Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 25 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.சஞ்சயன்)
எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும் அதில் கிறீஸ் பேய், கிறீஸ் பூதம், மர்மமனிதர் பற்றிய செய்தி தான். பத்திரிகைகளில் மட்டும் என்றில்லை, வானொலி, தொலைக்காட்சி, இணையங்களிலும் அதே செய்தி தான்.
நாளாந்தம் காலையில் எழுந்ததும் இன்று எங்கே..? என்று கிறீஸ் பேய்களையோ மர்மமனிதர்களையோ தேடுகின்ற அளவுக்கு மனோநிலை மாறிக் கொண்டிருக்கிறது.
முன்னர் போர் நடந்த காலங்களில் கிரிக்கெட் ஸ்கோர் போன்று இழப்புக் கணக்குகளை கேட்டுப் பழகியிருந்தது போல இப்போது கிறீஸ்பேய் பற்றிய செய்திகள் மாற்றமடைந்து வருகின்றன.
கிறீஸ் பேய் என்பது உண்மையில்லை அது வெறும் புரளி தான் என்று அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தாலும், அதையெல்லாம் பலர் காதில் வாங்கிக் கொள்ள தயாராக இல்லை.
முன்னர் போரில் அரசாங்கம் கூறிய இழப்புக்கணக்குகளை மக்கள், எப்படிக் கணித்தார்களோ அது போலவே தான், இந்த விவகாரத்திலும் அரசாங்கத்தின் கூற்றை மக்களில் பலர் நம்பத் தயாராக இல்லை.
மர்மமனிதர்கள் விவகாரத்துக்குத் தீர்வு காணப்படுவதில் அரசாங்கத்தரப்பு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகிறது.
துட்டகெமுனுவின் வாளுக்காக, அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்காக, பன்றி இறைச்சி சாப்பிடாத பெண்களின் இரத்த பூஜைக்காகத் தான் மர்மமனிதர்கள் அலைவதாக பரவும் கதைகளை அடியோடு நிராகரித்துள்ளார் கோத்தாபய ராஜபக்ஷ.
அத்துடன் விடுதலைப் புலிகளையே தோற்கடித்த இராணுவத்தினால் கிறீஸ் மனிதன் விவகாரத்தைக் கையாள்வது ஒன்றும் சிரமமான காரியமில்லை என்றும், ஆனாலும் பொறுமையுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிறீஸ் மனிதன் விவகாரம் இந்தளவுக்கு பூதாகார வடிவெடுத்து மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ள நிலையில், இராணுவத்தினால் அடக்க முடியும், ஆனால் பொறுமையாக இருக்கிறோம் என்றால் அர்த்தம் என்ன?
அரசபடைகளுக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று கூறப்படும் வாதங்களையெல்லாம் பொதுமக்கள் பலர் நம்ப மறுக்கின்றனர். அதற்குப் பல காரணங்கள் உள்ளன.
மர்மமனிதர்கள் என்று கூறப்பட்டு துரத்திச் செல்லப்பட்டவர்களில் பலரும் படை முகாம்களுக்குள்ளேயோ அல்லது பொலிஸ் நிலையங்களுக்குள்ளேயோ தான் தஞ்சமடைந்துள்ளனர். அதைவிட, பொதுமக்களிடம் மர்மமனிதர் என்ற சந்தேகத்தில் பிடிபட்டவர்களில் பலரும் கூட பொலிஸாராக இருந்துள்ளனர்.
இவர்கள் மர்ம மனிதர்கள் தானா அல்லது வெறும் சந்தேகமாக என்பதெல்லாம் ஒருபுறத்தில் இருக்கலாம். ஆனால் பொதுமக்களிடம் சிக்கியவர்கள் அத்தகையவர்கள் அல்ல என்பதை படைத்தரப்போ அல்லது பொலிஸாரோ மக்கள் நம்பும் வகையில் நிரூபிக்கவில்லை.
இன்னொரு பக்கத்தில் மர்மமனிதர்கள் எனக்கூறப்படுபவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இன்று வரை ஆக்கபூர்வமான எதையும் செய்யவில்லை. மர்ம மனிதர்களைத் துரத்திச் சென்ற பொதுமக்களே படையினராலும் பொலிஸாராலும் தாக்கப்பட்டுள்ளனர்.
