2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஷெல்ரன் ரணராஜா: உயரிய கொள்கை வழிநின்ற துணிகர அரசியல்வாதி

Super User   / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் டெய்லி மிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)

ஆகஸ்ட் 11, 2011 இல் ஷெல்டன் ரணராஜாவின் மரணம் அருகிவரும் கொள்கைவழி நின்ற அரசியல் தலைவர்களில் ஒருவரைக் குறைத்துள்ளது. செங்கடகல முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் பிரதி நீதியமைச்சருமான இவர், கொள்கை வழி நின்ற ஒரு துணிகர அரசியல்வாதியாவார்.
சரியென தான் கருதியதற்காக தனது அரசியல் கட்சியின் பெரும்பான்மைக்கு எதிராக துணிந்து நிற்க தயாராகவிருப்பவரை உண்மையில் அருமையாகவே காணமுடியும் ஷெல்ரன் ரணராஜா  இவ்வாறானதொரு மனிதராக இருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து ஷெல்ரன் ரணராஜா வாக்களித்த அந்த அற்புதமான நிகழ்வை 1981 இல் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கொள்கை வழிப்பட்ட துணிச்சலின் ஆவேச வெளிப்பாடாக அது அமைந்தது.

ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 1977 ஜூலை தேர்தலில், 168 இடங்களில் 141 ஆசனங்களை வென்று அமோக வெற்றியீட்டியது. ஜே.ஆர்.ஜயவர்தன அரசியலமைப்பை திருத்தி, பெப்ரவரி 1978 இல் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 8 இடங்களை மட்டுமே பெற்றது. 18 இடங்களை வென்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்க்கட்சியாக, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவரானார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பிரிவினை என்ற கருத்தை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது.

இயல்பாகவே, ஆளும்கட்சியான ஐ.தே.க.வுக்கும் பிரதான எதிர்க்கட்சியான த.ஐ.வி.முன்னிக்கும் இடையில் கசப்புணர்வு காணப்பட்டது. பல அரசியல் மோதல்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான ஒரு நிகழ்வு ஜுலை 1981 இல் இடம்பெற்றது.

முன்னெப்போதும் நடக்காதது

த.ஐ.வி.முன்னணியானது, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரச்சினைக்கு அறிவித்தல் கொடுத்தது. பதிலுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அரசாங்கம் அறிவித்தல் கொடுத்தது. இது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் நடக்காத நிகழ்வாக இருந்தது.

பாணந்துறை நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் நெவில் பெர்ணான்டோவால் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரேரணையில் 36 ஐ.தே.க. உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர். இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அங்கீகாரம் இருந்ததென்று பின்னர் டாக்டர் பெர்னாண்டோ கூறியிருந்தார்.

அக்காலத்தில் ஜே.ஆர்.ஜயவர்தன அதிகாரமிக்கவராக கருதப்பட்டார். ஐ.தே.க.வின் நாடாளுமன்ற குழுவில், நற்பண்பு மிக்க படித்த பலர் இருந்த போதும் சர்வ வல்லமை பெற்ற ஜே.ஆர் ஜயவர்தனவை மீற யாரும் துணியவில்லை. இதனால், நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் கேவலமான நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து ஐ.தே.க. மாறாத கலங்கத்தை தேடிக்கொண்டது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் 1981 ஜுலை 23, 24 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மிகவும் மலினமான கூத்தடிப்புகள் அரங்கேறின.

தொடக்கத்தில் அமிர்தலிங்கம் தனது நிலைப்பாட்டை விளக்க விரும்பி எழுந்தார். உடனே குழப்பம் ஏற்பட்டது. அமிர்தலிங்கத்தின் பேச்சை கேட்க முடியாதவாறு அவருக்கு பல பட்டங்கள் கூறி ஆளும் கட்சியினர் கூச்சலிட்டனர்.

