Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
• மப்றூக்
அச்சத்தின் உச்சத்தில் உறைந்து போய்க் கிடக்கின்றன அந்தக் கிராமங்கள்! பகல் வேளைகளில் மட்டுமே அதிகமான மக்கள் வெளியே வருகின்றார்கள். மாலையானதும் வீட்டுக்குள் அடங்கிப் போகின்றார்கள்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம், வரிப்பத்தான்சேனை போன்ற பகுதிகளின் இன்றைய நிலைதான் இது...
அண்மைக் காலமாக இப் பகுதியில் நடமாடி வருவதாகக் கூறப்படும் 'மர்ம மனிதன்' பற்றிய கதைகள்தான் இந்த நிலைமைக்குக் காரணமாகும்!
இறக்காமம் - வரிப்பத்தான்சேனை ஆகியவை எல்லைக் கிராமங்களாகும். இயற்கையாகவே இப் பகுதியில் கற்பாறைகள், பற்றைகள், காடுகள் அதிகளவாக அமையப் பெற்றுள்ளன. இலங்கையிலுள்ள நீண்ட வராலாறு கொண்ட கிராமங்களில் இறக்காமமும் ஒன்று!
இறக்காமம் பகுதியில் அண்மைக் காலமாக இரவு வேளைகளில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், இதனால் இப்பகுதியே பீதியடைந்துள்ளதாகவும் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. மேலும், இவ்விடயம் தொடர்பில் சில நாட்களுக்கு முன்னர் இறக்காமம் பொலிஸாருக்கும் - பொதுமக்களுக்குமிடையில் மோதலொன்றும் இடம்பெற்றிருந்தது. எனவே, இவை தொடர்பில் நேரடியாக அறிந்து கொள்வதற்காக – நாம் இறக்காமம், வரிப்பத்தான்சேனை ஆகிய பகுதிகளுக்குச் சென்றோம்!
முதலில் இறக்காமத்தையடைந்த நாம் - அங்கு மர்ம மனிதர்களை நேரடியாகக் கண்டவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டினோம்!
அந்தவகையில், இறக்காமத்தில் றசீனா உம்மா என்பவர் - குறித்த மர்ம மனிதனைக் கண்டதாக அறியக் கிடைத்தது. றசீனா உம்மாவைத் தேடிச் சென்று - சந்தித்துப் - பேசினோம்!
றசீனா உம்மா – அந்த நிகழ்வை அச்சத்துடன் ஞாபகித்தார்.
'வியாழக்கிழமையன்று (ஓகஸ்ட் 04ஆம் திகதி) இரவு 10 மணியிருக்கும். எனது சகோதரியின் வீட்டிற்கு வெளியேயுள்ள மணற் குவியலில் நானும், சகோதரியும், அவருடைய பிள்ளைகளுமாகச் சேர்ந்து சந்தோசமாகக் கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது, 'நௌசாத்... நௌசாத்...' என்று என்னுடைய சகோதரியின் மகனுடைய பெயரைச் சொல்லி யாரோ கூப்பிட்டார்கள். நௌசாத்தின் நண்பர்கள்தான் யாராவது கூப்பிடுகிறார்களோ என்று நினைத்தேன். பிறகு மணலில் படுத்துக் கொண்டிருந்த நான் - தலையை உயர்த்திப் பார்த்த போது... கறுத்த உருவம் ஒன்று என் முன்னே சற்று தூரத்தில் நின்றது!
மர்ம மனிதர்கள் பற்றிய கதைகள் ஊர் முழுக்க உலவியதால், குறித்த உருவம் - மர்ம மனிதனாகத்தான் இருக்கும் என நான் அனுமானித்துக் கொண்டேன். நான் தைரியத்தை இழக்கவில்லை. உடனடியாக, எனது சகோதரியை அழைத்து – அவனைத் தாக்குவதற்குக் கத்தியை எடுத்துக் கொண்டு ஓடி வாருங்கள் என்று பல முறை சத்தமிட்டுக் கத்தினேன். பிறகு, நாங்கள் எல்லோரும் அவன் நின்ற இடத்தை நோக்கிச் சென்றோம். அவன் தப்பிச் சென்று விட்டான்.
அவன் - கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தான். முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் முகமும் கறுப்பாகவே தெரிந்தது. முகமூடி அணிந்திருந்தானா இல்லையா என்று விளங்கவில்லை' என்றார் - றசீனா உம்மா!
