Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 10 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.சஞ்சயன்)
ஜெனிவாவில் எதிர்வரும் 12ஆம் திகதி தொடங்கப் போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 18ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு சவால் நிறைந்த ஒன்றாகவே அமையும் என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தொடரில் விவாதங்கள் ஏதும் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையிலே, அரசாங்கம் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்தமாதம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் ஏதும் கொண்டு வரப்படுவதற்கு முன்னறிவிப்புகள் ஏதும் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாதுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடர்களிலேயே இலங்கைக்கு நெருக்கடிகள் ஆரம்பித்து விட்டது.
குறிப்பாக, மேற்குலக நாடுகள் இந்த விடயத்தில் இலங்கைக்கு கடும் அழுதங்களைக் கொடுத்து வருகின்றன.
கடந்த கூட்டத்தொடரிலேயே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருந்தது. அப்போதே இலங்கைக்குச் சாதகமில்லாத போக்கு வெளிப்படத் தொடங்கியிருந்தது.
ஆனால், கடைசிக்கட்டத்தில் இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும் வரை பொறுத்திருக்குமாறு காலஅவகாசம் கோரிப் பெற்றிருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பர் 15ம் திகதிக்குள் வெளியிடப்பட வேண்டிய நிலையில், அதற்கு முன்னதாகவே அதனை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிறது அமெரிக்கா.
இது தொடர்பாக அமெரிக்க முன்வைத்த யோசனையை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனாலும் அமெரிக்கா அந்தப் பிடியில் இருந்து விலகுவதாகத் தெரியவில்லை.
இப்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவாவில் முன்வைக்கலாம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் 19 ஆவது கூட்டத்தொடரில் அதுபற்றி விவாதிக்கலாம் என்கிறது அமெரிக்கா. ஆனால் இலங்கை அரசோ அதனை ஜெனிவாவுக்குக் கொண்டு செல்லமுடியாது என்கிறது.
இப்போது ஒரு வழியாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி சுருக்கமாக விபரிக்கலாம் என்று கூறியுள்ளது அரசாங்கம். அதுவும் இப்போது இல்லை, அடுத்த ஆண்டு மார்ச் மாதக் கூடத்தொடரில் தான் என்கிறது அரசாங்கம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவோ அதபற்றி விவாதம் நடத்தவோ அரசாங்கம் தயாராக இல்லை. காரணம் அது இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தி விடும் என்ற அச்சம் தான்.
அதைவிட இன்னொரு விவகாரமும் இதற்குள் முடிச்சுப் போடப்பட்டுக் கிடக்கிறது.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை வெளியாகி பல மாதங்களாகி விட்டன. ஆனால் அதன் மீதான மேல் நடவடிக்கை என்னவென்று இதுவரை எந்த தகவலும் இல்லை. அறிக்கையை வெளியிட்ட பின்னர் பான் கீ மூன் தன் கையில் ஏதுமில்லை என்று கையை விரித்து விட்டார்.
ஆனால் அவர் அதனை ஐ.நா பாகாப்புச் சபைக்கோ அல்லது மனிதஉரிமைகள் பேரவைக்கோ மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்திருக்க முடியும். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. அதை அவர் இன்னமும் செய்யவில்லை.
தன் கையில் எதுவுமில்லை என்று கூறும் பான் கீ மூன் அதை மேல் நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரம் படைத்த சபைகளுக்கு அனுப்பாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி இருக்கத் தான் செய்கிறது.
இதுபற்றி ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்களிடம் கேள்வி கேட்டால், 'இலங்கை அரசின் பதிலுக்காக காத்திருக்கிறார், மேல் நடவடிக்கை பற்றி ஆராய்கிறார்' என்று தான் பதில் கூறுகின்றனர்.
இலங்கை அரசோ அது ஐ.நாவின் அறிக்கையல்ல, மூன்று பேர் தயாரித்த அந்த அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிறது.
இந்தநிலையில், இலங்கை அரசுக்குச் சார்ப்பாக பான் கீ மூன் நடந்து கொள்வதான விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இன்னர்சிற்றி பிரஸ் போன்ற ஊடகங்கள் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்களை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், இதுபற்றி கேட்காமல் இருப்பதில்லை. அதற்கு அவர்களும், மேல் நடவடிக்கை குறித்து ஆராய்கிறார் என்று கூறிக் கூறியே களைத்து விட்டனர்.
ஆனால் பான் கீ மூன் எந்தவொரு மேல் நடவடிக்கையையும் விரும்பவில்லை போலவே தெரிகிறது. அவரிடம் இலங்கை விடயத்தில் முன்னர் இருந்த கடும்போக்கு இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
எனவே அவர் மூலம் ஐ.நாவின் எந்தவொரு சபைக்கும் இந்த அறிக்கை வரப் போவதில்லை என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது. இதனை அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளும் உணர்ந்து கொண்டிருக்காது என்று கருத முடியாது.
இந்தக் கட்டத்தில் தான் அந்த அறிக்கையை ஐ.நாவுக்குக் கொண்டு வரும் மறைமுக நிகழ்ச்சி நிரல் ஒன்றை மேற்குலகம் முன்னெடுப்பதாகத் தெரிகிறது.
இலங்கை அரசைக் கொண்டே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விவாதத்துக்குக் கொண்டுவர வைத்து, அதன் ஊடாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கை பற்றிய விவாதத்தையும் முன்னெடுப்பதே மேற்குலகின் திட்டம் போலுள்ளது.
