Super User / 2011 செப்டெம்பர் 01 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.சஞ்சயன்)
ராஜிவ்காந்தி கொலை வழங்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் செப்டெம்பர் 9ஆ ம் திகதி தூக்கிலிட சட்டென்று எடுக்கப்பட்ட முடிவு தமிழ்நாட்டில் ஒரு பெரும் புயலைத் தோற்றுவித்து விட்டது.
மூவரையும் தூக்கிலிட எடுக்கப்பட்ட முடிவு நிச்சயம் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது மோசமானதொரு எதிர்விளைவையே ஏற்படுத்தி விட்டது என்பதே உண்மை.
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் புதுடெல்லியில் இருந்து நகர்த்தப்பட்ட காய்கள்இ இப்போது புதுடெல்லியையே நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளன.
அதுமட்டுமன்றி ஜெயலலிதாவின் செல்வாக்கு வளர்வதைத் தடுப்பதற்கு, இந்த விவகாரத்தைப் பயன்படுத்த முயன்ற இந்திய மத்திய அரசு- பொல்லைக் கொடுத்த அடிவாங்கியது போதாதென்று ஜெயலலிதாவின் செல்வாக்கை இன்னும் உயர்த்தி விட்டுள்ளது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரில் பேரறிவாளன் மட்டும் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஏனைய இருவரான முருகனும், சாந்தனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இந்த மூவருக்காகவும் குரல்கள் ஓங்கி ஒலிப்பது கவனிக்கத்தக்கது. இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் கூட இத்தகைய அழுத்தம் கொடுக்கப்படவில்லை.
இலங்கை அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இந்திய மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் தான், இந்திய அரசு இவர்களின் மரணதண்டனையை உறுதி செய்தது.
இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், செப்டெம்பர் 9ஆ ம் திகதி அவர்களை தூக்கிலிடுமாறும் மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டிருந்தது.
கருணை மனுவை 11 ஆண்டுகளாக கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு திடீரென இந்த முடிவை எடுத்தது. நீண்டகாலம் அது இழுத்தடிக்கப்பட்டதற்கு எந்தக் காரணமும் இல்லாத போதும், திடீரென அது நிராகரிக்கப்பட்டு அவசரமாகத் தூக்கில் போடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கு காரணங்கள் இருந்தன.
இலங்கை விடயத்தில் மெத்தனப் போக்குடன் இருந்த மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விடாப்பிடியாக அழுத்திப் பிடிக்கத் தொடங்க, அதற்குக் காரணம் தமிழ்நாடே என்பதால் ஜெயலிதாவை இக்கட்டான நிலைக்குள் சிக்க வைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
மூவரினதும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் செல்வாக்கை வீழ்த்தி விடலாம் என்பது இந்திய மத்திய அரசாங்கத்தின் கணிப்பாக இருந்தது.
ஏனென்றால் இப்போது இலங்கைத் தமிழர் ஆதரவு சக்திகள் ஜெயலலிதாவின் பின்னால் அணி திரளத் தொடங்கியுள்ளன. இது இலங்கைக்கும் பிடிக்கவில்லை. இந்தியாவுக்கும் பிடிக்கவில்லை. இது காங்கிரசுக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வந்தது.
கடந்த தேர்தலில் இலங்கைத் தமிழர் ஆதரவு சக்திகளின் பிரசாரங்கள் காங்கிரசுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தியிருந்தது. எனவே ஜெயலலிதாவை திட்டமிட்டு பழிவாங்க நினைத்தது மத்திய அரசு.
அதைவிட இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற போராட்டங்களும் அழுத்தங்களும் மத்திய அரசுக்கு அதிகரித்து வந்த நிலையில், அதைத் திசை திருப்புவதற்கு வேறொரு விவகாரம் தேவைப்பட்டது. இங்கு தான் அவர்களுக்கு இந்த மரணதண்டனை விவகாரம் வாய்ப்பாக இருந்தது.