சபாநாயகர் பாக்கீர் மாக்கார் பெர்னாண்டோவின் ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு அமிர்தலிங்கத்தை பேச அனுமதி மறுத்தார். இக்கட்டத்தில் த.ஐ.வி.முன்னணி சபையை விட்டு வெளியேறியது.

இதன்பின் மதவாச்சி நாடாளுமன்ற உறுப்பினரான மைத்தரிபால சேனாநாயக்க ஒரு சட்டப்பிரச்சினையை எழுப்பினார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒழுங்கீனமானது என நிராகரிக்கப்படுவதற்கு  மூன்று காரணங்களை கூறினார்.

'எதிர்க்கட்சித் தவைருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் அதிகாரத்துக்குள் வரவில்லை. இவ்வாறு உலகில் எங்கும் நடக்கவில்லை. இரண்டாவதாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற மரபுக்கமையவே தனது பதவியை வகிக்கின்றார். அவருக்கு நாடாளுமன்றத்தின் நம்பிக்கை தேவையில்லை. அரசாங்கத் தரப்பினரின் நம்பிக்கையும் வேண்டியதில்லை. அவருக்கு எதிர்க்கட்சியினரின் நம்பிக்கையுண்டு. மூன்றாவதாக இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. அவர் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் இருக்கத்தான் போகின்றார்' என அவர் கூறினார்.

எதிர்ப்பு வாக்கு

சபாநாயகர் பாக்கீர் மாக்கார், பிரச்சினையிலிருந்து நழுவும் வகையில் சேனநாயக்கவின் சட்டப்பிரச்சினை காலம் கடந்த எழுப்பப்பட்டுள்ளது என்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் கலவானத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் முத்தேட்டுவேகம, சபாநாயகர், நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்த அரசாங்க தரப்பினரை அனுமதிப்பதாகக் கூறிக் கண்டித்தார். தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

எதிர்தரப்பில் யாரும் இல்லாத நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் தனித்து விவாதிக்கும் வேடிக்கையான நிகழ்வு இலங்கையில் நடந்தேறியது. ஐ.தே.க.வின் சார்பில் அமைச்சர்களோ பிரதி அமைச்சர்களோ பேசவில்லை. பின்வரிசை அங்கத்தவர்கள் கிடைத்த வாய்ப்பை தமது எண்ணம்போல் பயன்படுத்தி கொண்டனர்.

அமிர்தலிங்கத்துக்கும் த.ஐ.வி.முன்னணியின் துரோகத்தனமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டிய தண்டனைகள் பற்றி பயங்கரமான மிரட்டல் பேச்சுக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன சவுக்கால் அடித்தல், காலி முகத்திடலில் வைத்து சுட்டுக் கொல்லுதல், கட்டி வைத்து அடித்தல், கை, கால்களை வெட்டுதல், பேஹரை வாவியில் கட்டிப்போடுதல் என்பன முன்வைக்கப்பட்ட தண்டனை வகைகளில் சிலவாகும்.

இரத்தத்தை உறைய வைக்கும் பழைய தண்டனையை முறை ஒன்றை மீளவும் கொண்டு வருதல் பற்றியும் பேசப்பட்டது. இந்த வகை தண்டனையை துரோகிகளுக்கு எதிராக சிங்கள மன்னர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. தண்டனைக்குரியவரின் கால்கள், வளைத்துப் பதிக்கப்பட்ட இரண்டு கமுகு மரங்களின் நுனியில் தனித்தனியாக கட்டப்படும். கயிறுகள் அறுத்து விடப்படும் போது வளைந்த மரங்கள் நிமிர்ந்து செங்குத்தாக கட்டப்பட்டவர் இரண்டு பகுதியாக கிழிக்கப்படுவார்.