மேற்குலகின் இந்தத் தந்திரத்தை இலங்கை புரிந்து கொள்ளாமல் இல்லை. அதனால் தான் இலங்கை பற்றிய எந்தவெர்ரு விவாதத்தையும் அது அச்சத்துடன் நோக்குகிறது.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும் வரை பொறுத்திருங்கள் என்று கூறிய இலங்கை அரசு, இப்போது அதனை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்க முடியாது என்றும் கூறுகிறது. இது ஒரு முரண்பாடான விடயம்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் இந்தக் கூட்டத்தொடரில் இல்லாது போனாலும் அடுத்த கூட்டத்தொடரில் கடும் அழுத்தங்களைச் சந்திக்கலாம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பித்து அதுபற்றி விவாதிக்கப்பட்டால், மேற்குலகம் நிச்சயம் பக்கசார்பற்ற சர்வதேச விசாரணைகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும்.
அதுமட்டுமன்றி இயல்பாகவே ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையையும் அது ஜெனிவா வரை இழுத்து வந்து விடும். இதனைத் தவிர்க்கவே இப்போது அரசாங்கம் போராடுகிறது.
அதற்குள் மேற்குலம் குறிப்பாக அமெரிக்கா, இந்தக் கூட்டத்தொடரிலேயே இலங்கையை வழிக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி விட்டது.
கடந்தமாத இறுதியில் கொழும்பு வரவிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் கடந்த மாத இறுதியில் வரமுடியாமல் போனது.
அவர் அடுத்த வாரமளவில் கொழும்பு வரும் வகையில் பயணத்திட்டத்தை மாற்றியத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்தக் கூட்டத்தொடரே அரசுக்கு நெருக்கடியானதாகத் தான் அமையப் போகிறது.
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணிய மறுத்தால், அது வேறு விதமான நகர்வுகளுக்கு இட்டுச் செல்லக் கூடும்.
அமெரிக்காவுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை மீதான சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை கடுமையாக வலியுறுத்தி வருகிறது.
எனவே ஐரோப்பிய ஒன்றியம் மூலமோ அல்லது வேறெந்த நாடு மூலமோ இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்து விடலாம் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளதில் நியாயம் உள்ளது.
இதனால் தான் அரசாங்கம் முழு வேகத்தில் முறியடிப்புச் சமருக்குத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது.
இம்முறை ஜெனிவா கூட்டத்தொடருக்கு அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பெரியதொரு அனுபவம்மிக்க இராஜதந்திரிகள் குழுவே செல்கிறது.
ஜெனிவா கூட்டத்தொடருக்கு அப்பாலும் இலங்கையின் இராஜதந்திரிகள், ‘ஓவர்ரைம்‘ வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இதெல்லாம் இந்தக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்படாமல் தடுப்பதற்கு மட்டுமன்றி, அவ்வாறான தீர்மானங்கள் ஏதும் கொண்டு வரப்பட்டால் அதனை முறியடிப்பதற்கும் தான்.
இலங்கை அரசாங்கம் தன் மீதான தீர்மானங்களை முறியடிக்கின்ற முனைப்பில் இறங்கியுள்ள அதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமோ அழுத்தங்களை எவ்வாறு தீவிரப்படுத்தலாம் என்று முயன்று கொண்டிருக்கின்றன.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக மேற்கு நாடுகளிடம் அரசாங்கம் பிடி கொடுத்து விட்டது. அதனை விக்கிலீக்ஸ் வெளியிடும் தகவல்கள் ஆதாரப்படுத்துகின்றன.
இவையெல்லாம் பிற்காலத்தில் கழுத்தை நெரிக்கும் என்று அரசாங்கம் அப்போது கனவு கூடக் கண்டிருக்காது. அப்போது அரசாங்கத்துக்கு போரில் பெற்ற வெற்றியும் அதுபற்றிய மாயைகளுமே பெரிதாகத் தென்பட்டன.
இப்போது அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் மேற்குலகம் இலங்கையை அழுத்திப் பிடிக்க முனைகிறது.
மேற்குலகின் அழுத்தங்களுக்கு கொஞ்சமேனும் வளைந்து கொடுக்காத கொள்கையை அரசாங்கம் கடைப்பிடிக்குமேயானால் மேற்குலகின் அழுத்தங்கள் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.
ஜெனிவாவில் அடுத்தவாரம் தொடங்கப் போகும் கூட்டத்தொடரை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது பெரியதொரு கேள்வியாகவே இருக்கிறது.
ஒருவேளை அரசாங்கம் சாமர்த்தியமாகவோ அல்லது அதிஸ்டவசமாகவோ இந்தக் கூட்டத்தொடரை சமாளித்தால் கூட, அதைவிடப் பெரிய கண்டமாக அடுத்த கூட்டத்தொடர் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
alga Sunday, 11 September 2011 04:13 PM
hats off for the writer, Excellent post!
Reply : 0 0
karan Sunday, 11 September 2011 09:24 PM
வினை விதச்சவன் வினை அறுப்பான். திணை விதச்சவன் திணை அறுப்பான்.
Reply : 0 0
thivaan Monday, 12 September 2011 12:33 AM
கர்மா, அதன் அர்த்தம் நாம் செய்கிற செயலுக்கு ஏற்ப அதற்கு எதிரான மறு தாக்கம் இருக்கும் . action got reaction
Reply : 0 0
Nirmalalraj Tuesday, 13 September 2011 12:31 AM
சஞ்சயனின் கணிப்பு உண்மையாகிவிட்டதுபோல் தெரிகிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
45 minute ago
47 minute ago