11 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த கருணை மனுவைத் தேடிப்பிடித்து அதை நிராகரித்து விட்டதாக பதில் அனுப்பியது மத்திய உள்துறை அமைச்சு.
அதன்பின்னர் மெல்ல மெல்ல எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கின. ஆனால் மூவருக்கும் மரணதண்டனைக்கான திகதி குறிப்பிட்டதும் தமிழ்நாடு கொந்தளிக்க ஆரம்பித்தது..jpg)
அரசியல் கட்சிகள் மட்டத்தில் இந்த விவகாரம் ஏற்படுத்திய கொந்தளிப்பை விட, சமூக மட்டத்தில் ஏற்படுத்திய கொந்தளிப்பே முக்கியமானது. அது எல்லா அரசியல்கட்சிகளையும் மிரள வைத்து விடதென்றால் மிகையில்லை.
காஞ்சிபுரத்தில் மரணதண்டனைக்கு எதிராக செங்கொடி என்ற இளம்பெண் தீக்குளித்து உயிர்துறக்க தமிழ்நாடு எங்கும் போராட்டங்கள் வெடித்தன.
சட்டக்கல்லூரி மாணவர்கள் எல்லா இடங்களிலும் ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு, வீதி மறியல் என்று போராட்டங்களில் குதித்தனர். மத்திய அரசு அலுவலகங்களை முடக்க முயன்றனர்.
அரசியல் கட்சிகள், மனிதஉரிமை அமைப்புகள் தமிழ் நாட்டில் பிரதான நகரங்களில் எல்லாம் போராட்டங்களில் ஈடுபட்டனர். திருச்சி, மதுரை சேலம், என்று பல இடங்களிலும் தீக்குளிப்பு முயற்சிகள் நடந்தன.
அதைவிட சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று பெண் சட்டத்தரணிகள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். அது சேலம் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் பரவியது.
தமிழ்நாடு முழுவதும் உணர்ச்சிப் பெருக்காக மாறிக் கொண்டிருக்க, தமிழ்நாடு அரசு இதற்கு உதவ வேண்டும் என்ற அழுத்தங்கள் தீவிரமடைந்தன.
இந்தக் கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெறும் வகையில் ஒரு மேன்முறையீடு செய்யப்பட்டது. அதில் வாதாட இந்தியாவின் முன்னணி சட்டநிபுணர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டவர்கள் கொண்டு வரப்பட்டனர். முன்னதாக சட்டமன்றத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கை விரித்திருந்தார் ஜெயலலிதா.
அது ஒரு தரப்பினரை பொறுமையிழக்கவும், நம்பிக்கையிழக்கவும் செய்தாலும், அவரை தமது வழிக்குக் கொண்டுவர முடியும் என்றே பெரும்பாலானோர் கருதினர்.
இந்தநிலையில் கடந்த செவ்வாயன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆரம்பித்து நடந்து கொண்டிருக்க- பெரும்பாலும் மரணதண்டனை தற்காலிகமாக பிற்போடப்படும் என்பது உறுதியானது.
அந்தக் கட்டத்தில் தான் சட்டமன்றத்தில் ஜெயலலிதா அதிரடியாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூவரினதும் மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டும் என்பது அந்தத் தீர்மானம். அதனை ஒருமனதாக நிறைவேற்ற உதவ வேண்டும் என்றும் அவர் கோரினார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எந்தத் தரப்பினரும் எதிர்க்காமலேயே அது நிறைவேறியது. ஆனால், சட்டமன்றத்துக்குள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ்காரர்கள் வெளியே வந்ததும் நீதிமன்றத் தீர்ப்பில் சட்டமன்றம் தலையிடக் கூடாது என்றும், அது மோசமான முன்னுதாரணமாகி விடும் என்றும் முழங்கியது தான் வேடிக்கை. அது மட்டுமன்றி சட்டமன்ற தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்கின்றார் மத்திய சட்ட அமைச்சர்.