குறித்த மர்ம மனிதன் வந்து சென்றதாகக் கூறப்படும் அநேகமான வீடுகளில் ஆண்கள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆண்கள் வெளிநாடு சென்றுள்ள வீடுகள் அல்லது கணவனை இழந்தவர்களின் வீடுகள் மற்றும் இரவு வேலைக்கு ஆண்கள் சென்றிருந்த வீடுகளிலேயே அதிகமாக இந்த மர்ம மனிதனின் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
வரிப்பத்தான்சேனையில் உள்ள சில வீடுகளுக்கும் மர்ம மனிதன் வந்து போனதாகத் தகவலறிந்தோம். எனவே, இறக்காமத்திலிருந்து வரிப்பத்தான்சேனை நோக்கி எமது பயணம் தொடர்ந்தது!
அங்கு – ஆமினா உம்மா என்பவரின் வீட்டிற்குச் சென்றோம். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் குறித்த மர்ம மனிதனுடன் 'போராடிய' கதையைக் கூறத் தொடங்கினார் அவர்ளூ
'31ஆம் திகதி நள்ளிரவு தாண்டி 2.00 மணியிருக்கும். எங்கள் வீட்டு ஜன்னல்களையெல்லாம் கள்வன் (மர்ம மனிதனை – கள்வன் என்றே கூறினார்) திறந்து விட்டு, கதவைத் திறக்கும் போதுதான் நாங்கள் விழித்துக் கொண்டோம்.
ஆனால் கள்வன் ஓடவில்லை. அவன்; வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். நாங்கள் அச்சமடைந்தோம். அருகிலிருந்த வீடுகளுக்கெல்லாம் தொலைபேசி மூலம் விடயத்தைத் தெரியப்படுத்தினோம். 119 எனும் அவசர பொலிஸ் இலக்கத்துக்கும் அறிவித்தோம். ஆயினும் சுமார் 45 நிமிடங்கள் அவன் வெளியில் நின்று கொண்டேயிருந்தான். அயலவர்களும் - திடீரென எங்கள் வளவுக்குள் நுளைவதற்குப் பயப்பட்டனர். பொலிஸாரும் வரவில்லை. பிறகு 2.45 மணியளவில் தூரத்திலிருந்த எமது உறவினர்கள் வந்தனர். நானும் வெளியே வந்தேன். அப்போதுதான் அவன் தப்பிச் சென்றான். என்னை மிகவும் அருகாமையில் கடந்துதான் ஓடினான். எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வளவு காடுபிடித்துப் போய்க் கிடப்பதால் அவன் மிக இலகுவாகத் தப்பிச் செல்ல முடிந்தது.
அவன் கறுப்பு நிறத்தில் இருந்தான். சாதாரண உயரம்தான். எங்கள் வீட்டுக்கு வெளியில் எரிந்து கொண்டிருந்த மின்குமிழை அணைக்குமாறு அவன் தமிழ் மொழியில் தூசண வார்த்தைகளால் சத்தமிட்டான்'
ஆமினா உம்மாவின் பெண் பிள்ளைகளும் அப்போது வீட்டில் இருந்திருக்கின்றார்கள். பிள்ளைகளில் ஒருவர் - ஜன்னல் இடுக்கினால் வெளியே பார்க்க முயற்சித்த போது, குறித்த மர்ம மனிதன் ஜன்னலில் ஓங்கி அடித்திருக்கின்றான். இதனால், பீதியடைந்த அந்தப் பிள்ளை அலறியடித்துச் சத்தமிட்டிருக்கின்றார்.
மர்ம மனிதர்களைக் கண்டதாகக் கூறும் மேலும் இருவரையும் நாம் சந்தித்தோம். கறுப்பு ஆடைகள் அணிந்த இரண்டு பேரைத் தாம் - ஒரே நேரத்தில் பார்த்ததாக – அவர்கள் கூறினார்கள்.
இதேவேளை, எந்தவொரு வீட்டிலும் மர்ம மனிதன் இதுவரையில் எதையும் திருடியதாக யாரும் கூறவில்லை. யாரையும் தாக்கியதாக முறைப்பாடுகளுமில்லை.
இது இப்படியிருக்க, மர்ம மனிதர்கள் இருவரை இறக்காமம் பிரதேசத்தில் பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் இது விடயத்தில் சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டதாகவும் மக்கள் மத்தியில் இரண்டு கதைகள் பேசப்படுகின்றன!
முதலாவது கதை: கடந்த 31ஆம் திகதியன்று இரவு – இறக்காமம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நடமாடியிருக்கின்றார். அவரை அதற்கு முன்பு அப்பகுதியில் மக்கள் கண்டிருக்கவில்லை. எனவே, உடனடியாக அங்கு நின்ற சிலர் - குறித்த சந்தேக நபரைப் பிடித்து முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றி வந்து, இறக்காமம் பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
ஆனால், பொலிஸாரிடம் சந்தேக நபர் ஏதோவொரு பொருளைக் காண்பித்திருக்கின்றார். உடனே, சந்தேக நபருக்குப் பொலிஸார் 'சல்யூட்' அடித்து விட்டு, அவரைத் தப்பிக்க விட்டுள்ளனர்.