இந்த பிரேரணை மீது உரையாற்றிய ஒரேயொரு அமைச்சர் சௌமியமூர்த்தி  தொண்டமான் ஆவார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் உரையாற்றிய தொண்டமான், நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாக்கியே பேசினார். இவர் தனது உரையின்போது, அமிர்தலிங்கத்தை கேவலப்படுத்துவது  தமிழ் அரசியலில் தீவிரவாதப் போக்கு ஏற்பட வழிவகுக்கும் என தீர்க்கதரிசனமாக உரையாற்றினார்.

ஜூலை 24 இல் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடந்தது. தொண்டமான் வாக்களிக்கவில்லை. இருந்தாலும் இந்த பிரேரணைக்கு எதிராக தனியொரு வாக்களிக்கப்பட்டது. ஐ.தே.க.வின் இந்த பிரேணைக்கு எதிராக வாக்களித்தவர்தான் மதிப்புக்குரிய செங்கடல நாடாளுமன்ற உறுப்பினர் ஷெல்ரல் ரணராஜா அவர்கள். இவ்வாறு செய்தமையால் தான் ஒரு கௌரவமான மனிதன் என்பதை அவர் எடுத்துக் காட்டியமை மட்டுமில்லாமல் தனது கட்சிக்கு அற்ப சொற்ப அளவிலாயினும் கௌரவத்தை மீட்டுக்கொடுக்கவும் செய்தார்.

நடராஜா

பின்வரிசை அங்கத்தவர் இதனால் எரிச்சலூட்டப்பட்டனர். துரோகி, தமிழ்விரும்பி, போன்ற பட்டங்கள் சூட்டப்பட்டன. ஷெல்டன் நடராஜா என சிலர் கூச்சலிட்டனர். இவ்வாறான கூச்சல்களை அவர் அலட்சியம் செய்தார். துணிச்சல் கொள்கையில் உறுதி என்பற்வறை எடுத்துக்காட்டும் வகையில் அவர் கட்சிக்கு எதிராக நின்று பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்.

இந்த நிகழ்வின்பின் ஷெல்ரன் ரணராஜா பற்றிய கணிப்பும் மதிப்பும் இலங்கையின் நல்ல மனிதர்களின் பார்வையில் உயர்ச்சி கண்டது. குறிப்பாக தமிர்கள் மகிழ்ச்சியடையந்தனர். அவரது மரணம்வரை ஷெல்ரன் ரணராஜா தமிழ் மக்களிடையே மிகவும் விருப்புக்குரியவராக இருந்தார். அரசியல் கருத்தில் இவர் மத்திய வலது சாரிப் போக்கானவராக இருந்தாலும், இவரது புகழ் ட்ரொட்ஸ்கிஸ்ட்டுக்களான எட்மண்ட் சமரக்கொடி, மெரில் பெர்னாண்டோ  ஆகியோருடன் ஒப்பிடும் வகையில் இருந்தது.

ஷெல்ரன் ரணராஜா கல்கிசை சென். தோமஸ் கல்லூரியின் புகழ்மிக்க பழைய மாணவராவார். இவர் கல்லூரியின் பிரபல விளையாட்டு வீரராகவும் கிரிக்கெட், குத்துச்சண்டை, நீச்சல் ஆகியவற்றில் பரிசில்கள் பெற்றவராகவும் விளங்கினார். இவர் சட்டக்கல்லூரியில் படித்த போது, கல்லூரியின் கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருந்துள்ளனர்.

ஷெல்ரன் ரணராஜா இலாவகமான துடுப்பாட்ட வீரராக இருந்தபோதிலும் தேவையேற்படும்போது துடுப்பை பொல்லைப் போன்று பயன்படுத்தக் கூடியவர். அவர் கண்டியிலிருந்தபோது தொடர்ந்து பலகாலமாக கிரிக்கெட் விளையாடினார். 50 வயதை  தாண்டிய பின்னும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். பல தடவைகளில் அரைச் சதத்தை தாண்டிய இவர் ஒரு தடவை சதமடித்தார்.