இன்னொரு காங்கிரஸ் தலைவரான இளங்கோவன் சொல்கிறார், ராஜீவ்காந்தி உயிருடன் திரும்பி வந்தால் தான் இவர்களுக்கான மரணதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்கலாம் என்று.
அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ராஜீவ்காந்தி உயிரோடு வந்தாலும் இவர்களுக்கு ஆயுள்தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு அவர்களுக்கு வன்மம் தலைக்கேறியுள்ளது.
காங்கிரஸ்காரர்களுக்கு இந்த விடயத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மரணதண்டனைக்கு ஆதரவாக அவர்கள் பிரசாரம் செய்தனர்.
குறிப்பாக தங்கபாலு போன்றவர்களின் கருத்து தமிழ் உணர்வாளர்களுக்கிடையே பெரும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது.
அதேவேளை திமுக தலைவர் கருணாநிதியும் இந்த விடயத்தில் மூவருக்கு ஆதரவு தெரிவிக்கப் போய் மூக்குடைபட்டுக் கொண்டது தான் மிச்சம்.
மூவரையும் விடுவிக்க வேண்டும் என்று அவர் கடிதம் எழுதினார். அறிக்கை வெளியிட்டார். ஆனால் அதே கருணாநிதியின் ஆட்சியில் தான் இந்த மூவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றலாம் என்று உறுதி செய்யப்பட்டது.
அப்போதே கருணாநிதி மரணதண்டனையை உறுதி செய்யாதிருந்திருந்தால், இப்போது மரணதண்டனை வரை இவர்கள் சென்றிருக்கத் தேவையில்லை. இதையெல்லாம் அதிமுகவும் தோழமைக் கட்சிகளும் தோலுரித்துக் காட்ட கருணாநிதி வெட்கிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் ஒரு காலத்தில் ராஜிவ்காந்தி கொலை விடயத்திலும் சரி, புலிகள் விடயத்திலும் சரி கடும் போக்கைக் கடைப்பிடித்த ஜெயலலிதா இப்போது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை நாடி பிடித்து அறிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப காய்களை நகர்த்துகிறார்.
உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்பது தெரிந்த நிலையில் சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அது தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்போது தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுனர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது. ஆளுனரும், ஜனாதிபதியும் தான் மரணதண்டனை குறித்த தீர்மானத்தை மீள் உறுதி செய்ய வேண்டும்.
இந்தக் கட்டத்தில் ஒரு சிக்கல் முளைத்துள்ளது. தமிழ்நாட்டின் ஆளுனராக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பழுத்த காங்கிரஸ்காரர்.
அவர் பதவியேற்றதும் அவர் முன்பாக நீட்டப்படும் முதல் ஆவணமே சட்டமன்ற தீர்மானமாகத் தான் இருக்கும். அவர் இந்தத் தீர்மானத்தை கருத்தில் எடுப்பாரா- கணக்கில் எடுக்காமல் தூக்கியெறிந்து விடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இந்தத் தீர்மானத்தை ஆளுனரும், ஜனாதிபதியும் நிராகரித்து விட்டால் இன்னொரு முறை எதுவும் செய்ய முடியாது என்கிறார் ஜெயலலிதா.
ஆனால் ஜெயலலிதாவுக்கு அதிகாரம் உள்ளது. சட்டமன்றத்துக்கு அதிகாரங்கள் உள்ளன என்கின்றன எதிர்க்கட்சிகள்.
இவை எல்லாமே மிகப்பெரிய அரசியலமைப்பு சிக்கல்களை உருவாக்கி விட்டுள்ளது. இப்போது இந்த விவகாரம் பல சட்டச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கப் போகிறது போலத் தெரிகிறது.
இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சுமுகமான வழியைத் தெரிவு செய்ய மத்திய அரசு தவறினால் ராஜிவ்காந்தி கொலைவழக்குக் கூட மீள் விசாரணைக்கு வரக் கூடும்.