இரண்டாவது கதை: இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் கடந்த 03ஆம் திகதி இரவு அப்பகுதியில் சந்தேகம் தரும் வகையில் உலவிய ஒருவரைப் பிடித்துக் கொண்டு வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்கள். இவ்விடயம் ஊர் முழுக்கப் பரவியது. மர்ம மனிதர்களில் ஒருவர் பொலிஸில் பிடிபட்டுள்ளதாக மக்கள் நம்பினார்கள். இறக்காமம் பொலிஸ் நிலையத்துக்கு ஊரே திரண்டு வந்தது. பிடிபட்ட மர்ம மனிதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரிடம் மக்கள் கேட்டார்கள்.
ஆனால், பொலிஸார் - மக்களின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு - இறுதியில் பொலிஸ் நிலையத்தை மக்கள் தாக்கும் நிலைக்குச் சென்றனர்.
மேலுள்ள கதைகளின் அடிப்படையில், இறக்காமம் மற்றும் வரிப்பத்தான்சேனையில் உலாவி வரும் மர்ம மனிதர்களை இறக்காமம் பொலிஸார் காப்பாற்றிருக்கின்றார்கள், தப்பிக்க வைத்துள்ளார்கள்!
இந்த இரண்டு கதைகள் குறித்தும் பொலிஸார் என்ன சொல்கின்றார்கள் என அறியும் பொருட்டு, இறக்காமம் பொலிஸ் நிலையம் சென்றோம். சரியாகச் சொன்னால் அது ஒரு உப பொலிஸ் நிலையம். தமணை பொலிஸ் நிலைய நிருவாகத்தின் கீழ் இயங்கி வருகின்றது.
நல்ல வேளையாக, நிலையப் பொறுப்பதிகாரி அங்கிருந்தார். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். நிலையப் பொறுப்பதிகாரியின் பெயர் எம்.வை.ஜௌபர். இவரும் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்தான். மர்ம மனிதர்கள் குறித்து எங்களிடமிருந்த கேள்விகளுக்கெல்லாம் மிகவும் நிதானமாகப் பதிலளித்தார்.
முதலாவது கதைக்கான விளக்கம்: 'கடந்த 31ஆம் திகதியன்று இரவு இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் நபர் ஒருவரைப் பிடித்துக் கொண்டு வந்து இறக்காமம் பொலிஸில் ஒப்படைத்தமை உண்மைதான். ஆனால், குறித்த நபர் சந்தேசகத்துக்கு உரியவரல்லர்! அவர் ஒரு பொலிஸ் உப பரிசோதகர். அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்றார். வெளியூரைச் சேர்ந்தவர்.
விடுமுறையில் தனது வீட்டுக்குச் சென்றிருந்த இவர் சம்பவ தினம் கடமைக்குத் திரும்பியிருக்கின்றார். அந்தவகையில், தனது ஊரிலிருந்து அம்பாறைக்கு வந்த குறித்த பொலிஸ் உப பரிசோதகருக்கு அக்கரைப்பற்றுக்கு வருவதற்கு வாகனம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அம்பாறையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி வந்த இவரை - இறுதியாக ஒருவர் இறக்காமத்தில் இறக்கி விட்டுச் சென்றிருக்கின்றார்;!
ஆக, அக்கரைப்பற்றுக்குச் செல்வதற்காக பஸ் மற்றும் வாகனங்கள் இன்றி வீதியில் தவித்துக் கொண்டிருந்த பொலிஸ் உப பரிசோதகரைத்தான் - மர்ம மனிதன் எனும் பீதியில் இருந்தோர் சந்தேகப்பட்டுப் பிடித்து வந்தார்கள்.
ஆயினும், சந்தேகத்துக்குரிய உப பரிசோதகர் - தான் யார் என்பதை விளக்கினார். தன்னை நிரூபிக்கும் அடையாள அட்டைகளை காண்பித்தார். அதேவேளை நாமும் அக்கரைப்பற்றுப் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு இவர் கூறிய விடயங்களை உறுதி செய்த பின்னர்தான். அவரை – அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தோம்' என்றார் இறக்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி.
இரண்டாவது கதைக்கான விளக்கம்: சில இளைஞர்கள் கடந்த 03ஆம் திகதி இரவு சந்தேகத்துக்கிடமாக இறக்காமம் பகுதியில் காணப்பட்ட நபரொருவரைப் பிடித்துக் கொண்டு வந்து எம்மிடம் ஒப்படைத்தார்கள்.