அரச படைகள் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பதற்கு இவை போன்ற வலுவான பல காரணங்கள் உள்ளன. போருக்குப் பின்னர் அரசாங்கம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதாக கூறிக் கொண்டிருந்தாலும், இப்போது அது பின் நோக்கிப் பயணிப்பதையே காண முடிகிறது.
இரண்டு ஆண்டுகளில் அரசபடைகளும் பொலிஸாரும் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பிய கொஞ்சநஞ்ச நம்பிக்கையைக் கூட மர்ம தனிதன் விவகாரம் சுத்தமாக துடைத்து விட்டதென்றே கூறலாம்.
இந்தநிலையில் தான் வழக்கம் போல இதற்கும் புலிச்சாயம் பூசுகின்ற முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
அரசியல் பின்னணியில் தான் இவையெல்லாம் நடப்பதாகவும் அரசுக்கு எதிரான சதி என்றும் அரசாங்கம் கூறுவதை யாரும் கணக்கில் எடுப்பதாகவே தெரியவில்லை.
முன்னதாக இது சில பாலியல் நோயாளிகளின் வேலை என்று கூறிய அரசாங்கம் இப்போது இதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளதென்று கூறுகிறது.
இதைவிட அரசாங்கத் தரப்பிலுள்ள அமைச்சர்கள் பலரும் இப்போது ஊடகங்களையும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்று குற்றம்சாட்டுகின்றனர். இது நவீன யுகம் என்பதையும் ஒரே நொடியில் எல்லாம் எல்லா இடங்களுக்கும் பரவி விடும் என்பதையும் மறந்து போய் ஊடகங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
இலங்கையின் சனத்தொகையை விடவும் தொலைபேசி பாவனையாளர் எண்ணிக்கை அதிகம் என்கிறது அரசாங்க புள்ளிவிபரம் ஒன்று. இத்தகைய யுகத்தில் தகவல்கள் பற்றிப் பரவி விடுகின்றன.
மர்மமனிதன் விவகாரம் ஒரே நொடியில் உலகெங்கும் சென்று விடுகிறது. இத்தகைய நிலையில் ஊடகங்களைப் பொறுப்புக் கூறச் சொல்வது பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களுக்கு அழகல்ல.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஊடகங்கள் அடக்கி வாசிக்க வேண்டும்- எதுநடந்தாலும் கண்டு கொள்ளக் கூடாது என்பதே அதன் கொள்கையாக உள்ளது. மர்ம மனிதன் விவகாரத்தில் நிறையவே மர்மங்கள் இருப்பதை யாரும் மறைக்க முடியாது.
இந்த விவகாரத்தினால் பாதிக்கப்பட்டு நிம்மதியிழந்து நித்திரை கொள்ள முடியாத நிலையில் இருப்பது தமிழர்களும் முஸ்லிம்களுமே அதிகம்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது, இனி மக்கள் நிம்மதியாக வாழலாம் என்று கூறிய அரசாங்கத்தினால் மர்மமனிதர்கள் பற்றிய அச்சதில் இருந்து மக்களை விடுவிக்க முடியாது போனதேன்? இது மற்றொரு கேள்வி.
வெறுமனே அப்படி ஒன்றும் இல்லை என்று கூறிகொள்வதால் மக்கள் நிம்மதியடையப் போவதில்லை. அதற்காக காலம் கடந்து விட்டது. தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மர்ம மனிதர்கள் விவகாரத்தில் அரசதரப்பு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களின் மீது கோபத்தை வெளிப்படுத்துவது மக்களிடத்தில் இருந்து மேலும் மேலும் அந்நியப்படுத்திவிடும். .
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனத்தைக் களைவதற்கு உருப்படியான நகர்வுகளை எடுக்காமல் அரசாங்கம் சப்பை நியாயங்களை கூறுவதாகவே அவர்கள் கருகிறார்கள்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது பிளவுகளை மேலும் வலுப்படுத்தவே செய்கிறது.
கிழக்கில் தொடங்கிய இந்த பயங்கரம் மலையகம், புத்தளம் என்று பரவி தற்போது வடக்கே வன்னி, யாழ்ப்பாணத்திலும் கூடப் பரவி விட்டது.
அவசரகாலச் சட்டத்தை நீடிக்கவே, படையினரை நிரந்தரமாக நிலை கொள்ளச் செய்வதற்கே அரசாங்கம் இதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் அரசாங்கமோ அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கெல்லாம் இது தேவையில்லை- தாம் நினைத்தால் எதையும் செய்வோம் என்று கூறுகிறது. ஆனாலும் இதுபோன்ற பேச்சுக்களின் மூலம் மக்களிடத்தில் நம்பிக்கை உருவாக்கப்படவில்லை.
நிலைமைகள் எல்லை கடந்து சென்று விட்ட நிலையில், பயங்கரவாதம், புலிகள் என்றெல்லாம் இப்போது காரணங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
இந்த விவகாரம் எப்படி முளைத்தது- எப்படி வளர்ந்தது என்றெல்லாம் ஆராய்வதைவிட மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையும் பீதியையும் தணிக்க வேண்டியதே அரசின் உடனடிப் பொறுப்பு.
இதன் பின்னணியில் யார் இருந்தாலும் சரி, இது வெறும் மனப்பிரமையாகவோ, மாயையாகவோ இருந்தாலும் சரி, அல்லது திட்டமிட்ட சதியாக இருந்தாலும் சரி, இதன் விளைவுகள் நிச்சயம் அரசாங்கத்தை பாதிப்பதாகவே அமையும்.
இப்போது இல்லா விட்டாலும் என்றோ ஒருநாள் இந்த விவகாரம் அரசாங்கத்துக்கு ஒரு கரும்புள்ளியாகவே அமையப் போகிறது. இதேநிலை நீடிக்குமானால், தமிழ், முஸ்லிம் மக்களில் ஒரு பகுதியினரிடம் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையைக் கூட அரசாங்கம் தொலைத்து விடும் நிலை ஏற்படலாம். வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் இதன் தாக்கத்தை அரசாங்கம் உணரவும் கூடும்.
ஓட்டமாவடி ஜெமீல் Friday, 26 August 2011 05:06 PM
நாட்டின் தற்போதைய நிலைவரத்தை கண்ணாடி போட்டுக் காட்டும் ஒரு கட்டுரை. ”வரப்போகும் உள்ளூராட்சித் தோ்தலில் இதன் தாக்கத்தை அரசாங்கம் உணரும் ” என்பது நிதர்சனம்.
Reply : 0 0
rakkish Friday, 26 August 2011 05:22 PM
யதார்த்தமான அலசல்... தொடர்க உங்கள் சேவை...
Reply : 0 0
Thajudeen Friday, 26 August 2011 05:33 PM
சபாஸ்! நீங்கள் சரியாகவே அனைத்தையும் எழுதி இருக்கிறீர்கள். மக்கள் மத்தியில் இப்போதைய நிலை என்ன என்பதை புரிந்து நீங்கள் சரியாக எழுதிய உங்களுக்கு எமது நன்றிகள்! பாராட்டுக்கள்!!!
Reply : 0 0
Ratnam Ganesh Friday, 26 August 2011 05:36 PM
எல்லாம் மாயை என்று எவ்வளவு நாளைக்கு சொல்லிக்கொண்டிருக்க முடியும்?
Reply : 0 0
Rizadh Rock Kalmunai Friday, 26 August 2011 10:03 PM
ஆமாம் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் இந்த அரசுக்கும் அதற்கு சார்பானவர்களுக்கும் ... (பொறுத்திருந்து பார்ப்போம்)
Reply : 0 0
ram Friday, 26 August 2011 10:41 PM
நல்லது நடக்கட்டும், தேர்தல் கணணி முறையில் நடந்தால் வரவேற்கத்தக்கது.
Reply : 0 0
Alga Saturday, 27 August 2011 01:34 AM
hats of for the writer!!!
Reply : 0 0
tamilan Saturday, 27 August 2011 02:59 AM
தமிழ் மிரரின் சகோதர பத்திரிகைகளிலும் இதை பிரசுரியுங்கள்.
Reply : 0 0
zamroodh farook Saturday, 27 August 2011 07:53 AM
இப்போதாவது மக்கள் தெளிவுபெறக்கூடாதா ? வரும் உள்ளூராட்சி தேர்தலில் வாக்குகளை யாருக்கு போட வேண்டுமென்பதை உணருங்கள்!
Reply : 0 0
reemco Saturday, 27 August 2011 07:46 PM
ஷம்ரூத் பாரூக், நீங்கள் சொல்லுங்கள்? யாருக்கு வாக்குப்போட்டால் மர்ம மனிதனை வெல்லலாம்? ஹீ.... ஹீ... ஹீ....
Reply : 0 0
ashraff Sunday, 28 August 2011 11:44 PM
யாரை நம்புவது???????????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
52 minute ago
54 minute ago