இவர் பல வருடங்களாக கண்டி வழக்குரைஞர்கள் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்துள்ளனர். இவர், மத்திய மாகாண கிரிக்கெட் சங்கத்தின் தலைவர், கண்டி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளை பல வருடங்களாக இவர் வகித்துள்ளார். வாழ்வின் பிற்பகுதியில் இவர் கிரிக்கெட்டை விட கோல்ப் விளையாடுவதில் ஆர்வம் காட்டினார். தனது கடைசிக் காலத்திலும் கண்டி வாவியை சுற்றி நடப்பார்.

செங்கடல

சட்டக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்ட பின் ஷெல்ரன் ரணராஜா கண்டியில் வெற்றிகரமான வழக்குரைஞராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். 1960 இல் புதிதாக அமைந்த செங்கடகல தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இவர் அரசியலில் நுழைந்தர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர், 25 மேலதிக வாக்குகள் மூலமே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். வாக்குகளை மீள எண்ணக்கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது தடவையாக வாக்குகள் எண்ணப்பட்டபோது 30 மேலதிக வாக்குகளால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தாராளவாத ஜனநாயகவாதியான இவர், 1964 இல் லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை தேசிய மயமாக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி கூட்டரசாங்கத்தின் முயற்சியை விரும்பவில்லை. லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பான பிரேரணையை எதிர்த்து வாக்களித்த சிறிமா பண்டாராநாயக்காவின் அரசாங்கத்தை சேர்ந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இந்த பிரேரணை ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 1965 இல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.

இதன்பின் சிறிது காலம் இவர் தீவிர அரசியலிலிருந்து விலகி சட்டத் தொழிலில் முழுதாக ஈடுப்பட்டார். டட்லி சேனாநாயக்காவின் மரணத்தை தொடர்ந்து 1973 இல் ஜே.ஆர். ஜயவர்தன ஐ.தே.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின் ஐ.தே.க.வில் சேர்ந்து அரசியலில் ஈடுபடும்படி ஷெல்டனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இவர், செங்கடகல தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1977 பொதுத் தேர்தலில் இவர் பண்டாராநாயக்க குடும்பத்தினரின் நெருங்கிய உறவினரான செல்வாக்குமிக்க அநுரத்த ரத்வத்தையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ரணராஜா 17,972 (57மூ) வாக்குகளை பெற அனுருத்த ரத்வத்தை 12,381 (39.6மூ) வாக்கைப் பெற்றார்.

ஷெல்டன் முதலில் கே.டபிள்யூ. தேவாநாயத்தின் கீழ் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் நிஸங்க விஜேரத்தினவின் கீழ் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1983 இல் தமிழருக்கெதிதான வன்முறையின்போது இவர் முன்யோசனையுடன் செயற்பட்டு கண்டியில் காணப்பட்ட சகல காடையர்களையும் தடுப்புக்காவலில் போடச் செய்தார். கொழும்பு எரிந்து கொண்டிருந்தபோது ஆரம்பத்தில் கண்டி அமைதியாக இருந்தது.

கவலை தரும் வகையில், சக்தி வாய்ந்த கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சரான சிரில் மத்தியூ, ரணராஜாவின் கட்டளையை இரத்துச் செய்தார். தமிழ் எதிர்ப்பு முயற்சி அமைச்சர் என பட்டம் சூட்டப்பட்ட இவர், அடைத்து வைக்கப்பட்ட காடையர்களை விடுதலை செய்தார். ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கண்டி எரியத் தொடங்கியது. மனமுடைந்துபோன ரணராஜா இதுபற்றி பின்னர் ஒரு ஊடகவியலாளருக்கு கூறியிருந்தார்.

வெலிக்கடை

ஜூலை இனக்கலவரத்தை தொடர்ந்து வெலிக்கடையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த  தமிழ் கைதிகள் ஜூலை 25 இல் 35 பேரும், ஜூலை 27 இல் 17 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலைகள் திணைக்களம் நீதியமைச்சின் கீழ் வருவதனால் நீதியமைச்சுக்கு இது நேரடிப் பிரச்சினையாயிற்று. பாதுகாப்பு அமைச்சு சடலங்களை அகற்ற முயன்றபோது நீதியமைச்சு இதை தடுத்து நிறுத்தி விசாரணைக்கு ஒழுங்கு செய்தது. பிரதியமைச்சரான ஷெல்ரன் ரணராஜவும் நீதியமைச்சின் செயலாளர் மேவின் விஜேசிங்கவும் இதில் முனைப்புடன் செயற்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்புக்கு மாற்றப்பட்டனர். இந்த கைதிகளில் பெரும்பகுதியினர் செப்டெம்பர் 1983 இல் நடந்த சிறையுடைப்பின்போது தப்பியோடிவிட்டனர். இதையிட்டு நீதியமைச்சரான நிஸங்க விஜேரத்ன பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இவருக்கு பதிலாக ஷெல்ரன் ரணராஜாவை அமைச்சராக்க வேண்டுமென அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. ஆனால் கொள்கையடிப்படையில் ஷெல்ரன் ரணராஜா இதற்கு உடன்படவில்லை.

எல்.ரீ.ரீ.ஈ.யினர் மே 14 1895 இல் புனித அரசமரத்தின் மீது நடத்திய தாக்குதலும் அநுராதபுரத்தில் சாதாரண பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமையும் நாட்டின் பல பகுதியிலும் ஆத்திரத்தையும் பயத்தையும் தோற்றுவித்தது. சிங்கள மக்களின் ஒரு குழு ஷெல்ரன் ரணராஜாவிடம் சென்று கண்டியிலுள்ள தமிழர்களை முற்பாதுகாப்பு ஏற்பாடாக கண்டியைவிட்டு அகற்ற வேண்டுமென வற்புறுத்தினர். தமிழர்களை அனுப்புவதற்கு பதிலாக அவர்களை இங்கேயே வைத்து பாதுகாப்பது அவர்களின் கடமை என அவர் வந்தவர்களுக்கு விளக்கினார்.

1987 இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையும் தொடர்ந்துவந்த 'சமாதானத்தையும்' ஷெல்ரன் ரணராஜா வரவேற்றார். யூலை 29 ... ஒக்டோபர் 10, 1987 இற்குமிடையில் வன்முறைகள் ஓய்ந்திருந்தன. ஷெல்ரன் ரணராஜா அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினரானராக இருந்தபோதும் தெற்கிலிருந்து வடக்குச் சென்ற நல்லெண்ண தூதுக்குழு ஒன்றுடன் சேர்ந்து செயற்பட்டார்.

சிங்களவர்கள் குழுவொன்று, பிரதானமாக மருத்துவர்கள், யாழ்ப்பாணத்துக்கு ஒரு நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொண்டனர். இந்த விஜயத்தில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்;தை சேர்ந்த டாக்டர் சுனில் ரத்னபிரிய இப்பாகமுவ- தேவசரணவிலிருந்து வண.பிதா. யொஹன் தேவானந்த, தனிப்பட்ட முறையில் பிரதி நிதியமைச்சர் ஷெல்ரன் ரணராஜா ஆகியோரும் வேறு சிலரும் பங்குப்பற்றினர்.  இந்த விஜயத்துக்கான அனுமதி அப்போது குடாநாட்டில் அதிகாரம் பெற்றிருந்த தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து பெறப்பட்டது. இந்த அனுமதியை அந்த நேரத்தில் தமிழீல விடுதலை புலிகளின் பிரதித் தலைவராகவிருந்த கோபாலசாமி மகேந்திரராஜா அல்லது 'மாத்தையா' நேரில் வழங்கியதை நான் நினைத்துப்பார்க்கின்றேன்.