அது முக்கிய புள்ளிகள் பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனர் முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் சிலர்.
எவ்வாறாயினும் மூவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றுவதில் மத்திய அரசு இன்னமும் உறுதியாகவே உள்ளது. இந்த உறுதியை கடைசிவரை கடைப்பிடித்து தண்டனை நிறைவேற்றுவதால் காங்கிரஸ் கட்சியினர் பழிக்குப்பழி தீர்த்து விட்டதாக திருப்தியடையலாம். ஆனால் அது தமிழ்நாட்டில் காங்கிரசின் பாரிய பின்னடைவுக்கு வழிகோலும் போலவே தெரிகிறது.
மூவினதும் உயிரைக் காக்க தமிழ்நாடு கிளர்ந்தெழுந்துள்ளதைப் பார்க்கும் போதுஇ ராஜிவ்காந்திக்காக இன்று அனுதாபப்படுவோரை விட இவர்களுக்காக அனுதாபப்படுவோர் அதிகம் போலுள்ளது.
தமிழ்நாட்டில் குட்டையைக் குழப்ப முயன்ற மத்திய அரசு, தானும் கெட்டுப் போனது மட்டுமன்றி கூட்டணியில் உள்ள திமுகவையும் சேற்றில் தள்ளி விட்டதுடன் ஜெயலலிதாவின் செலவாக்கை வளர்த்து விட்டது தான் மிச்சம்.
2 hours ago
6 hours ago
6 hours ago
ROSHAN Friday, 02 September 2011 09:45 AM
காங்கிரெஸ் ஒழிக ஜெயலலிதா அம்மா.....மா....மா....மா வாழ்க வளமுடன் .
Reply : 0 0
R.M.J Friday, 02 September 2011 10:07 AM
மூவருக்கும் தூக்குத்தண்டனை நிறுத்தப்பட்டால், தமிழ் தேசியவதாதிற்கு ஆதரவாக பிற்கால அரசியல் வாதிகளால் ராஜீவ் காந்தியின் கொலையும் பொது மன்னிப்பும் நியாயபடுத்தப்படலாம், ஆகவே இது மூவரின் உயிர் என்பதை விட , தமிழ் தேசியவாதிகளின் கொள்கை அரசியல் திருப்புமுனை என்றே கூறுவேன்.
Reply : 0 0
ஓட்டமாவடி ஜெமீல் Friday, 02 September 2011 12:16 PM
என்னதான் இருந்தாலும் ஒரு நாட்டின் தலைவரை கொன்றவர்களை மன்னிக்க எந்த தலைவரும் முன்வரமாட்டார்கள். ஏனெனில் நமக்கும் இவர்களை போன்றவர்களை விட்டால் ஆபத்து நேரலாம் என்ற பயமாகும்.
Reply : 0 0
bzukmar Friday, 02 September 2011 01:05 PM
வளர்ந்துள்ள தமிழ் நாடு மக்களின் செல்வாக்கினை வைத்து, தமிழ் மக்களின் நாடு என்று ஜெயா அம்மா பிரகடனம் செய்வாரா?
Reply : 0 0
xlntgson Friday, 02 September 2011 10:29 PM
பொலீஸ் அக்கிரமம் செய்தது என்று கூறி வாதாடி வெல்ல முடியவில்லை, இப்போது வழக்கை புதியதாக விசாரிக்க வேண்டுமாம். கருணை என்ற பெயரால் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தவே பார்க்கின்றனர்! இந்தியப் படை செய்த கொடுமையாம். அகதியாகப் போய் உண்ட வீட்டுக்கு துரோகமாக செயல் படும் இவர்கள் இந்திரா காந்தி கொலை வழக்கு வழக்கறிஞர் ராம்ஜேத்மலானியை பிடித்து இருக்கின்றனரே! இந்திரா எவ்வளவு உதவி செய்தார் இவர்களுக்கு?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago