப்பதாக கூறினாரோ தெரியவில்லை.

வடக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட்டிருந்தால் இதைவிட அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பது தான் உலக மகா நகைச்சுவை.

ஈபிடிபியுடன் சேர்ந்து நின்றதால் தான் தாம் கெட்டுப் போனது போல அவர் கூறியுள்ளார். தனித்துப் போட்டியிட்டிருந்தால் தான் அதன் இலட்சணம் என்னவென்று அரசுக்குத் தெரிந்திருக்கும்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணை தொடர்பாக வெளியான கருத்துகளை அரசதரப்பு மறுதலித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அதிகாரப்பகிர்வுக்கு எதிராக அதைவிடப் பெரிய ஆணையைக் கொடுத்துள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியிருப்பது முக்கியமானது.

தெருவிளக்குகளையும், நீர்க்குழாய்களையும் பராமரிக்கும் அதிகாரம் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கே கூட்டமைப்புக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கேலி செய்துள்ளார்.

இந்த அற்பசொற்ப அதிகாரங்களுக்காகவே ஆளும்கட்சி அரசாங்க வளங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மோதியது என்பதை அவர் மறந்து போனது ஆச்சரியம் தான்.

அதிகாரப்பகிர்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளதாக பசில் ராஜபக்ஷ கூறியுள்ள கருத்து அரசாங்கம் தமிழ் மக்களின் ஆணையை கருத்தில் கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் அதிகாரப்பகிர்வுக்கு அரசாங்கம்   உடன்படத் தயாராக இல்லை என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்கள் வெவ்வேறு விதமான சிந்தனைகளோடு வாக்களித்துள்ள நிலையில், அரசாங்கம்  எந்தவொரு தரப்பினது ஆணையை மீறினாலும் அது சிக்கலாகவே போய் முடியும்.

அதேவேளை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள சபைகளின் நிர்வாகத்தைக் குழப்பும் முயற்சிகளில் அரசதரப்பு இறங்கலாம் என்ற சந்தேகங்கள் ஏற்கனவே தோன்ற ஆரம்பித்து விட்டன.

இப்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வேறு தெரிவு கிடையாது. இந்தத் தேர்தலில் தமக்குத் தோல்வி ஏற்படவில்லை என்று கூறிக் கொள்ளும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கு- இதற்கு மேலும் தமிழ் மக்களின் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்காது.

இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள உள்ளூராட்சி சபைகளில் திறமையான ஆட்சியை நடத்திக் காட்டட்டும் என்று விடுக்கப்பட்ட சவால்களின் பின்னால், ஒரு உள்ளார்ந்த அர்த்தம் மறைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சீரான நிர்வாகத்தை நடத்த முடியாது என்று காட்ட அரசாங்கத் தரப்பு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யக் கூடும் என்ற சந்தேகம் உள்ளது.

அதன் மூலம் தான் அடுத்து வரப்போகும் வட மாகாணசபைக்கான தேர்தலில் வெற்றி பெற முடியும். கூட்டமைப்பின் ஒற்றுமையையும் நிர்வாகத்தையும் சீர்குலைப்பதன் மூலம் வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி காரியம் சாதிப்பதை விட வேறு தெரிவு அரசாங்கத் தரப்புக்குக் கிடையாது.

இந்தநிலையில், தான் வல்வெட்டித்துறை நகரசபை முதல்வர் விவகாரத்தில் முளைத்துள்ளது பிரச்சினை.  இந்தப் பிரச்சினையை உருவாக்கியுள்ளவர் முன்னாள் நகர முதல்வரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தான்.

விருப்புவாக்குகள் அடிப்படையில் இரண்டாவது இடத்தைப் பிடித்த அவரால் சபை முதல்வர் பதவியைக் கைப்பற்ற முடியாது போனது. ஆனால் அவர்  அந்தப் பதவி தனக்கே தரப்பட வேண்டும் என்று முரண்டு பிடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த விவகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பெரும் தலைவலியையும் சவாலையும் ஏற்படுத்தப் போதுமானது.

சிவாஜிலிங்கம் தனக்கு நகரமுதல்வர் பதவி தரப்படாது போனால் நகரசபை நிர்வாகத்தை செயற்பட விடாமல் முடக்கப் போவதாக எச்சரித்திருப்பது மக்கள் மத்தியில் கடும் வெறுப்புணர்வை  ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிந்த ஒரு வாரத்தில்-  இத்தகைய மிரட்டலை அவர் விடுத்திருப்பது கவலைக்குரிய தொன்றாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கூட்டமைப்புக்குள் சிவாஜிலிங்கம் குழப்பங்களை ஏற்படுத்திய நிலையில் தான் அவரை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு தனியாக ஒரு கட்சியைத் தொடங்கிய போதும் அவரால் நின்று பிடிக்க முடியாது போனது.

இதன்பின்னர் பெரும் இழுபறிகளுக்கு மத்தியில் தான் அவரை வல்வெட்டித்துறை நகரசபை வேட்பாளராக போட்டியிட கூட்டமைப்பின் தலைவர்கள் இணங்கினர். இதற்கு ரெலோ, ஈபிஆர்எல்எவ் போன்ற கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.  இப்போது சிவாஜிலிங்கம் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளால் ஏற்கனவே அவருக்கு இடம்கொடுத்தற்கு எதிர்ப்புத் தெரிவித்த கட்சிகளுக்கு இன்னமும் வசதியாகி விடும்.

இந்த விவகாரத்தை ஊதிப் பெருப்பித்து பேனைப் பெருமாளாக்கும் காரியங்களை அரசாங்கத்தினால் சுலபமாகவே செய்ய முடியும். அதேவேளை இந்தப் பிரச்சினைக்கு கூட்டமைப்பு தீர்வு காணத்தவறினால்- அது எல்லா இடங்களிலும் இதே பிரச்சினை முளைவிடக் காரணமாகி விடும். எல்லா இடங்களிலும் சுழற்சி முறையில் தலைமைப் பதவிக்கு உறுப்பினர்களை நிறுத்த வேண்டிய நிலை உருவாகி விடும்.

இது கூட்டமைப்பின் எதிர்காலத்துக்குப் பெரிதும் சிக்கலாக அமையப் போகிறது. இந்தச் சிக்கலுக்கு உடனடியாகத் தீர்வு காணத் தவறினால் அடுத்த சில மாதங்களில் நடக்கப்போகும் மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.


You May Also Like

  Comments - 0

  • Haran Thursday, 04 August 2011 01:15 PM

    கூட்டமைப்பு - கூத்தமைப்புபாக மாறிவிட்டது தங்கள் சுய நலதிற்காக போராடும் கூட்டம் தமிழனின் தலை விதியில் இவர்களின் கூத்தில்.

    Reply : 0       0

    koneswaransaro Thursday, 04 August 2011 07:04 PM

    பிச்சைக்காரத்தனமாக நடந்து கொள்ளாமல் நல்ல மனிதனாக நடக்கத் தெரிந்து கொள்ளவேண்டும் . அதுதான் தமிழ் மக்களுக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் நல்லது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X