நல்லெண்ண விஜயம்

இந்த நல்லெண்ண தூதுக்குழுவில் தமிழ் மக்களின் துயர நிலையை அங்கீகரித்தவர்களும், தமிழர்களின் பிரச்சினைக்கு நீதி வழங்க கோரியவர்களும் காணப்பட்டனர். ஆயினும் இவர்களுக்கு அருவருக்கத்தக்க அனுபவம் கிடைத்தது.

இராசையா பார்த்தீபன் அல்லது திலீபன் சாகும்வரையான உண்ணாவிரதத்தை தொடக்கியிருந்தார். நல்லூரில் இந்த உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்தபோது  வேறு இடங்களில் பிரச்சினைகள் தோன்றிக்கொண்டிருந்தன. இந்த சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈ. இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தினை வன்முறையில் ஈடுப்பட தூண்டும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நல்லெண்ண தூதுக்குழு வல்வெட்டித் துறை, பருத்தித்துறை, நெல்லியடி ஆகிய ஊர்களுடாக பயணித்தபோது பல விடயங்களை நேரில் காணக்கூடியதாக இருந்தது. இவர்களது உயிருக்கு ஆபத்தான சம்பவங்களும் இடம்பெற்றன. ஆயினும் ஆகவும் மோசமான அநுபவம் இனித்தான் வரவிருந்தது.

இத்தூதுக் குழுவினர் இரண்டு வாகனங்களில் கொழும்பு திரும்பினர். அவர்கள் யாழ்ப்பாணம் - கண்டி வீதி வழியே பல எல்.ரி.ர.ஈ. சோதனைச் சாவடிகள் ஊடாக பயணித்தனர். எல்.ரி.ரி.ஈ.யினரின் வாகனமொன்று இவர்களை பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

இவர்கள் பளையை தாண்டிய சிறிது நேரத்தின்பின் எல்.ரி.ரிஈ. வாகனமொன்று  இவர்களை முந்தியது. ஆனையிறவுக்கு நான்கு மைல் முன்னேயுள்ள இயக்கச்சியை தெற்குத் தூதுக்குழு அடைந்தபோது, எல்.ரி.ரி.ஈ.யினரின் வாகனம் வீதியோரம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டனர்;. ஆயுததாரிகளான எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் இவர்களை நிறுத்தினர்.

தூதுக்குழுவினர் இறங்குமாறு பணிக்கப்பட்டனர். சிலர் முரட்டுத்தனமாக வெளியே இழுக்கப்பட்டனர். பின்னர் இவர்கள் வந்த வாகனத்தை அதனுள்ளிருந்த பொருட்களுடன் எடுத்துக்கொண்டு புலிகள் யாழ்ப்பாண பக்கமாக சென்றனர். நல்லெண்ணத் தூதுக்குழுவினர் இரண்டு மைல் தொலைவிருந்த ஆனையிறவை நோக்கி நடந்தனர். பின்னர் தென்திசையில் பயணித்த பஸ் ஒன்று இவர்களை ஏற்றுக்கொண்டுபோய் பாதுகாப்பாக ஆனையிறவு இராணுவ முகாமில் விட்டது.

உண்மையை உணர்தல்

ஷெல்ரன் ரணராஜா இந்தநிகழ்வினால் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டார். இது பற்றி நான் அவருடன் பேசியபோது அவர் முகத்தில் கவலை தெரிந்தது. ஆனால் கோபத்தை காட்டவில்லை. ஆனால் எல்.ரி.ரி.ஈ, சுதந்திரத்திற்காக போராடும் கட்டுப்பாடு மிக்க அமைப்பு என்ற அவரது மதிப்பீடு தகர்ந்து போயிற்று. நிரந்தர சமாதானம் பற்றிய அவரின் நம்பிக்கையும் நொருங்கிப் போனது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்கீழ் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்கும்படி அழைக்கப்பட்டபோது அவர் அதை ஏற்க மறுத்தற்கு இதுவே காரணமாக இருக்கலாம். ஆளுநர் பதவிக்கு இவரை அமிர்தலிங்கமும் ஆர். சம்பந்தனும் சிபாரிசு செய்ய, ஜனாதிபதி ஜயவர்தன அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால், ஜே.ஆர். கேட்டபோது ஷெல்ரன் மறுத்துவிட்டார்.

ஷெல்ரன் ரணராஜா, 1988 இன் பின் தீவிர அரசியலிலிருந்து விலகிவிட்டார். அதன்பின் அவர் அதனது ஐந்து மகள்கள் கொண்ட குடும்பம், சட்டம், கிரிக்கெட், சமூக சேவை என்பவற்றில் முழுதாக ஈடுபட்டார். இவருடைய மனைவி சந்திரா அரசியலுக்கு வந்து கண்டியின் முதல் பெண் மேயரானார். இவரது மருமகன்களில் ஒருவரான திலின பண்டார தென்னகோன் மத்திய மாகாண சபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் அங்கத்தவராக உள்ளார். ரணராஜா தனது இறுதிக்கட்டத்தில் புற்றுநோயினால் வருந்தினார். இவர் ஆகஸ்ட் 11 இல் தனியார் வைத்தியசாலையில் காலமானார்.

ஷெல்ரன் ரணராஜா, கொள்கைகள், விதிகளுக்கு அமைய விளையாடி ஆக்கபூர்வமான ஓர் இன்னிங்ஸை முடித்துக்கொண்டு பார்வையாளர் அரங்கிற்குத் திரும்பிவிட்டார். இது பொதுவாக நாட்டுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும் துன்பமானது. ஏனெனில் இவரைப் போன்ற இன ஒற்றுமையை விரும்பும் உயரிய பண்பும், துணிச்சலும் உடையவர்கள் இந்நாட்டில் அருகிவருகின்றனர்.

ஷெல்ரன் ரணராஜா ஐ.தே.க. பூத யந்திரத்திற்கு எதிராக  தனித்து நின்று, தனது மனச்சாட்சிக்கும் நம்பிக்கைக்கும் அமைய வீரத்துடன் நாடாளுமன்றத்தில் செயற்பட்ட 1981 ஜூலை 24 ஐ நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்.

DBS Jeyaraj can be reached at djeyaraj2005@yahoo.com

(தமிழில்: ந. கிருஷ்ணராசா)


 


You May Also Like

  Comments - 0

  • Nirmalalraj Friday, 19 August 2011 04:43 AM

    சிறந்த கட்டுரை

    Reply : 0       0

    meenavan Friday, 19 August 2011 01:54 PM

    நீதியான எண்ணம் கொண்ட ஷெல்டன் ரணரஜா போன்றோர் இலங்கை மக்களிடையே எந்த அளவுக்கு உருவாகுகிரார்களோ,அதை பொறுத்தே இலங்கை திருநாட்டின் சுபீட்சம் அமையும்.

    Reply : 0       0

    siva Sunday, 21 August 2011 02:45 PM

    நல்ல கட்டுரை. நல்ல எழுத்தாளர் ஜெயராஜ்

    Reply : 0       0

    Mohamed Razmi Monday, 22 August 2011 10:39 PM

    தற்போதைய 'தலை' களுடன் திரு. ரணராஜா போன்ற ஒரு முதுகெலும்புள்ள அரசியல் தலைவரை ஒப்பிட்டு நோக்கும் போது நமது தலை சுற்றுகிறது. ஐக்கிய இலங்கை என்ற கருதுகோள் வெறும் கானல் நீர் தான்!

    Reply : 0       0

    jampavan Monday, 12 September 2011 03:49 AM

    தமிழர்களின் அரசியலில் மட்டும் அல்ல, இவர் போன்றோரின் இழப்பு நாட்டிற்கே இழப்பு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X