அந்த நபரிடம் நாம் விசாரணைகளை நடத்திக் கொண்டிருந்த போது, இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தை நோக்கி வந்தனர். குறித்த சந்தேக நபரை தம்மிடம் ஒப்படைக்குமாறு ஆத்திரத்துடன் சத்தமிட்டனர்.
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் - இறக்காமம் பிரதேசத்தில் உலவுவதாகப் பேசப்படும் மர்ம மனிதர்களில் ஒருவர் என்றுதான் மக்கள் நம்பினர்.
சந்தேக நபரை மக்களிடம் ஒப்படைத்திருந்தால் - மக்கள் அடித்தே கொன்றிருப்பார்கள். எனவே, மக்களை நாம் ஆற்றுப்படுத்தும் வகையில் பல வழிகளிலும் பேசினோம். பள்ளிவாசல் தலைவர், ஊர் பிரமுகர்களையெல்லாம் அழைத்துப் பேசினோம். ஆயினும், சமரசங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இறுதியில், இறக்காமம் பொலிஸ் நிலையத்தைச் சுற்றி முற்றுகையிட்ட மக்கள் - கற்களாலும், தடிகளாலும் தாக்கினார்கள். அங்கிருந்த வாகனங்களை எரியூட்டினார்கள், இதனால் 08 பொலிஸார் காயமடைந்தனர். கடைசியில், தமணையிலிருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினர்தான் நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
இதில் கவலைக்குரிய வேடிக்கை என்னவென்றால், சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட அந்த நபர் உண்மையில் ஒரு மனநோயாளி. சம்மாந்துறையைச் சேர்ந்தவர். பெயர் - வெள்ளத்தம்பி ஆதம்பாவா. வீட்டில் மஜீத் என்று அழைப்பார்கள்.
ஆக, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மக்கள் கூறும் கதைகளுக்கும் கருத்துக்களுக்கும் இணங்க பொலிஸாரால் செயற்பட முடியாது. எமது கடமையை நாம் செய்திருக்கின்றோம். அவ்வளவுதான்' என்றார் பொறுப்பதிகாரி ஜௌபர்!
பொலிஸ் நிலையத்தினுள் நாம் இருந்த போது, பொலிஸ் நிலையக் கட்டிடக் கூரைகள் மற்றும் வளவு முழுக்க சிறு சிறு கற்களாகக் காணப்பட்டன. விசாரித்ததில், அவை - பொதுமக்கள் தாக்கிய கற்களில் இன்னும் அகற்றி முடிக்கப்படாதவை எனத் தெரியவந்தது!
மர்ம மனிதர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் மக்களிடம் இதனால் ஏற்பட்டுள்ள மனநிலை குறித்தெல்லாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு - இப் பகுதிகளில் நாம் சந்தித்த பொதுமக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.
அப்போது, நபரொருவர் கூறிய தகவல்களில் ஒன்று – குறிப்பிடும் படியானது.
அவரின் பெயர் எஸ்.எல்.பாறூக். வரிப்பத்தான்சேனை இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர். அவர் நம்மிடம் இவ்வாறு பேசினார்-
'மர்ம மனிதர்கள் பற்றிய கதைகளால் ஊரில் மிகவும் மோசமான பீதி நிலவுகின்றது. இரவானால் பெண்கள் வெளியில் செல்வதற்குப் பயப்படுகின்றார்கள். ஆண்களையும் வீட்டிலேயே இருக்குமாறு வற்புறுத்துகின்றார்கள். இதனால், எங்கள் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எமது பாதுகாப்புக்காக நாம் அரசாங்க அனுமதியுடனான துப்பாக்கிகளை முன்பு வைத்திருந்தோம். அவை இருந்திருந்தால் இந்த நிலையை ஓரளவுக்கு சமாளித்திருக்க முடியும். ஆனால், இந்த மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், (07ஆம் மாதம் 28ஆம் திகதி) தமணை பொலிஸார் எம்மிடமிருந்த துப்பாக்கிகளையெல்லாம் வாங்கியெடுத்து விட்டனர்!'
மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு - சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னர், பொதுமக்களிடமிருந்த அனுமதிப்பத்திரத்தினுடனான துப்பாக்கிகளை பொலிஸார் ஏன் பெற்றுக் கொண்டார்கள்? அதற்குரிய தேவைதான் என்ன? இறக்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜௌபரிடம் கேட்டோம்.
'இந்த துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். இப்போது பயங்கரவாதப் பிரச்சினைகள் இல்லை. எனவே, பாதுகாப்புக்காக துப்பாக்கிகள் தேவைப்படாது. தவிரவும், இந்தத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சிலர் - மிருகங்களை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வந்தன. எனவேதான், குறித்த துப்பாக்கிகளை பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டோம்' என்றார் நிலையப் பொறுப்பதிகாரி!
இறக்காமம் பொலிஸாரின் தகவலின் படி, மேற்படி மர்ம மனிதன் குறித்து பொலிஸாரிடம் இதுவரை (06 ஓகஸ்ட் 2011 வரை) நேரடியாக இரண்டு முறைப்பாடுகளும், தொலைபேசி மூலமாக 15 முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை, இறக்காமம் வரிப்பத்தான்சேனைப் பகுதிகளில் தற்போது - மேலதிகமாக 40 பொலிஸார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். (இறக்காமம் மக்களால் சந்தேகத்தின் பேரில் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரும் மேற்படி விசேட கடமைக்காக இறக்காமம் வந்துள்ளார் என்பது ஆச்சரியமான நகைச்சுவையாகும்!) பிரதேசம் முழுவதும் 11 பொலிஸ் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர ஊரெல்லாம் நடமாடும் பாதுகாப்புக் கடமையிலும் பொலிஸார் ஈடுபட்டும் வருகின்றனர்.
இத்தனைக்கு மத்தியிலும் சில வீடுகளில் மர்ம மனிதனின் தொந்தரவு இடம்பெற்றுள்ளமைதான் ஆச்சரியமானது!
அச்சத்துள் வாழ்தல் என்பது மிகவும் கொடூரமானதொரு அனுபவமாகும்.
'நிம்மதியாகச் சாப்பிட முடியவில்லை. பிடறிக்குப் பின்னால் யாரோ நிற்பது போல் பயமாக இருக்கிறது' என்று நாம் சந்தித்த பெண்ணொருவர் அழுகை நிரம்பிய மொழியில் பேசியபோது கவலையாகவும் பரிதாபமாகவும் இருந்தது.
இந்த மர்ம மனிதர்கள் யார்? இவர்களின் நோக்கம் அல்லது தேவைதான் என்ன எனப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் - மர்ம மனிதர்கள் குறித்து மக்கள் மத்தியில் ஏராளமான அனுமானக் கதைகள் உருவாகியுள்ளன. அவைகளில் சில – அரசாங்கத்தைச் சந்தேகிக்கும் படியானவை.
எனவே, இந்த விவகாரத்தில் பொதுமக்களின் அச்சத்தைத் துடைத்தெறியும் வகையிலும், அரசாங்கம் குறித்து பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள சந்தேகங்களைக் களையும் வகையிலும் ஆட்சியாளர்கள் உடனடியாகச் செயற்படுதல் வேண்டும்!
மர்ம மனிதன் குறித்த - மர்மங்கள் துலங்க வேண்டும்!!
HR - polonnaruwa Thursday, 11 August 2011 06:06 PM
அரசாங்கம் இதற்கு உதவி செய்தால் எவ்வாறான முயற்சிகளும் பலனளிக்காது.போலிஸ் விசாரணை செய்யும் போது உண்மை வெளிவரும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.
Reply : 0 0
thowfeek Wednesday, 10 August 2011 02:34 PM
இதற்கு ஒவ்வொரு ஊரும் சேர்ந்து ஊரில் உள்ளே இளைஞர்களை திரட்டி ஒரு தனி படையாகி பாதுகாப்பு இடவேண்டும். அதே சமயம் சர்வதேச மனித ஆணைக் குழுவிடம் ஒரு மனு கொடுக்க வேண்டும்.
Reply : 0 0
fairoos Wednesday, 10 August 2011 06:35 PM
இப்படியான சமயத்தில் உதவாத அரசியல்வாதிகள் நமது ஊருக்கு தேவைதானா????????
Reply : 0 0
infas Wednesday, 10 August 2011 08:09 PM
நன்று. தேங்க்ஸ். இது ரொம்ப உதவி.
Reply : 0 0
xlntgson Wednesday, 10 August 2011 09:27 PM
ஜேவிபிக்காரர்கள் இரவில் வீடு வந்து தொந்தரவு புரிகின்றார்கள் என்று அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜெரத்னவிடம் முறையிட்ட போது அவர் கூறினார்: 'தாக்குங்கள்! செத்தாலும் சரி, நான் பார்த்துக் கொள்கின்றேன்', என்று!
selfdefence அதையே நான் இப்போது நினைவு கூர விரும்புகின்றேன். vigilant என்னும் குழுக்கள் கம்பு தடிகளோடு மாறி மாறி காத்திருக்க வேண்டும், இரவு சிறு தூக்கம் போதும்- 4 மணிக்கு மேல் அவசியமில்லை. அண்டை அசல் ஒற்றுமை வளரும்! அண்டை அயலில் இருக்கும் பிரச்சினைகளால் திருடர்கள் பலனடைகின்றனர்!
Reply : 0 0
ஓட்டமாவடி ஜெமீல் Wednesday, 10 August 2011 10:37 PM
மர்ம மனித கூட்டத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவனைப் பிடித்தால் முதலில் மக்கள் முன்னிலையில் வைத்து வாக்குமூலம் பெற்ற பின்னரே பொலிசாரிடம் ஒப்படைக்க வேண்டும் . இவ்வாறு செய்தாலேயே மொத்த மர்மமும் ஓரளவிற்கு துலங்கும்.
Reply : 0 0
hari Wednesday, 10 August 2011 11:18 PM
ஏன் அரசு மற்றும் படையினர் இது தொடர்பாக கூடிய அக்கறை செலுத்தவில்லை. அதிகமாக முஸ்லிம் பகுதிகளிலும் மலை நாட்டிலும் இது கூடுதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது யார் இவர்களா? இவர்கள் நோக்கம் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்? அவசியம் விடை காணப்பட வேண்டும்.
Reply : 0 0
ஹாசிம் Thursday, 11 August 2011 03:14 AM
இதற்கான காரணத்தைக் கண்டறிவதுடன் இந்த மர்ம நபர்களைப் பிடிக்கும் விடயத்தில் இளைஞர்கள் முன்னின்று செயற்பட வேண்டும்.
சமூகத்தைக் காக்கும் கடமை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களின் கையிலும் தங்கியிருக்கிறது
Reply : 0 0
Riphnas Thursday, 11 August 2011 04:16 AM
inraikku ottamaavadiyilum ippadiyoru sampavam nadanthathaakak kelvippatten.
Reply : 0 0
றுஸ்லி Thursday, 11 August 2011 01:24 PM
இது மனிதனை மனிதன் பயமுறுத்தும் முயற்சி... இதனைப்பற்றிய கவனக் குவிப்பு அவசியம். இதனோடு சேர்த்து எமது மற்றைய விவகாரங்களும் மனதில் நிறுத்தப்பட வேண்டும். எனக்கு தெரிந்தளவுக்கு முஸ்லிம்களை மட்டும் ஏன் இந்த மர்ம மனிதர்கள் குறிவைக்கிறார்கள்?! தெரியவில்லை...
Reply : 0 0
hari Thursday, 11 August 2011 04:50 PM
மர்ம மனிதர்களை பல இடங்களில் போலீசிடம் கொடுத்து இருக்கிறார்கள் அனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது விசாரணையின் முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியாமல் இருப்பதே தவறு.
Reply : 0 0
paragahadeniya www Wednesday, 10 August 2011 10:20 AM
இந்த ரமடான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு செய்கின்ற கொடுமையை அல்லாஹுதால அந்த அநியாயக்காரரையும் அவன் குடும்பத்தையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்துவானாக.
Reply : 0 0
Ihjaz Thursday, 11 August 2011 06:44 PM
இப்படியான தகவல்களால் கிண்ணியாவில் பெண்கள் பயத்தில் உள்ளனர்.இதனால் தராவிஹ் தொழுகைக்கு செல்ல அஞ்சுகின்றனர்.இதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கினால் முன்கூட்டியே பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
Reply : 0 0
lafeer Friday, 12 August 2011 02:09 AM
அரசு ஏன் மவ்னம் சிந்தியுங்கள்?
Reply : 0 0
Musfik Friday, 12 August 2011 07:55 AM
அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். தப்பு செய்பவர்கள் அனைவரும் தண்டனையை அனுபவிப்பர்..
Reply : 0 0
fath Saturday, 13 August 2011 08:21 PM
மர்ம மனிதனின் முகத்தை எப்படியாவது பாருங்கள் . சிலவேளை எமது அரசியலவாதிகளாக இருக்கலாம்.
Reply : 0 0
நாடோடி Sunday, 14 August 2011 08:54 AM
எது எப்படியோ ...இது அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் ஆரம்பித்திருந்தாலோ.. அல்லது கொள்ளையர்கள் ஆரம்பித்திருந்திருந்தாலோ பிடிபடுவது என்னவோ அப்பாவிகள் தான்.... பார்க்கப்போனால் மர்ம மனிதனின் நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு,பாதுகாப்பு படை- இராணுவம் இவற்றை விட பிடித்துக்கொடுக்கும் பொதுமக்களே மூடர்களாக இருக்கிறார்கள்... உதாரணமாக மலையகத்தில் மர்ம மனிதன் என பிடித்து அடித்து கொல்லப்பட்ட இருவரும் அப்பாவி தமிழ் வர்த்தகர்கள்.. மட்டக்களப்பில் பிடிபட்டவர் தனது காதலியை பார்க்க வந்த வேறு பிரதேசத்தை(சிலாபம்) சேர்ந்த ஒரு இஸ்லாமிய சகோதரர்.. மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இறக்காமத்தில் பிடிபட்டவர் ஒரு மன நோயாளி... என்ன நடக்கிறது இந்த நாட்டில்???? மக்கள் முட்டாள்களா.. இல்லை இந்த அரசு முட்டாளா?? உண்மைகள் வெளிவரவேண்டிய காலம் எப்போது என்பது அனைத்து இன மக்கள் எதிர்ப்பார்ப்பு... அரசின் வழக்கமான மூடிமறைக்கும் செயற்பாடுகளை போல இந்த மர்ம மனிதனின் செய்திகளும் மறைக்கப்படாமல் மறுக்கப்படாமல் புலப்படுத்தப்பட்டால் சந்தோசம்தான்.
Reply : 0 0
vasan Friday, 19 August 2011 02:26 AM
சனல் நான்கினை திசை திருப்புவதற்காக இந்த கிரிஸ்பூத கபட நாடகம். தொடக்கம் வெளிமாவட்டம் முடிவு யாழ் மாவட்டம்?
Reply : 0 0
Mohammed Razeem Friday, 19 August 2011 10:47 PM
இவர்கள் அதிகமாக பெண்களை தாகுவதட்கான காரணம் என்ன? அரச தரப்பினால் இதற்கு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்?
Reply : 0 0
sharmee Wednesday, 24 August 2011 05:09 AM
இதிலிருந்து நீங்க என்ன நினைகிறீங்க ???????????
Reply : 0 0
Adam Friday, 26 August 2011 11:03 AM
இந்த மர்ம மனிதர்கள் நாட்டின் பல பாகங்களிலும் மக்களின் நிம்மதியை கெடுத்து விட்டான். குருநேகலையில் பாதிக்கப்பட்ட மேலும் சில கிராமங்கள் - சியம்பலாகஸ் கொடுவ, அம்மயன்குலம், பரகஹகொடுவ், கஹடகஹமட, கேகுனகொள்ள- உண்மையில் பலரின் நிம்மதியை கெடுத்தவனை இறைவன் ஒரு நாளும் நிம்மதியாக இருக்க விடமாட்டன்.
Reply : 0 0
Reeza F M Monday, 05 September 2011 04:11 AM
மர்மமனிதன் செய்திகள் மர்மமாகத்தான் இருக்குது. சொல்லுவதெல்லாம் வெறும் கதை. மக்களை எவ்வளவு காலம் ஏமாற்றலாம்.
Reply : 0 0
thamil anban Tuesday, 09 August 2011 03:16 PM
புலிகளின் காலத்தை விட இப்பொழுது மக்கள் அதிகம் பயப்படுகிறார்கள்.ந ல்ல ஆட்சி????????????
Reply : 0 0
hussain Monday, 08 August 2011 09:43 PM
இறக்காமம் மட்டுமல்ல.நாட்டில் பல பிரதேசங்களில் இவ்வாறுதான் நடைபெறுகின்றது.அரசாங்கம் கவனிக்காமல் இருப்பது அதனுடன் இருக்கும் தொடர்பை காட்டுகிறது.
Reply : 0 0
Abdul Wahab Monday, 08 August 2011 11:07 PM
அது சரிதான் 45 நிமிடங்களாகியும் 119 அழைப்பும் பொலிஸாரும் என்ன செய்தார்கள் ஏன் அவ்விடத்திற்கு விரையவில்லை?
Reply : 0 0
Abdul salam Tuesday, 09 August 2011 01:45 AM
கண்டிப்பாக இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
Reply : 0 0
Thariq Niyas Tuesday, 09 August 2011 04:03 AM
இது மக்களின் நிலத்தை பறிப்பதற்கான புதிய உத்தி. மக்களை அச்சமுற செய்து அப்பிரதேசத்தை விட்டு விரட்டத்தான் இப்படி நடக்கிறது..
Reply : 0 0
hari Tuesday, 09 August 2011 06:12 AM
என்ன நடக்கிறது என பொலிசார் கண்டுபிடிக்க வேண்டும் மக்கள் தெளிவடைய வேண்டும் யார் போட்ட திட்டம் இது?
Reply : 0 0
m Tuesday, 09 August 2011 07:28 AM
இந்த கதை எல்லா இடமும் பரவியும் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலைக்குரியது.
Reply : 0 0
sana Tuesday, 09 August 2011 08:32 AM
ithu kaani pari itea
Reply : 0 0
Paragahadeniya Tuesday, 09 August 2011 08:48 AM
இது சகல முஸ்லிம் பிரதேசங்களிலும் இருக்கின்ற பெரும் பிரச்சினை. அக்குரணை பரகஹதேனிய வடதேனிய மவதகம கண்டி உட்பட இன்னும் பல முஸ்லிம் கிராமங்களில் இதே போன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
Reply : 0 0
faizar Tuesday, 09 August 2011 10:44 AM
பொலன்னறுவை கதுருவெல பிரதேசத்திலும் இந்த மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் வழமையாக இருந்து கொண்டே வருகிறது, ஊர்வாசிகள் முயற்சித்தும் எவரும் கண்டு பிடிக்கப் படவில்லை.மக்களை பீதியில் ஆழ்த்தும் இந்த வேலைகளை police இல் அறிவித்தும் எந்த முயற்சியும் எடுக்காததை இட்டு சந்தேகமாக உள்ளது.
Reply : 0 0
Sanfar Tuesday, 09 August 2011 01:53 PM
அரசாங்கம் மூட நம்பிக்கையில் மூழ்கியதன் ஆதாரம்.........விரிவாகக் கூறுவது கஸ்டம் ......
Reply : 0 0
hussain Monday, 08 August 2011 09:41 PM
இறக்காமத்தில் மட்டுமல்ல.நாட்டில் பல பிரதேசங்களில் இவ்வாறுதான் நடைபெறுகின்றது.
Reply : 0 0
Shafraz Tuesday, 09 August 2011 03:43 PM
அச்சுறுத்திவிட்டுத் தப்பிச் செல்வதைத் தவிர யாரையும் தாக்கியதாகவோ, திருடியாதாகவோ நாட்டின் எப்பகுதியிலும் எந்தத் தகவலும் இல்லை. இது விசேட பயிற்சி நடவடிக்கையாக இருக்கலாம்.
Reply : 0 0
Harees Tuesday, 09 August 2011 04:10 PM
எமது பகுதியில் இருக்கும் அமைச்சர்கள் இது குறித்து கவனம் செழுத்த வில்லையா? வோட்டுக்கு மாத்திரம் வரும் இவர்கள் மக்களின் பிரச்சினையை பார்ப்பதில்லையா ?
Reply : 0 0
hamza Tuesday, 09 August 2011 04:43 PM
மர்ம மனிதரே , இவ்வூர் மக்கள் கையில் நீர் அகப்பட்டால், மர்ம மனிதராகிய நீர் மர்மமாகி விடுவீர்..............
Reply : 0 0
imthy Tuesday, 09 August 2011 05:10 PM
பத்திரிகைல சொன்னபடி இது அனைத்துக்கு அரசாங்கமே காரணமானவர்கள்... அவர்களே முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் துப்பாக்கிகளை திரும்பவும் பொது மக்களிடம் ஒப்படையுங்கள்... 119 என்ற அவசரகால உதவியை நிரித்திவிடுங்கள் பொதுமக்களுக்கு உதவவில்லை என்றால் எதக்கு அந்த அவசரசேவை...
Reply : 0 0
ikram Tuesday, 09 August 2011 11:10 PM
இந்த தொல்லை குருநாகள் மாவட்டத்திலும் உள்ளது ,நேற்றிரவு கொபேய்கனை பிரதேசத்தில் அமைந்துள்ள எமது கிராமத்தின் அயலிலும் இந்த மனித நடமாட்டம் இருந்தது.ஊரார் சேர்ந்தும் ஆளை பிடிக்க முடியவில்லை.இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Reply : 0 0
virus detected Wednesday, 10 August 2011 12:06 AM
இது கள்வர்களின் கைவரிசைஆகும்.
Reply : 0 0
mprikaz Wednesday, 10 August 2011 04:56 AM
இது மிக்க மோசமான நிலை. நமது ஊர்களில் தொடர்கிறது இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்ல என்றால் மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
Reply : 0 0
aska, hafshi , sumai Wednesday, 10 August 2011 05:25 AM
ramalan mathathil muslimgaluku kastamthan. idha vaithu parkum pothu muslimgaluku yedirana oru sadhiyahave vilanguhirathu. ithatkuriya mudivuthan yenna????????????? PLZ PRAY UR GOD 4 EVERYONE.....
Reply : 0 0
hameed Wednesday, 10 August 2011 05:55 AM
அந்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் முன் வந்து ஒன்றா செயற்பட்டால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு காணலாம் மக்களுக்கு தைரியமூட்டுவதன் மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப் பட வேண்டும் இவர்களின் பயம்தான் ஆசாமிகளின் தைரியத்திற்கு காரணம்.
Reply : 0 0
Rilsana Wednesday, 10 August 2011 09:09 AM
பொலிஸ் என்ன செய்கின்றது ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
45 minute ago
47 minute ago